You are here
Home > Article > வரிகளுக்குப் பின்னால் இருக்கும் வனவளம் : சிதம்பரம் ரவிச்சந்திரன்

வரிகளுக்குப் பின்னால் இருக்கும் வனவளம் : சிதம்பரம் ரவிச்சந்திரன்

வலிமை, அழகு, கம்பீரம் ஆகியவற்றின் அடையாளச் சின்னம் ஆகும் புலி. சக்தி, வடிவம், ருத்ரமான பாவம் போன்றவற்றுடன், வண்ணமயமான உடல் அமைப்பின் மூலம், உரோமங்கள் நிறைந்த கவர்ச்சியான வடிவத்தால் புலி மற்ற விலங்குகளிடம் இருந்து வேறுபட்டு நிற்கிறது.

‘பாந்தேரா டிரைபிஸ்’ என்பதுதான் புலியின் அறிவியல் பெயர். பெஃடே என்ற விலங்கினக் குடும்பத்தில் புலி உட்படுத்தப்பட்டுள்ளது. ‘ வியாக்ரம்’ என்ற வடமொழிச் சொல் பெயரால் அறியப்படும் புலியின் பல சிறப்பான குணங்களால் இந்தியாவில் புலிக்கு என்றும் ஒரு தனி இடம் உள்ளது. பல தமிழ்க் காப்பியங்களும், காவியங்களும், சங்கக்காலப் பாடல்களும் புலியைக் குறித்த செய்திகளைப் பதிவு செய்துள்ளன. வீரத்திற்கும், கம்பீரத்திற்கும் அடையாளமாக அவை குறிப்பிடப்பட்டுள்ளன. புலிகள் சைபீரியாவில் தோன்றியதாகக் கருதப்படுகிறது. ஆர்டிக் பகுதியில் நியூ சைபீரியன் பிரதேசத்தில் இருந்து யானைகளின் மூதாதையர்களான மாமூத்துக்களின் புதைபடிம (fossils) எச்சங்களின் அருகில் இருந்து புலிகளின் படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இன்டியன், மஞ்சூரியன், கொக்கேசியன் அல்லது பெர்சியன், மலேயன் ஆகியவையே புலிகளின் பொதுவான நான்கு இனங்களாகக் கருதப்படுகிறது. ராயல் பெங்கால் டைகர் என்னும் வங்கப்புலி இந்தியாவின் புலி இனமாகக் கருதப்படுகிறது.

இன்டியன், பெர்சியன், மஞ்சூரியன் ஆகிய இனங்களில் உரோமம், வெள்ளை நிறம், முகம், பக்கவாட்டுப் பகுதிகள் ஆகியவற்றில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. ஆனால், மற்ற மூன்று இனங்களுடன் ஒப்பிடும்போது மலேயன் புலிகள் அளவில் சிறியவை. இந்த நான்கு இனப் புலிகளில், எட்டு உப பிரிவுகள் உள்ளன. சைபீரியன், சைனீஸ், இந்தோசைனீஸ், இன்டியன், சுமத்ரன், ஜாவன், காஸ்பியன், பாலினீஸ் ஆகியவை. ஒவ்வொரு பிரதேசத்திலும் அந்தந்தப் பிரதேசங்களின் சூழலுக்கு ஏற்ப தங்களைத் தகவமைத்துக் கொண்டு உருவான உயிரினங்கள். இவற்றில் காஸ்பியன், பாலினீஸ் பிரிவுகளைச் சேர்ந்த புலிகள் பூமியில் இருந்தே முற்றிலுமாக அழிந்துவிட்டன. புலிகளின் ஆற்றலை சுலபமாக விவரிக்க முடியாது. சிங்கத்தைப் போல வலிமையும், ஒருமுகக் கவனமும் கொண்டவை புலிகள். தாடை எலும்புகள், கால்கள், வலுவான தசைகளால் கட்டமைக்கப்பட்ட உடல் புலிகளின் வலிமைக்கு ஆதாரமாக இருப்பவை. கூர்மையான பற்களின் அமைப்பும், சுரசுரப்பாக இருக்கும் நாக்கும் பச்சையான இறைச்சியைப் பிடித்திழுத்து உண்பதற்கும், மென்று தின்பதற்கும், தன் உடலைத் தானே நக்கித் துடைத்து, சுத்தப்படுத்திக் கொள்வதற்கும் உதவுகிறது.

