You are here
Home > Article > பாவ்லோ பிரைரே நூற்றாண்டு துவங்குகிறது.. : பேரா.சோ.மோகனா

பாவ்லோ பிரைரே நூற்றாண்டு துவங்குகிறது.. : பேரா.சோ.மோகனா

இன்று மானுடத்தை உய்விக்கப் பிறந்த பேரறிஞரின் பிறந்த நாள். அவர்தான் உலக கல்வியாளர் பாவ்லோ பிரைரே.. இன்றைய கட்டத்தில் மக்கள் அனைவரும் நினைவுகூறப்பட வேண்டிய மனிதர் பாவ்லோ பிரைரேதான்.. அவரின் நூற்றாண்டு இன்றிலிருந்து துவங்குகிறது.


அரசு புதிய கல்விக்கொள்கை என்ற பெயரில், கல்வி என்ற சமூக நீதியை குழிதோண்டிப் புதைக்க திட்டமிட்டு கொண்டு வந்த கல்விக் கொள்கையை விரட்ட வேண்டிய தருணம் இது.

இந்த காலகட்டத்தில் பாவ்லோ பிரைரே கல்விதொடர்பாக கூறுவதை ஒவ்வொருவரும் கருத்தில் கொள்ள வேண்டும்; மக்களிடம் விதைக்க வேண்டும்.

சார்”
ஒரு விரல் தூக்கியபடி எழுந்தான்.
அனுப்பினேன்.
‘சார்”உடனே மற்றொருவன்.
அதட்டினேன்.
நொடிகள் நகர
உள்ளேயே ஈரம்
வகுப்பு முழுதும்
நாற்றமடித்தது
என் அதிகாரம். .(பழ…புகழேந்தி )
இது இன்றைய அதிகார கல்வியின் நிலைமை தானே என்ற உணர்வு உங்களுக்கு உண்டா?
தமிழகம் முழுவதும், 31,173 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கட்டணமில்லாக் கல்விதான். பாடப் புத்தகங்கள் இலவசமே. மிதிவண்டி, செருப்பு, கணினி போன்றவையும் கூட கொடுக்கப்படுகின்றன. அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், கல்வித்தரத்தை உயர்த்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றன. ஆனாலும் கூட ஆண்டு தோறும் மாணவர் சேர்க்கை சரிந்துகொண்டே வருகிறது. பள்ளி மானியக் கோரிக்கை கொள்கை விளக்க குறிப்புகளின்படி, கடந்த 2008–09ல், அரசு ஆரம்பப் பள்ளிகளில், 43,67,000 மாணவர்கள் படித்தனர். இந்த எண்ணிக்கை, ஆண்டுதோறும் குறைந்து , 2012-13ம் ஆண்டில் 36,58,000 . அதேபோலவே , நடுநிலைப்பள்ளிகளில், 50,46,000 இருந்த மாணவர்களின் எண்ணிக்கை, தற்போது, 45,30,000 என குறைந்துள்ளது. கடந்த இரு கல்வியாண்டுகளில், மாணவர் எண்ணிக்கை மேலும் குறைந்துள்ளது.

அதே நேரத்தில், தனியார் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது . கடந்த, 2008-09ல் 34,50,000 இருந்த மாணவர்கள் எண்ணிக்கை, தற்போது 45,40,000 என்று அதிகரித்துள்ளது. மாணவர் எண்ணிக்கை குறைவால், கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் ஏறத்தாழ, 1500 அரசு ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளிகள் மூடப்பட்டன. நடப்பு கல்வியாண்டில், பள்ளிக் கல்வித் துறையால் சேகரிக்கப்பட்ட புள்ளி விபரங்களின்படி, 2000 பள்ளிகளில் 20க்கும் குறைவான மாணவர்கள் மட்டுமே படிப்பதாகவும், 11,000 பள்ளிகளில் இரண்டு ஆசிரியர்களே பணிபுரிந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனால், படிப்படியாக 2000 பள்ளிகளை, அருகாமையிலுள்ள பள்ளிகளுடன் இணைப்பதற்கான ஆலோசனையில் கல்வி அதிகாரிகள் இறங்கியுள்ளனர் என்ற மனதை நெருடும் தகவலோடு பாவ்லோ பிரையரைப் பற்றி அறிந்து கொள்வோம்.

