You are here
Home > இயக்கச் செய்திகள் > கொரானா – அச்சம் வேண்டாம்.. அலட்சியமும் வேண்டாம்..! தொகுப்பு : அ.குமரேசன்

கொரானா – அச்சம் வேண்டாம்.. அலட்சியமும் வேண்டாம்..! தொகுப்பு : அ.குமரேசன்

அறியாமையைப் போலவே அரைகுறையாக அறிந்திருப்பதும் ஆபத்தானது. கொரோனா குறித்து எளிமையாக விளக்கிடும் முனைப்பாக, ‘கோவிட்-19க்கு இந்திய அறிவியலாளர்கள் எதிர்வினை’ (ஐஎஸ்ஆர்சி) அமைப்பு அண்மையில் இணையவழி உரையாடல் ஒன்றைத் தமிழில் நடத்தியது. புதுதில்லி, விக்யான் பிரச்சார் அமைப்பின் அறிவியலாளர் தா.வி.வெங்கடேஸ்வரன் ஒருங்கிணைப்பில், சென்னை கணிதவியல் ஆய்வு நிறுவனத்தின் பேராசிரியர்கள் எஸ்.கிருஷ்ணசாமி, ஆர்.ராமானுஜம், மும்பை டாட்டா அடிப்படை ஆய்வுகள் நிறுவனத்தின் நரம்பியல் அறிவியலாளர் சந்தியா கௌஷிகா ஆகியோர் மக்களிடமிருந்து வந்த கேள்விகளுக்குப் பதிலளித்தார்கள்…


கொரோனா வைரஸ் காற்றில் பரவக்கூடியது என்று சில நாட்களாக ஒரு செய்தி காற்றில் பரவிக் கொண்டிருக்கிறது. எங்கிருந்தோ காற்றில் கலந்து வருகிற கிருமி நம்மைத் தொற்றிக் கொள்ளுமா..?