அடர்ந்த காட்டில் சத்தம் போடாமல் உலவி இரையைப் துல்லியமாகப் பிடிக்கும் ஆற்றல் அவற்றிற்கு உண்டு. ஓசை எழுப்பாமல், மெல்ல நடந்து அருகில் சென்று எச்சரிக்கையுடன் இரையை தாக்கி வேட்டையாடும் அதன் திறன் கலையம்சம் நிறைந்த ஒன்றாகும். எப்படிப்பட்ட காட்டிலும், புல்வெளிப்பகுதியிலும் மறைந்துகொள்ளும், சூழ்நிலையுடன் பொருந்தி வாழும் ஆற்றல் இவற்றிற்கு உண்டு.

சிங்கத்தைப் போல உயரம் இல்லாவிட்டாலும் புலி நீளமான ஒரு விலங்கு. சராசரி உயரம் 90 முதல் 105 செ.மீ. நீளம் 3 மீ. பெண் புலியின் உடல் எடை ஆணின் எடையை விடக் குறைவாக இருக்கும். வளர்ந்த ஆண் புலியின் உடல் எடை 180 முதல் 230 கி.கி வரை இருக்கும். பெண் புலியின் உடல் எடை 130 முதல் 180 கி.கி வரை இருக்கும். ஆண் புலியுடன் ஒப்பிடும்போது பெண் புலியின் எடை சராசரி 50 கிலோ குறைவாக இருக்கும்.

மாலை, இரவுநேரங்களில் இரை தேடும். அரிதாக பகல்நேரத்திலும் வேட்டையாடும். மஞ்சூரியன் புலிகள் நாய்களையும், செந்நாய்களையும் மிக விரும்பி உண்ணும். இவை அணைத்துண்ணிகள். செங்கரடி, கருங்கரடி போன்ற இறைச்சி உண்ணும் விலங்குகளும் இவற்றிற்குப் பிடித்த உணவுகள். நிலைமை மோசமானால் புலி புல்லையும் தின்னும் என்று மலையாளமொழியில் ஒரு பழமொழி உள்ளது. புலி புல்லையும் உண்பது உண்டு. புல், மூங்கில் இலைகள், தானியங்கள் போன்றவை புலியின் எச்சங்களில் காணப்படுவது உண்டு. வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிக்க, புலிகள் புல்லையும் தின்கின்றன என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

சிறுத்தைகளைப் போல மாமிசத்தை மட்டுமே உண்ணும் பழக்கம் உடைய புலிகளும் உள்ளன. வயது முதிர்வு, உடல்நலக் குறைவு போன்ற காரணங்களால் புலிகள் இவ்வாறு செய்கின்றன. முள்ளம்பன்றியின் தாக்குதல் புலிகளை மிகச் சிரமப்படுத்தும் ஒன்று. அவ்வாறு தாக்குதல் ஏற்பட்டால் உடல் முழுவதும் ரணங்களுடனும், காயங்களுடனும் பல நாட்கள் இவை வாழவேண்டி நேரிடுகிறது. மனிதனின் குண்டுகள் இவற்றிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.

உணவைத் தேடி வேட்டையாட ஒரு வழியும் இல்லாமல் போகும்போது வளர்ப்பு மிருகங்களைக் கொன்று தின்று அல்லது மனிதனைக் கொன்று தின்று புலிகள் பசியைப் போக்கிக் கொள்கின்றன. மனிதர்களை வேட்டையாடும் கதைகளைச் சொல்லும் ஜிம் கார்பெட்டின் ஹுமாயூன் குன்றுகள் என்ற நூல் உலகப்புகழ்பெற்றது. ஆண்டில் பாதிகாலத்திற்கு கொரியர்கள் புலிகளைப் பிடிப்பார்கள். மீதி காலத்தில்,புலிகள் அவர்களைப் பிடித்து உண்ணும் என்று புகழ்பெற்ற ஒரு சீனப்பழமொழி உள்ளது. கொரியா நாட்டவரைப் பற்றி சீனாவில் பழக்கத்தில் உள்ள ஒரு பழமொழி இது.