கல்விச் சூழல் என்பது தற்போது ஒரு மோசமான சூழலை எட்டியுள்ளது. பணம் உள்ள்வர்கள் சிறந்த கல்வியை வாங்க இயலும் என்ற கருத்தோட்டம் நிலவும் காலமாகியுள்ளது.. இல்லாதவர்கள் இரண்டாம் தர கல்வியைத்தான் பெற இயலும் எனற எண்ணம் மேலோங்கியுள்ளது. அரசுப்பள்ளிகளின் மேல், அங்குள்ள ஆசிரியர்கள் மேல் பொதுமக்களுக்கு நம்பிக்கை இல்லை.. இதற்குக் காரணம் நமது அரசும், அரசியல்வாதிகளும் கொள்கைககளும் கூட . கல்வி ஒரு நாட்டின் அடிக்கல், அதுதான் அந்நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயம் செய்யும். மக்களுக்கு கல்வி என்பதை அரசு இப்போது வியாபாரமாக ஆக்கியுள்ளது. . கல்வி என்பது ஒருவரை மனிதனாக மாற்றம் செய்து அறிவாற்றல் தொழில்நுட்பம் வழி நாட்டை முன்னெடுத்து செல்லும் என்பது போய் அதன் வழி எப்படி பணம் செய்வது என்பதுதான் நோக்கமாக உருவாகியுள்ளது. கல்விக்காக ஒரு தரமான கட்டமைப்பு இருப்பினும், அதன் வழி உருவாக்கப்படும் கல்வியின் தரம் கேள்விக்குறியாகி வருகிறது

“அர்த்தமுள்ள மனிதப் பேச்சு உலகை மாற்றும்” என்கிறார் கல்வியாளர் பாவ்லோ பிரையர்
“கல்விதான் ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான ஒரே ஆயுதம்” – பாவ்லோ பிரையர்.


எந்த ஒரு ஒடுக்குவதற்காக பிறப்பிக்கப்படும் உத்தரவும், ஒடுக்கப்பட்டவர்கள் ஏன் என்று கேள்வி கேட்க அனுமதிப்பதில்லை…
மனிதனின் இருப்பு என்பது மௌனத்தால் கட்டப்படவில்லை … – இப்படி கல்வியைப் பேசிய பாவ்லோ பிரைரெயின் நூற்றாண்டு இன்றிலிருந்து துவங்குகிறது. ஆம். இன்று பாவ்லோ பிரையரின் பிறந்த நாள் (செப்டம்பர் 19)


இன்றைய கல்வி முறை “ வங்கி கல்வி முறை கல்வியாக” உள்ளது என்கிறார் பாவ்லோ பிரையரே. வங்கியில் எவ்வளவு பணம் ஒருவர் வைத்திருக்கிறாரோ, அவ்வளவு பணமே அவர் எடுக்க முடியும். அது போல் ஆசிரியர், தான் சேகரித்து வைத்துள்ள தகவல்களை எடுத்துக் கூறுதல் மட்டுமே அவரது கடமை. எந்த அளவு மாணவனுக்கு சென்று சேர்கிறது என்பதற்கு இதில் எந்த உத்தரவாதமும் இல்லை. மொத்தத்தில் இன்றைய கல்வி ஒரு ஒடுக்குமுறைக்கான கருவி” என்கிறார். பாவ்லோ பிரையரே .


இன்றுள்ள ஆசிரியர்களில் எத்தனை பேருக்கு பாவ்லோ பிரையரைப் பற்றித்தெரியும் ? என்ற வினாவோடு பிரையருடன் உரையாடுவோம்.

