You are here
Home > Article > விவசாயப் பயிர்களுக்கு ஒரு மருத்துவமனை : சிதம்பரம் இரவிச்சந்திரன்

விவசாயப் பயிர்களுக்கு ஒரு மருத்துவமனை : சிதம்பரம் இரவிச்சந்திரன்

கேரள மாநிலத்தில் ஆலப்புழை மாவட்டத்தில் கஞ்சிக்குழி கிராம பஞ்சாயத்தில் தேசீய சாலையோரம் S.L.புரம் பகுதியில் உள்ள கஞ்சிக்குழி கூட்டுறவு சேவை வங்கி  ( நம்பர் 1558 ) நூதனமான ஒரு விஷயத்தை விவசாயிகளுக்காக செய்திருக்கிறார்கள்.. 

அங்கு இதுவரை நாம் கேள்விப்பட்டிராத விவசாயப் பயிர்களுக்கு என்று ஒரு தனி மருத்துவமனையை செயல்படுத்திவருகிறார்கள் வங்கியாளர்கள்.  மனிதர்களுக்கு, கால்நடைகளுக்கும் தனித்தனியான மருத்துவமனைகள் இருப்பதைப் போலவே விவசாயத் தாவரங்களுக்கும் அவற்றுக்கு என்று சிறப்பாக செயல்படும் ஒரு மருத்துவசாலையாக இது இயங்கிவருகிறது.  இது கார்ஷிக ஔடத சாலை என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. 

இங்கு ஒரு தகவல் மையமும், விவசாயப் பயிர்களுக்காக என்று ஒரு தனி மருத்துவசாலையும் செயல்படுகிறது.  இந்த விவசாயப் பயிர்களுக்கான மருத்துவசாலையில் (agricultural dispensary) ஒவ்வொருநாளும் ஒரு விவசாய மருத்துவர் இருப்பார்.   பாரம்பரியமாக விவசாயம் செய்து வருபவர்களும், விவசாயத்துறையை சேர்ந்த நிபுணர்களும் இங்கு இத்தகைய மருத்துவர்களாக செயல்பட்டுவருகிறார்கள்.  இந்தப் பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு அவர்களுக்கு ஏற்படும் நியாயமான சந்தேகங்களைத் தீர்த்துவைப்பதிலும்,நோய் நீக்கும் வழிகளைச் சொல்லித் தருவதிலும் இவர்கள் பெரிதும் துணை புரிகிறார்கள்.  பிரச்சனைகள் தொடர்பாக விவசாயிகள் நேரடியாக வந்து மருத்துவர்களைப் பார்த்து சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்கிறார்கள்.

கஞ்சிக்குழி கிராமம் முழுவதுமாக இயற்கைவழி வேளாண்மை செய்யும் பகுதியாக கேரளாவில் முன்பே அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகவே கூட்டுறவு வங்கி இந்தத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. நோயைத் தீர்ப்பதற்கான மருந்தும் கொடுக்கப்படுகிறது.

இந்த மருந்துகளை வங்கியே தருகின்றது.  கூட்டுறவு வங்கிகள் வெறும் பணப்பட்டுவாடா செய்யும் மையங்களாக மட்டும் செயல்படாமல் விவசாயிகளுக்கு அவர்கள் பயிர் செய்யும் இடங்களில் ஏற்படும் சந்தேகங்களைத் தீர்ப்பதிலும் பெருந்துணை புரிந்துவருகிறது.  இங்கு இயற்கைவழி வேளாண்மை மட்டுமே செய்யப்படுவதால் நோய்த் தாக்குதல்களையும் அதே இயற்கைவழியின் மூலமே எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதால் இந்த மருத்துவசாலை விவசாயிகளுக்கு பெரிதும் உதவியாக இருந்துவருகிறது. கஞ்சிக்குழியில் பாரம்பரியமாக விவசாயம் செய்து வரும் விவசாயிகளை உள்ளடக்கிய ஒரு விவசாயிகள் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.  இந்த வங்கியாளர்கள் வீட்டுத்தோட்டம் போடுவதற்கான சகலவிதமான உதவிகளையும் கிராம மக்களுக்கு செய்துவருகிறார்கள். 