காற்று வாங்கப் போய் கொரோனா வாங்கிவர யாரும் விரும்ப மாட்டார்கள். வைரஸ் ஏற்கெனவே தொற்றிய ஒருவரிடமிருந்து அவர் தும்முகிறபோது, இருமுகிறபோது, பேசுகிறபோது கூட தெறிக்கிற எச்சில் துளிகளில் கலந்து வெளியேறுகிறது. அந்தத் துளிகள் பெரிய, சிறிய, நுண்ணிய அளவுகளில் வெளியேறுகின்றன. பெரிய துளிகள் பாயக்கூடிய தொலைவை மதிப்பிட்டு ஒருவருக்கொருவர் ஒன்றரை மீட்டர் முதல் இரண்டு மீட்டர் வரையில் இடைவெளி அறிவுறுத்தப்படுகிறது. நுண்துளிகள் காற்றில் மிதக்கக் கூடியவை என்பதால் இப்போது அதில் கவனம் செலுத்தப்படுகிறது.
நெல் புடைக்கிறபோது கனமான நெல் அங்கேயே கீழே விழுந்து குவிந்துவிடும், உமி சற்று அதிகத் தொலைவில் போய் விழும், தூசு மேலும் அதிகத் தொலைவுக்குச் செல்லும். அது போன்றதுதான் இதுவும். உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும் பாதுகாப்புக் கருதி, 200 அறிவியலாளர்கள் எழுதிய கடிதங்களின் அடிப்படையில், உலக சுகாதார  மையம் இதற்கான ஆராய்ச்சிகளிலும் கூடுதல் முனைப்புக் காட்டத் தொடங்கி இருக்கிறது.காற்றில் பரவுவது என்றால் ஏதோ காற்றுவெளியில் எங்கும் பரவி மிதந்து கொண்டிருக்கும் என்று புரிந்து கொள்ளக் கூடாது. வெளியே போனால், வீட்டு மொட்டை மாடியில் நின்று கொண்டிருந்தால் காற்றில் கலந்து வருகிற கிருமி நம் மீது விழுந்து தொற்றிக் கொள்ளுமோ என்றும் நினைக்க வேண்டியதில்லை.
தெருவில் ஒரு வீட்டில் கொரோனா வந்திருக்கிறது, அங்கேயிருந்து காற்றில் பரவி நம்மையும் தொற்றுமோ என்றும் பதறத் தேவையில்லை. தும்மும்போது வெளியேறுவது 40,000 துளிகள், பேசும்போது 3,000 துளிகள் தான். அந்தத் துளிகளில் கொரோனா வைரஸ் மட்டும்தான் கலந்து வரும் என்பதில்லை.வேறு பாக்டீரியாக்களும் வரும். சிறிய துளிகளிலும், நுண்துளிகளிலும் இருக்கக்கூடிய வைரஸ் மிகக் குறைவுதான். அந்தத் துளிகள் பரவுகிறபோதே ஆவியாகிவிடுவதற்கான வாய்ப்பு அதிகம். கிருமிக்கு ஒரு ஈர  உறை இருக்க வேண்டும். ஆகவே துளிகள் ஆவியாகிறபோது கிருமி செயலிழந்துவிடும். நுண்துளிகள் உடல் மேல் விழுவதாலேயே தொற்று ஏற்பட்டு விடாது.
மூக்கில் அல்லது கண்ணில் படுவது,  கையில் பட்டு மூக்கையோ கண்ணையோ தொடுவது போன்ற நிலைமைகளில் சுவாசத்தின் மூலம்  உள்ளே செல்லுமானால் தொற்று ஏற்படக்கூடும். தலையில் விழுந்து, அங்கேயிருந்து நழுவி முகத்தில் சரிகிறபோது கண்ணிலோ, மூக்கிலோ நுழையுமல்லவா என்று பலர் கேட்கிறார்கள். அப்படி நடக்காது என்று சொல்ல முடியாதென்றாலும், அதற்கான வாய்ப்பு மிக அரிதானதுதான். காற்றோட்டம் இல்லாத அறைகள், ஏசி இயக்கப்படுகிற உணவகம் போன்ற பொது இடங்களில், தொற்று இருக்கக்கூடிய ஒருவர் தும்மினாலோ இருமினாலோ பேசினாலோ வெளியேறும் நுண்துளிகள் கூடுதல் தொலைவுக்குச் செல்லக்கூடும். வழியில் மற்றவர்களைத் தொற்றக் கூடும். காற்றோட்டமில்லாத இடங்களையும் கூட்டமான இடங்களையும் முகக்கவசமின்றிச் செல்வதையும் தவிர்ப்பது நல்லது.


ஒரு வைரஸ் புகுந்தால் கூட நோய்த்தொற்று ஏற்பட்டுவிடுமா? அல்லது நிறைய வைரஸ்கள் புகுந்தால்தான் பிரச்சனையா..?


ஒரே ஒரு வைரஸ் புகுந்து விட்டாலே நோய் ஏற்பட்டுவிடும் என்று  அஞ்சத் தேவையில்லை.நோயாக மாறக்கூடிய அளவுக்குத் தாக்க வேண்டுமானால் நூற்றுக்கு மேற்பட்ட கிருமிகள் இருக்க வேண்டும். இதை “வைரஸ் லோட்”  என்பார்கள். உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்தது இது. ஆரோக்கியமான ஒருவருக்கு கோவிட் ஏற்பட வேண்டுமானால் ஏராளமான வைரஸ்கள் தொற்றியாக வேண்டும். 
சார்ஸ்-1 பற்றிய ஆராய்ச்சியில் 200 முதல் 250 வரை வைரஸ்கள் தொற்றுகிறபோது அந்த நோய் ஏற்படுகிறது என்று கண்டு பிடிக்கப்பட்டது. சார்ஸ் 2  ஆகிய கோவிட் 19 நோய் ஏற்படுவதற்கு எத்தனை கிருமிகள் தொற்றுகின்றன என்று கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சிகள் தொடர்கின்றன. ஆகவே அச்சமும் வேண்டாம், அலட்சியமும் வேண்டாம்.