இன்று உலகத்தின்,ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வியாளர், 20ம் நூற்றாண்டின் மிகச் சிறந்த கல்வியாளர் பவுலோ ரெகுலசு நெவ்சு ஃபிரைரே (Paulo Reglus Neves Freire) என்று அழைக்கப்படும் பிரேசிலிய கல்வியாளர் பாவ்லோ பிரையரே.. பிரேசில் நாட்டின் ரெசிப் என்னுமிடத்தில் 1921, செப்டம்பர் 19 ஆம் நாள் பிறந்தார். இவரது பெற்றோர் சுமாரான வாழ்க்கை நடத்திவந்தனர்.ஆனால் இதனை எல்லாம் தாண்டி பின்னாளில் பிரையரே ஒரு கல்வியாளர், கடவுள் மறுப்பாளர், தத்துவவாதி, மற்றும் வழக்குரைஞர் என பல்துறை வித்தகர் ஆனதுதான் அவரின் படிப்பும், விவாதமும், சமூக நோக்கின்படி செயல்பட்டதுமே. .


பாவ்லோ பிரையரின், உலகப்புகழ் பெற்ற புத்தகம் “ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்கான கல்வி”( Pedagogy of the Oppressed) . இதில் கற்றல் முறைகளின் , விமரிசனத்தை வர்க்கம் எப்படி கல்வியைக் கொண்டுசெல்கிறது என்பதை மிகத் தெளிவாக வைக்கிறார். இதுதான் உலகிலுள்ள கல்வி முறைக்கான மிகச் சிறந்த அடிப்படை விமரிசனங்களில் ஒன்றாக கருதப்படுகிறது,.


1930ம் ஆண்டு என்பது உலக பொருளாதார மற்றும் சமூக மாற்றத்தின் முக்கிய சூழல்., அப்போது இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த காலகட்டம். பிரேசிலில் புரடசியும் நடந்தது. பிரையரின் குடும்பம் வறுமையில் வாடியது. பாவ்லோ பிரையருக்கு வறுமையும், பட்டினியும் மிகவும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள். வறுமையினால் தொடர் பட்டினிதான் எப்போதும் அவரைப் பாடாய் படுத்தியது. அவரது குடும்பம் குறைந்த செலவில் வாழக்கூடிய ஊரான ஜாகோபோடா டோஸ் குவாராப்பீஸ் (Jaboatão dos Guararapes ) நோக்கி நகர்ந்தது.

பிரையரின் தந்தையின்இறப்பு 1934,அக்டோபர் 31 ல் நிகழ்ந்தது. குடும்பமே நிராதரவாய்.. !அதனால் பாவ்லோ பிரையரின் கல்விக்கு 4 ஆண்டு காலம் சிறை தண்டனை ஏற்பட்டது. . அதாவது அவர் பள்ளி செல்ல முடியாத நிலைமை. பிரையரின் சமூக வாழ்வியல் என்பது, அவரின் வீட்டை சுற்றியுள்ள ஏழைக்குழந்தைகளுடன் கால் பந்து விளையாடுவது மட்டுமே.. இதுவே அவர் எதிர்காலத்தில் சமூகப்பிரச்சினைகளை, சமாளிக்க, ஒடுக்கப்பட்டவர்களின் கல்விக்கான பாதையை தேர்ந்தெடுக்க, இது தொடர்பான சமூகத் தேடல்களை, கருத்துக்களை உருவாக்க, விவாதிக்க உதவிய முதன்மைக் காரணிகள் ஆகும்.


பிரையரின் வறுமையும், பட்டினியும், அவரது கற்கும் திறனுக்கு கடுமையாக பாதிப்பு ஏற்படுத்தியது, சோதனை செய்தது என்பதை அவர் வார்த்தைகளில் அவரே கூறியது. அவரின் சொந்த அனுபவ சமூக களப்பரிசோதனைகளே அவரின் முடிவுகளுக்கு தூண்டுதலாக, கிரியா ஊக்கியாக இருந்தன என்றும், அவரின் வாழ்க்கை முறையை ஏழை மக்களின் வாழ்நிலைக்கான எதிர்கால இலக்கைத் தேட, அவற்றை சமூக அக்கறை மற்றும் முன்னேற்றத்துடன் இணைத்து செயல்பட அர்ப்பணிப்பு செய்தது என்றும் அவரே கூறுகிறார்.