புலிகளின் முதல் வாழிடம் சைபீரியாதான். பின்னர் மங்கோலியா, கிழக்கு அமூர்லாந்து, சாங்கேலின் தீவுகள் வரை இவற்றின் வாழிடம் பரந்து விரிந்தது. காலப்போக்கில் ஆசியாவிற்கும், அருகில் இருந்த தீவுகளுக்கும் இடம்பெயர்ந்து குடியேறின. மியான்மார், சையாம், மலேயா ஆகிய இடங்களின் வழியாக சுமத்ரா, ஜாவா பகுதிகளுக்கு இவை வந்து குடியேறின. இரை விலங்குகளான காட்டுப்பன்றிகள் மிக அதிகமாக இருந்ததால் காஸ்பியன் சமவெளியுடன் சேர்ந்திருக்கும் ஆசியப் பெரும்பகுதியின் தென்கிழக்கு எல்லை வரை காக்கஸ் பிரதேசங்களுக்கு புலிகள் சென்று குடியேறின. மெல்லமெல்ல காஸ்பியன் கடலின் மேற்கில் உள்ள ஆக் பேஸ்ட்டின், துருக்கிய ஜியார்ஜியா ஆகிய இடங்களும் புலிகளின் வாழிடங்களாக மாறின. வட ஆசியாவில் பனிப்படலங்களில் குவிந்த மிகக் கடுமையான குளிர் நேபாளம், பூட்டான், அஸ்ஸாம் போன்ற இடங்கள் வழியாக புலிகள் இந்தியாவிற்கு வரக் காரணமாக அமைந்தது. சிந்து சமவெளி நாகரீகத்திற்கு முன்பே புலிகள் இந்தியாவிற்கு வந்தன என்று கலாச்சாரத்தின் எச்சங்கள் வெளிப்படுத்துகின்றன.

புத்திசாலித்தனத்துடன், பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து செல்லும் புலிகளின் அபாரமான ஆற்றலே அவற்றைஇன அழிவில் இருந்து காப்பாற்றியுள்ளது.

நீராவிக் கப்பல்களின் வருகையைத் தொடர்ந்து வனங்களுக்குள் குடிபெயர்ந்த புலிகள் கடுமையான குளிரிலும், கடுமையான கோடையிலும் பாதுகாப்பான இடங்களைத் தேடிச் செல்கின்றன. இதன் மூலம் மாறுபட்ட புதிய ஒரு சூழல் மண்டலத்தையே புலிகள் உருவாக்கி உள்ளன. பனியால் மூடப்படும் இமயமலைக் குன்றுகள், மேற்குவங்காளத்தில் சுந்தர்பன் சதுப்புநிலங்கள், இமயமலைப் புல்வெளிக் குன்றுகள், சதுப்பு நிறைந்த தென்னிந்தியக் காடுகள், மழைக்காடுகள், ராஜஸ்தானில் உள்ள வறண்ட முட்காடுகள் என்று இவ்வாறு பலதரப்பட்ட சூழல் மண்டலங்களில், புலிகள் தங்களைத் தகவமைத்துக்கொண்டு வாழ்கின்றன. இது பல்வேறு சூழ்நிலைகளில் வாழும் அவற்றின் அபாரமான ஆற்றலை வெளிப்படுத்துவதாக உள்ளது.