கையில் காசு வைத்திருந்தும், இடம் இருந்தாலும், சமையலறைத் தோட்டங்களை எவ்வாறு உருவாக்குவது, விதைகள் எங்கிருந்து கிடைக்கும், கிடைக்கின்ற விதையை எவ்வாறு நடவேண்டும், அதன் பின்னர் என்ன செய்வது,பூச்சிகள் வந்தால் அதை எவ்வாறு சமாளிப்பது என்பது போன்ற விஷயங்களைப் பற்றி  அறிந்துகொள்ள இந்தக் குழுவினர் உதவுகிறார்கள்.  சமையலறை தோட்டம் போடுவதற்கான விவசாயிகள் குழு என்று இது அழைக்கப்படுகிறது.  இவர்கள் வீடுகளுக்குச் சென்று சமையலறைத் தோட்டங்களை வீட்டுக்காரர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப அமைத்துத்தருகிறார்கள். காய்கறி, வாழை, பூச்செடிகள் போன்றவை இந்தத் தோட்டத்தில் நட்டு வளர்க்கப்படுகின்றன. 

பாரம்பரியமாக விவசாயம் செய்துவரும் விவசாயிகள் பெற்றுள்ள அவர்களுடைய விலை மதிக்கமுடியாத அனுபவ அறிவைக் கொண்டு இந்தத் தோட்டங்களை அமைக்கிறார்கள்.  பல வருட அனுபவத்தின் மூலம் செடிகளுக்கு ஏற்படும் நோய்கள் பற்றி முழுமையாக அறிந்திருக்கும் விவசாயிகளின் அனுபவ அறிவும் இதற்குப் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது. அதைப் பராமரிப்பது பற்றியும் சொல்லப்படுகிறது. விவசாயத்துறை நிபுணர்களும் உதவுகிறார்கள்.  தேசீய விதைகள் கழகத்தில் (National Seeds Corporation – NSC) வங்கி விதைகளை வாங்கி விவசாயிகளுக்கு வழங்குகிறது.  அதனால் விதைகள் தரமானதாக இருக்கின்றன.  இங்கு விவசாயிகள் உற்பத்தி செய்த நல்லவிதைகளையும் வங்கி வாங்கி தோட்டம் போடுபவர்களுக்கு வழங்குகிறது.

இந்த விதைகள் மலிவான விலைக்கே விற்கப்படுகிறது.  விதைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட சிறிய கன்றுகள் சமையலறைத் தோட்டம் போடுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது.  தோட்டம் போடுபவர்களுக்குத் தேவைப்படும் இயற்கைஉரங்கள், பூச்சிக்கொல்லிகள், மாட்டுச்சாணம், கோழிக்கழிவு, சாம்பல் போன்றவற்றை விவசாயிகளுக்கு வங்கியே அளிக்கிறது. வாரத்தில் எல்லா நாட்களிலும் குறிப்பிட்ட ஒரு நேரத்தில் விவசாய மருத்துவர்களின் சேவை கிடைக்குமாறு வங்கி ஏற்பாடு செய்துள்ளது.  இது திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 10 முதல் 12 மணிவரையும்,புதன், சனிக்கிழமைகளில் 11 முதல் 12 மணி வரையும், செவ்வாய், வியாழன் ஆகிய நாள்களில் 11 முதல் 12 மணி வரையும் விவசாய மருத்துவர்களின் சேவை வழங்கப்படுகிறது.  மருத்துவர்களின் தொலைபேசி எண்களும் விவசாயிகளுக்குக் கொடுக்கப்படுகிறது.  தொலைபேசி வழியாகவும் இந்த மருத்துவர்களோடு விவசாயிகள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளைப் பேசி தீர்வு காணலாம்.  இந்த நிபுணர்கள் விவசாயம் செய்யும் இடங்களுக்கே நேரடியாக வந்து தாவரங்களுக்கு சிகிச்சை அளிக்கிறார்கள். வங்கியில் இந்த மருத்துவர்களின் சேவை இலவசமாகக் கிடைக்கும்.