இதோ..இதோ..பாவ்லோ பிரையரே உங்களுடன், உரையாடுகிறார். ” நான் கல்வி பயிலும்போது, என் வாழ்வில் என்னை ஆட்டுவித்த பட்டினிப் பேய் என்னை எதுவும் புரிந்துகொள்ள அனுமதிக்கவில்லை. நான் கேளாக்காதினன்/ஊமை என்று எண்ணாதீர்கள். அப்படி ஏதும் இல்லை. எனக்கு அப்படி எல்லாம் கல்வியில் படிப்பில் ஆர்வம் ஏதும் இல்லாமல்இல்லை. ஆனால் எனது சமூக சூழல் என்னை கல்வி பெற அனுமதிக்கவில்லை. எனது அனுபவம்தான், மீண்டும் என்னை நன்றாக சிந்தித்து செயல்பட வைத்து, அதன் காரண காரியங்களை சீர்தூக்கி பார்க்க வைத்து, சமூகத்துக்காக எழுத, பேச, உரையாட மற்றும் கருத்துப் புரடசி செய்யத் தூண்டியது. அதுவே மீண்டும் மீண்டும் சமூக வர்க்கத்துக்கும், அறிவுக்கும் இடைப்பட்ட உறவைத் தெள்ளென தெரிவித்த மையப்புள்ளி” .என்கிறார் பாவ்லோ.

இதற்கிடையில் அவரது குடும்பத்தின் வறுமைச் சூழல் புதுவடிவம் எடுத்து நல்ல நிலைமைக்கு வந்தது. பாவ்லோ பிரைரே ரெசிபி பல்கலைக்கழக சட்டக்கல்லூரியில் 1943ல் சேர்ந்து படித்தார். அது மட்டுமா, தத்துவம், காரண காரியத் தொடர்பற்ற நிகழ்ச்சிகள் பற்றியது ( தொடர்பிலியியல் ) மற்றும் மனோதத்துவமும் படித்தார்.

தான் சட்டம் படித்து , சட்ட நிபுணர்கள் குழுவில் இணைத்துக்கொண்டாலும், ஒருபோதும் பாவ்லோ பிரேயர் அதனை பயிற்சி பெற நீதிமன்றம் போகவில்லை. மாறாக ஒரு பள்ளியில் போர்ச்ச்சுகீஸ் மொழி போதிக்கும் துவக்கப்பள்ளி ஆசிர்யராகவே சேர்ந்தார்.. 1944ல் , தனனுடன் பணிபுரியும் எல்சா மையா கோஸ்டா டி ஒலிவேரா என்ற பெண்ணை மணந்து கொண்டார். இருவரின் மணவாழ்க்கையின் மகிழ்வில் 5 குழந்தைகள்.
பின்னர் 1946ல், பாவ்லோ பிரேயர் சமூக சேவையின் கல்வி மற்றும் கலாச்சார துறையின் இயக்குநராக பணியமர்த்தப் பட்டார். அங்கும் கூட பாவ்லோ பிரேயர், கல்வியறிவில்லாத ஏழை மக்களுக்காகவே முதன்மைப் பணியாற்றினார். பின்னர் கட்டுப்பாடற்ற விடுதலை இறையியலில் பாரம்பரிய ஆசாரம் உட்கொள்ளாத கல்விக் கொள்கையைத் தழுவி செயல்பட்டார். அப்போதெல்லாம் ஒருவர் பிரேசில் நாட்டின் ஜனாதிபதிக்கு வாக்களிப்பதென்றால், அவர் படித்திருக்க வேண்டும். படிக்காதவர் வாக்களிக்க இயலாது.
காலம் சுழன்றாலும், பாவ்லோ பிரேயரின் கருத்துக்கள் ஏழைமக்கள் கல்வியைச் சுற்றியே சுழன்றது.