மஞ்சள், இஞ்சி போன்றவற்றை உட்கொள்வதால் தடுப்பாற்றல் அதிகமாக இருக்கும் என்றும். இந்தியாவில் மஞ்சளும் இஞ்சியும் உணவில் எடுத்துக் கொள்ளப்படுவதால் தான் இங்கே கொரோனா மரணங்கள் குறைவாக இருக்கின்றன என்றும் கூறப்படுவது பற்றி…?


மேற்கத்திய நாடுகளை விட ஆசிய நாடுகளில் கொரோனா இறப்பு விகிதம் குறைவுதான். அதற்கான காரணம் இனிமேல்தான் நிறுவப்பட வேண்டும். ஆசிய நாடுகள் எல்லாவற்றிலும் மஞ்சளும் இஞ்சியும் பயன்படுத்துகிறார்கள் என்று சொல்லிவிட முடியாது. இஞ்சி, மஞ்சள், பூண்டு போன்ற பாரம்பரியமான உணவுப்பொருள்களின் நன்மைகள் பற்றிய பாரம்பரிய நம்பிக்கைகள் இருக்கின்றன. ஆனால், அவற்றை எப்போதாவது அல்லது நான்கைந்து நாட்கள் உணவில் சேர்த்துக்கொள்வதால் அந்த நன்மை கிடைத்து விடாது. என்றாவது ஒரு நாள் உடற்பயிற்சி செய்வதால் உடல் வலுப்பெற்று விடாது அல்லவா? அதுபோல இப்போது திடீரென்று நிறைய இஞ்சி, மஞ்சள் சேர்த்துக் கொள்வதால் பலனிருக்காது. பாரம்பரிய உணவுகளில் இருக்கிற மூலக்கூறுகள் என்ன, அவை உடலில் செயல்படும் விதம் பற்றி அறிவியல் ஆராய்ச்சிகள் நடத்தப்படா மல் இருப்பது வருத்தத்திற்கு உரியதுதான்.
அந்த ஆராய்ச்சிக்கு நல்லதொரு எடுத்துக்காட்டு சீனாவின் மருந்தாய்வாளர் டூ யூயூ.அவர் அங்கே பாரம்பரியமாக உணவில் சேர்த்து கொள்ளப்படுகிற ஒரு பொருளின் மூலக்கூறுகளைக் கண்டுபிடித்தார்.. மலேரியாவைத் தடுப்பதில் அவை வெற்றிகர மாகச் செயல்படுவதை அறிவியல்பூர்வமாக நிரூபித்தார். அதற்காக அந்தப் பெண்மணிக்கு நோபல் விருது வழங்கப்பட்டது. இந்தியாவின் பாரம்பரிய உணவுப்பொருள்களின் மருத்துவ குணத்தை நிரூபிக்க நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன, ஆனால் ஆராய்ச்சிகளுக்கு உட்படுத்தத் தவறிவிட்டோம். ஜம்முவில் இருக்கிற ஒருங்கிணைந்த மருந்துகளுக்கான ஆராய்ச்சி மையமும், தில்லியில் இருக்கிற மரபணுப் பொறியியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனமும் இணைந்து, ஒரு பழங்குடியினர் பாரம்பரியமாகப் பயன்படுத்தி வருகிற ஒரு மூலிகையின் மூலக்கூறுகள் கிருமிக்கு எதிரானவை என்று சோதனைக்கூட அளவில் நிரூபித்திருக்கிறார்கள், மருத்துவநிலைச் சோதனைகள் தற்போது நடந்து கொண்டிருக்கின்றன. இது போல் அனைத்துப் பாரம்பரிய உணவுப்பொருள்களும் மூலிகைகளும் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படுவது மனிதகுலத்திற்குப் பேருதவியாக இருக்கும்.