சரியான கால இடைவேளைகளில் புலிகளின் துல்லியமான கணக்கெடுப்பு நடத்தப்பட்டுவருகிறது. இதன் மூலம் இந்திய அரசு புலிகளின் பாதுகாப்பை உறுதி செய்துவருகிறது. 1970களில் 2000க்கும் குறைவான அளவில் மட்டுமே இருந்த புலிகளின் எண்ணிக்கை அவற்றைப் பாதுகாப்பதற்கானத் திட்டங்கள் தொடங்கப்பட்டபின் கனிசமான அளவில் உயர்ந்திருக்கிறது.

சூழல் பாதுகாப்பு, இயற்கைச் சமநிலையைப் பேணுதல் போன்றவற்றில் புலிகள் முக்கியப்பங்காற்றுகின்றன. புலிகளின் உணவாக உள்ள விலங்குகளின் எண்ணிக்கைக் கட்டுக்கடங்காமல் பெருகி ஊருக்குள் புகுந்து அவை பயிர்கள் அழியாமல் பாதுகாக்கப்படுவதற்கு புலிகள் உதவுகின்றன. காட்டின் சூழல் சமநிலையைப் பேண புலிகள் பெரும் பணி ஆற்றுகின்றன. இன அழிவின் விளிம்பு வரை சென்ற விலங்கு புலி.

ராஜஸ்தானில் ஆரம்பித்த ‘ புலிகள் பாதுகாப்புத் திட்டம்’ (Project Tiger) சர்வதேச அளவில் புலிகளின் பாதுகாப்பில் சிறந்த முன்மாதிரியாக மாறியது. ஆதிகாலத்தில் அரை லட்சம் அளவிற்கு இருந்த புலிகள் நிரந்தரமான வேட்டையாடுதலின் மூலம் பெருமளவில் குறைந்து வெறும் சில ஆயிரங்களுக்கும் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே இப்போது உள்ளன.

புலிகளைப் பாதுகாக்கவேண்டும் என்ற நோக்கத்துடன்அரசு புலிகள் பாதுகாப்பு திட்டத்தை 1973ல் நடைமுறைப்படுத்தியது. புலிகளை அழிவிலிருந்து மீட்க இத்திட்டம் பெரிதும் உதவியது. 1970 புலிகளை வேட்டையாடுவதைத் தடை செய்யும் சட்டமும், 1972 இந்திய வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டமும் புலிகள் பாதுகாப்பிற்கு உதவின. இத்திட்டம் சிறப்பாக நடைமுறைப் படுத்தப்பட்டாலும் புலிகளின் எண்ணிக்கை எதிர்பார்த்த அளவிற்கு அதிகரிக்கவில்லை என்பதே உண்மை.

உலகில் இன்று புலிகள் 10,000க்கும் குறைவாகவே உள்ளன என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இதில் பாதி இந்தியாவில் உள்ளன. இந்தோனேஷியா, நேபாளம், மலேசியா, ரஷ்யா, சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகள் மிகச் சிறந்தமுறையில் புலிகளைப் பாதுகாக்கும் காப்பகங்களை நடத்திவருகின்றன.

இயற்கையின் பாதுகாப்பிற்கு இந்த பூமியில் வாழும் ஒவ்வொரு உயிரினமும் சமநிலையில் வாழவேண்டும். தண்ணீர் எங்கிருந்து வருகிறது என்றால் குழாயில் இருந்து வருகிறது என்றும், மின்சாரம் எங்கிருந்து வருகிறது என்றால் ஸ்விட்ச்சில் இருந்து வருகிறது என்றும் நினைக்கும் இளம் தலைமுறையினரின் எண்ணங்களைத் மாற்றியமைப்போம்.

புவியில் உள்ள தேனீக்கள், எறும்பு, பட்டாம்பூச்சி, காக்கை, குருவி, யானை, புலி, கரடி போன்ற இவை எல்லாம் நாம் நிம்மதியாக வாழ்வதற்கு உதவும் உயிர்ச்சங்கிலியின் முக்கியக்கன்னிகள் என்பதை புரிந்துகொள்வோம். புரியவைப்போம்.

பதிவு: தேனி சுந்தர் ..

Leave a Reply

Top