1961ல், ரெசிபே பல்கலைக்கழகத்தின் கலாச்சார விரிவாக்கப்பிரிவின் இயக்குநர் பதவி அவரை அலங்கரிக்கிறது. 1962,ல் பிரேசிலில் MOVEMENT FOR BASIC EDUCATION என்ற பெயரில் அங்கும் எழுத்தறிவுக்கான ஓர் இயக்கம் அரசாங்கத்தால் தொடங்கப்படுகிறது. 1962,ல் அதுவரை பாவ்லோ கண்டுகொண்டிருந்த கனவு நனவாகும் நேரம் கனிந்தது. தனது வர்க்க கருத்துப்படி, அதனை நடைமுறைப்படுத்த, கரும்புத்தோட்டத்தில் பணியாற்றும் 300 தொழிலாளிகளுக்கு கல்விகொடுத்தார். அதுவும் வெறும் 45 நாளில் அவர்களுக்கு எண்ணறிவும் , எழுத்தறிவும் கொடுத்தார். . இதுதான் பாவ்லோ வின் சோதனை முயற்சி.. இதுவே அரசுத் துரோகமாக கருதப்பட்டு, . 1964ல், இராணுவம் எழுத்தறிவு முயற்சியை நிறுத்தியது. பாவ்லோ பிரேயரையும் 70 நாட்கள் 170 அடி சிறைக்கொட்டடியில் தள்ளியது. 170மீட்டர் நீளமும், 60 செண்டிமீட்டர் அகலமும் கொண்ட பெட்டி போன்ற தனிமைச்சிறையில் அடைத்தது. நாடும் கடத்தியது. சிறைக்கதவை திறந்த பின், பொலிவியாவிலிருந்து வெளியேறிய பாவ்லோ, சிலி நாட்டுக்கு சென்றார். அங்கு 1967ல், ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாய அமைப்பில் 5 ஆண்டுகள் பணிசெய்தார். அங்குதான்பாவ்லோ பிரேயர் , அவரின் முதல் புத்தகமான, கல்வி என்பது விடுதலைக்கான பயிற்சி ( Education as the practice of Freedom ) என்பதை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து 1968ல், ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்வி முறை என்ற புகழ் பெற்ற புத்தகடத்தை போர்த்துகீசு மொழியில் வெளியிட்டார். அவருடைய இந்த பணியைப்பார்த்துவிட்டு,1969ல், , ஹார்வர்டு பல்கலைக்கழகம், பாவ்லோ பிரையருக்கு வருகைப் பேராசிரியர் (visiting professorship) பதவியை வழங்கியது.

அடுத்த ஆண்டு 1970ல், ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்கான கல்வி ஆங்கிலம் மற்றும் ஸ்பானிய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டதும், உலகின் 60 நாடுகளின் கதவை தட்டின . இதன் கருத்துக்கள் விடுதலைக்கான அனைத்து எல்லையையும் புத்தகம் மூலம்தொட்டு கல்வியில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. இந்தியாவுக்கும் வந்தது. பிரையருக்கும் அதிகார வர்க்க இராணுவத்திற்கும் இடையில் ஏற்பட்ட அரசியல் கருத்து மோதலால், பிரேசிலில் 1974 வரை ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்கான கல்வி வெளியிடப்படவே இல்லை. இதன் ஆங்கிலப் பிரதி உருவாகி பல வருடங்கள் இந்தப் புத்தகத்தின் மீது எந்த கவனமும் உருவாகவில்லை. ஐ.நா.வின் கவனத்திற்கு “ஒடுக்கப்பட்டோருக்கான விடுதலைக்கான கல்வி” புத்தகம் சென்ற பின்னர் தான் அது உலகம் முழுவதும் எழுத்தறிவு இயக்கங்களால் கையில் எடுக்கப்பட்டது. 1990 களில் தான் உலக மொழிகள் பலவற்றில் மொழியாக்கம் செய்யப்பட்டது. தமிழுக்கும் வந்தது. இந்தியா முழுவதும் நடைபெற்ற அறிவொளி இயக்க முன்னோடிகள் ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான் கல்வியின் பாதிப்பைப் பெற்றவர்களே .