ஒரு முறை கொரோனா வந்து குணமாகிவிட்ட வருக்கு மறுபடியும் அந்த நோய் ஏற்படுமா? சிகிச்சை பெற்று வீட்டுக்குத் திரும்பியவரால் அருகில் உள்ள மற்ற வீடுகளில் வசிக்கிறவர்களுக்குப் பாதிப்பு ஏற்படுமா?


இதுவரையிலான ஆராய்ச்சிகள் அதற்கு வாய்ப்பில்லை என்றே தெரிவிக்கின்றன. பொதுவாகப் பல்வேறு நோய்க்கிருமிகள் ஒருவரது உடலில் புதைந்திருக்கவும், அவரிடமிருந்து மற்றவர்களுக்குப் பரவவும் வாய்ப்பிருக்கிறது. பிரிட்டனில் ஒரு பெண்மணி போகிற இடங்களிலெல்லாம் டைபாய்டு காய்ச்சலைப் பரப்பிக் கொண்டிருந்தார் – ஆனால் அவருக்கு டைபாய்டு ஏற்படவில்லை. அவருக்கு “டைபாய்ட மேரி” என்று பெயரே சூட்டினார்கள்! கொரோனா வைரஸ் விலங்கினங்களில் ஒன்றாகிய வௌவாலிடமிருந்து இன்னொரு விலங்கினமாகிய மனிதருக்கு வந்ததென்று கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது. ஆனால் வௌவாலுக்குக் கொரோனாவால் பாதிப்பு இல்லை. அது போலத்தான் மனிதர்கள் விசயத்திலும். உடலுக்குள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் இருந்து, மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் வருகிறபோது வேலையைக் காட்டுகிற வைரஸ்கள் உண்டுதான்.
அதே போலக் கொரோனாக் கிருமி பல ஆண்டுகளாகப் புதைந்திருக்கும், திடீரென்று ஒருநாள், பயங்கர விலங்குக் கதை சினிமாக்கள் போல எழுந்து வந்து நாசம் செய்யும் என்றெல்லாம் சொல்வதற்கு ஆதாரமில்லை.


தடுப்பு மருந்து வந்துவிட்டதாகவும், வரவில்லை என்றும் பல மாறுபட்ட தகவல்கள் பேசப்படுகின்றன.கோவாக்சின் எனப்படும் கொரோனா தடுப்பு மருந்தின் நிலை என்ன..?


உடலில் நுழையக்கூடிய கிருமிகளைச் செயலிழக்கச் செய்வது தான் தடுப்பு மருந்தில் உள்ள பாக்டீரியாவின் வேலை. முதலில் ஒரு  கோட்பாடாக, பின்னர் சோதனைக் கூடத்தில், அதற்குப் பிறகு மருத்துவ நிலையில் என்று பல கட்டங்களில் ஆராய்ச்சிகள் நடைபெறும். ஒவ்வொரு கட்ட ஆராய்ச்சி முடிந்து அதில் ஒரு முடிவுக்கு வந்தபிறகு அடுத்த கட்ட ஆராய்ச்சி தொடங்கப்படும். இறுதியாக, நல்ல நிலையில் உள்ள, இதற்காக முன்வருகிற மனிதர்களின் உடலில் தடுப்பு மருந்தைச் செலுத்தி,  பிறகு நோய்க்கிருமியைச் செலுத்துவார்கள். அவர்களுக்குப் பிரச்சனை  எதுவும் இல்லை என்று உறுதிப்படுத்திய பிறகுதான் நோயாளிகளுக்குப் பயன்படுத்துவதற்காகப் பெரிய அளவில் உற்பத்தி செய்ய அனுமதிக்க ப்படும். இதற்குச் சில ஆண்டுகள் ஆகக்கூடும். இன்றைய உலகளாவிய அவசரத்தையும் அவசியத்தையும் கருதி, ஒரு கட்டச் சோதனை நடக்கிற போதே அடுத்தகட்டச் சோதனையையும் நடத்துகிற ஒரு  நடை முறையை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்தியாவில் இரண்டு நிறுவனங்கள் கொரோனா தடுப்பு மருந்தாக உருவாகக் கூடிய ஒரு முன்வடிவ மருந்தை உருவாக்கியிருக்கின்றன. உலக அளவில் 145 தடுப்பு மருந்து ஆராய்ச்சிகள் பல்வேறு நிலைகளில் இருக்கின்றன. அவற்றில் 125 ஆராய்ச்சிகள் “ப்ரீ-கிளினிக்கல் டிரையல்” என்ற மருத்துவ நிலைக்கு முந்தைய கட்டத்திற்கு வந்திருக்கின்றன.