தொலைபேசி வழிச்சேவை இலவசமானது.  தலைமை மருத்துவராக “ கர்ஷக மித்ரா” என்ற சிறந்த விவசாயிக்கான விருது பெற்றவர் இங்கு பணியாற்றுகிறார். மருத்துவர்களின் கூட்டம் வாரத்திற்கு ஒரு தடவை கூடி மருந்துகள் பற்றிக் கலந்து பேசி முடிவு செய்கிறது.  புகையிலை கஷாயம், வெள்ளைப்பூண்டு கஷாயம், மிளகாய் கஷாயம், ஜீவாமிருதம் உட்பட எல்லா இயற்கை வழி உரங்களும் இங்கிருந்து விநியோகிக்கப்படுகிறது. இவற்றின் விலை குறைவு.

வாழை, தென்னை, பழமரக் கன்றுகள், காய்கறிச்செடிகளின் கன்றுகளை குறைவான விலைக்கு இங்கு வழங்குகிறார்கள். மாட்டுச்சாணம், மிளகாய் கஷாயம், கோமியம், வேப்பெண்ணை கரைசல் போன்றவை இங்கு கிடைக்கிறது. தொழில்நுட்ப உதவிகளும் வழங்கப்படுகின்றன.  இந்த வங்கி ஒரு மின்னணு விவசாய வாசகர் நிலையத்தையும் நடத்திவருகிறது.  புதிய தலைமுறையை தகவல் தொழில்நுட்பத்தின் உதவியோடு விவசாயத்தை நோக்கி ஈர்க்கும்விதமாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. 

இதற்காக vegetablegarden கஞ்சிக்குழி என்ற ஒரு blog ம் செயல்பட்டுவருகிறது.  சந்தேகங்களையும் கூட இந்த blog மூலமாக கேட்டுப் பயன்பெறலாம்.  இதற்காக ஒரு ஐவர் குழு உள்ளது.  இவர்கள் தங்களுக்கு வருகிற சந்தேகங்களை அப்போதைக்கப்போதே விவசாய மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று பதிலளிக்கிறார்கள்.  20 பிரபலமான விவசாய நிபுணர்களின் புத்தகங்கள் வங்கியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.  வங்கிக்கு வரும்போது வாடிக்கையாளர்கள் இந்தப் புத்தகங்களைத் திறந்து படிப்பதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

விவசாயத்தோடு தொடர்புடைய உபகரணங்களும் மலிவான விலைக்கு இங்கு விற்கப்படுகிறது.  இந்த வங்கி இயங்கி வரும் தேசீய நெடுஞ்சாலையில் இந்த வழியாக செல்லும் வாகனங்களில் வருபவர்கள், இங்கு நின்று விவசாயம் தொடர்பான சந்தேகங்களைக் கேட்டு தீர்வு பெற்று செல்கிறார்கள்.  வெளியூர்களில் இருந்து வருகிறவர்களும் இந்த சேவைகளை பயன்படுத்திவருகிறார்கள்.  நாள்தோறும் 100 முதல் 150 பேர் இந்த சேவைகளைப் பயன்படுத்துகிறார்கள்.  வங்கியைப் பற்றி அறியவும், இதன் சேவைகளைப் பற்றித் தெரிந்துகொள்ளவும் பலர் இங்கு குழுக்களாகவும் வருகிறார்கள்.  விவசாயத்திற்கு வரும் புதியவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாகவே அமைந்துள்ளது. மாநில அரசின் விவசாயத்துறையும் இந்த சேவைகளில் ஒன்றிணைந்து செயல்படுகிறது.  இயற்கைவழி உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் வீட்டில் உருவாக்க நேரம் இல்லாதவர்கள் இங்கு வந்து எளிதாக அவற்றைப் பெற்றுச்செல்கிறார்கள். விவசாயிகளின் சந்தேகங்கள் தீர்த்துவைக்கப்படுவதோடு அவர்களின் கைகளில் பதில்கள் செயல்வடிவத்தில் கொடுக்கப்படுகிறது.

இந்த வங்கியின் சேவைகள் இந்தியாவுக்கே ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறது.  வயல்கள் சூறையாடப்பட்டுவரும் இந்த காலத்தில், தோட்டம் போட விரும்பும் பலருக்கும் உதவிக்கரம் நீட்டி ஆதரவு அளிக்கும் இந்த வங்கியின் சேவைகள் வாழ்த்தப்படவேண்டியதும், வணங்கப்படவேண்டியதும் ஆகும்.

Leave a Reply

Top