பிரையர் , அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ்,மற்றும் மஸாஸாசூட்ஸ் பல்கலைக்கழகங்களில் ஓராண்டு பணிசெய்த பின்னர், ஜெனிவாவுக்கு, உலக கல்வியின் சிறப்பு ஆலோசகராக பணியாற்ற சென்றார். இங்குதான் பிரையர், கல்வியின்மறுசீரமைப்புதொடர்பாக ஆப்பிரிக்காவின் போர்த்துகீஸ் காலனிகளில், கினியா பிஸ்ஸு மற்றும் மொசாம்பிக் பகுதிகளில் சிறப்பு ஆலோசகராகவும் பணியாற்றினார்
.
“நான் என்னை யாரென்று வெளிப்படுத்திக்கொள்ளாமல், ஓர் ஆசிரியராக இருக்க முடியாது.” பாவ்லோ பிரையர்

பின்னர் 1979 ம் ஆண்டு, பிரையரே தனது சொந்த ஊரான பிரேசிலுக்குத் திரும்பினார். அங்கு தொழிலாளர்கள் கட்சியில் இணைந்து சாவ் பாவ்லோ நகரில் , 1980-86 வரை முதியோர் எழுத்தறிவு திட்டத்தின் மேற்பார்வையாளராக, செயல்பட்டார். அதன்பின்னர் தொழிலாளர்கள் கடசியின் தலையீட்டால், 1988ல்,அங்கேயே கல்வித்துறையின் செயலர் ஆனார். பின்னர் 1992, மே மாதம் 2 ம் நாள் தனது செயல்பாட்டை, ஒடுக்கப்பட்டவர்களுக்காக சிந்திப்பதை அவரின் மூளை நிறுத்திக்கொண்டது.

பாவ்லோ பிரையரே இறப்பதற்கு சற்றுமுன் சொன்னதாக சொல்லப்படுவது, “அன்பில்லாமல் கல்வியினை என்னால் கனவிலும் நினைத்து பார்க்க முடியாது, நான் அன்பினை உணர்கிறேன், பகிர்ந்தளிக்க நினைக்கிறேன், அதனாலேதான் நான் கல்வியாளனாக இருக்கிறேன்”.
பாவ்லோ பிரையரே சொல்கிறார், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக எடுக்கப்படும் கல்வி மற்றும் கலாச்சார தலையீடுகளின் வெற்றி என்பது அவர்களின் சங்கிலிகளை நாம் அறுத்தெறிவதில் அல்ல, அவர்களாகவே அவர்களது சங்கிலிகளை அறுத்தெறிய அவர்களை தயார் செய்வதிலேயே உள்ளது.
கற்றல் என்பது வேறு, படிப்பு என்பது வேறு என்பதை உணர்கிறார் பாவ்லோ பிரையரே. . இந்த மக்களுடன் பழகிப் பழகி அவர்களைப் பற்றி சதா சிந்திக்கத் தொடங்குகிறார். பசிக்கும் படிப்புக்கும் உள்ள தொடர்புகளைப் பற்றி சிந்திக்கிறார் பாவ்லோ பிரையரே

இன்றைய ஆசிரியர்கள் சேமிப்புக் கிடங்குகள் – மாணவர்கள் சேமிப்புக் கிடங்கில் இருந்து எடுக்கப்பட்ட பொருளால் நிரப்பப்படும் பெட்டகங்கள்ஆசிரியர் பாடம் நடத்துபவர்; மாணவர் நடத்தப்படுபவர் ஆசிரியருக்கு எல்லாம் தெரியும்; மாணவருக்கு ஏதும் தெரியாது. ஆசிரியர் பேசுவார்; மாணவர்கள் கவனிப்பார்கள் திட்டத்தின் உள்ளடக்கத்தை – நிகழ்ச்சிப் போக்கை ஆசிரியர் தீர்மானிப்பார்; மாணவர்கள் (ஆலோசிக்கப்படுதல் கூட கிடையாது) அதற்கேற்ப தங்களை வடிவமைத்துக் கொள்ள வேண்டும். ஆசிரியர் என்பவர் தனது தொழில் அதிகாரத்தால் அறிவின் அதிகாரம் செலுத்தி அதை மாணவர்களின் சுதந்திரத்திற்கு எதிரான அதிகாரமாக முன்வைக்கிறார்கள் ஆசிரியர் – மாணவர் உறவு இவ்வாறுதான் உள்ளது மொத்தத்தில் இன்றைய கல்வி ஒரு ஒடுக்குமுறைக்கான கருவி” என்றார் அவர்.
“எழுத படிக்க மட்டும் கற்றுக்கொடுப்பது கல்வியல்ல. வெறும் தகவல் தொகுப்பாக மக்களை மாற்றுவது கல்வியின் பணியல்ல. மாறாக ஒட்டு மொத்த சமூகத்தின் அனைத்து அம்சங்களையும் விருப்பு, வெறுப்பன்றி, விசாரணை செய்வதும், அநீதியைக் களைவதும், முறையற்ற பகிர்வுப் பரவலை அனைவருக்குமானதாக மாற்றுவதும்தான் கல்வியின் நோக்கம் ” பாவ்லொ பிரையரே
ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்றிணைய வேண்டு மாயின் முதலில் அவர்களை ஒடுக்கப்பட்ட சமூகத்தோடு பிணைத்துள்ள புனைவுகளாலும் மாயங்களாலும் ஆன தொப்புள் கொடிகளை அறுத்தெறிய வேண்டும். அவர்களுக்கு இடையிலான ஒற்றுமையும் பிணைப்பும் வேறுவகையானவைகளால் கட்டமைக்கப்படவேண்டும். இதை யாராலும் பிரிக்க முடியாத பந்தத்தைக் கட்டமைக்க புரட்சிகர செயல்பாடு என்பது ஆரம்பத்திலிருந்தே ஒரு கலாசார நடவடிக்கையாக இருக்க வேண்டும்….(பக்கம் 166)

“சுரண்டும் வர்க்கத்தைச் சார்ந்த ஒருவன், உண்மை நிலையினை சுரண்டலை உணரும்போது, அதனைத் தீர்க்க நடைபெற வேண்டிய, சார்பிலா நடைமுறை மாற்றம், தன் நலனையோ, தான் சார்ந்துள்ள வர்க்க நலனையோ, பாதிக்குமென்றால், அவன் மனநோயாளி போன்று நடப்பான்.’ என்று தனது ‘Pedagogy of the oppressed’ என்ற நூலில் சொல்கிறார்.
“மக்களுக்காக தங்களை உண்மையாக அர்ப்பணிப்பவர்கள் எல்லாம், தம்மை தொடர்ந்து சுயவிமர்சனதிற்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும்.”


“ஆதிக்க வர்க்கத்தை சேர்ந்தவர்கள், ஒடுக்கும் வர்க்கத்தை மாற்றம் அடைந்ததாக கூறிக்கொண்டு ஒடுக்கும் வர்க்கத்தில் பணிசெய்வது போல ஆதிக்க வர்க்கத்தின் பிரதிநிதியாக செயல்பட்டு, ஒடுக்கும் வர்க்கத்தின் விடுதலை சாத்தியமாகாதவாறு, பார்த்துக் கொள்வார்கள்” ..பாவ்லோ பிரையர்

”எழுத்து என்பது அரசியல் திட்டம் சார்ந்த பணி” என்றும், கல்வி ஓர் அரசியல் செயல்பாடு, அதனை சொல்லித்தரும் ஆசிரியர் அரசியல் சொல்லித்தருபவரே என்ற கொள்கையுடன் வாழ்ந்த பாவ்லோ பிரையரின் பிறந்த தினம் இன்று.

Leave a Reply

Top