கொரோனா கிருமி இயற்கையாக வந்ததல்ல, ஒரு சோதனைக்கூடத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்டது என்று சொல்லப்படுவது எந்த அளவுக்கு உண்மை..?


அப்படித் திட்டவட்டமாகச் சொல்வதற்கான ஒரு ஆதாரம் கூட இதுவரையில் வரவில்லை. வௌவால், பாங்கோலின் ஆகிய இரண்டு விலங்குகளின் உடலில் இந்த வைரஸ் இருந்து வந்திருக்கிறது. அந்த விலங்குகளிடம் இருந்து தான் மனிதர்களுக்கு வந்திருக்கிறது. அதுவும் நேரடியாக வௌவாலிடமிருந்தோ பாங்கோலினிடமிருந்தோ மனிதரைத் தொற்றியதாகச் சொல்ல முடியாது. இடையே வேறொரு விலங்குகூட இருந்திருக்கலாம். செயற்கையான தயாரிப்பு என்பதற்கு அறிவியல் பின்னணி இருப்பதாகத் தெரியவில்லை, அரசியல் பின்னணிதான் இருப்பதாகத் தெரிகிறது. ஆகவே, இந்தப் புரளியை நாம் தள்ளுபடி செய்துவிடலாம்.


வெளியே சென்றுவரும் போது தலையில் விழக்கூடிய வைரஸ், நாம் குளிக்கிறபோது நழுவி வந்து மூக்கின் வழியாக நுரையீரலுக்குப் போக வாய்ப்பிருக்கிறதா?  தொற்று வாய்ப்புச் சூழலில், காலை நடைபயிற்சிக்கு செல்லலாமா? எப்படிப்பட்ட முன்னெச்சரிக்கைகள் தேவை..?


மூக்கு வழியாக வைரஸ் வெளியே வருவது போல, மூக்கு வழியாகவே தான் உள்ளேயும் போகிறது. தலை ஒரு வெளிதான் என்பதால்  அதன் மேல் வைரஸ் படிந்து, குளிக்கும்போது முகத்துக்கு வருமா என்றால், வரவே வராது என்று ஒரேயடியாகச் சொல்வதற்கில்லை. ஆனால் அதற்கான வாய்ப்பு மிகமிகக் குறைவு. நடைபயிற்சி, ஓட்டப்பயிற்சி தாராளமாகச் சென்று வரலாம். கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டிருக்கும் இடங்களையும், நெரிச லான பகுதிகளையும் தவிர்ப்பது நல்லது. எப்போது வெளியே சென்று வந்தாலும் முகக்கவசம் அணிந்து கொண்டால் பெருமளவுக்குத் தொற்றைத் தடுக்கலாம். காதில் மாட்டிக்கொள்கிற நாடா வளையத் தோடு வருகிற முகக்கவசங்களைவிட, கைக்குட்டை, பனியன்  துணி  போன்றவற்றை முகத்தில் மூக்கையும் வாயையும் மறைத்துச் சுற்றி, தலையின் பின்னால் கட்டிக்கொள்வது மிகச்சிறந்த வழி.டூ வீலர்  ஓட்டுகிற பெண்கள் துப்பட்டாவால் மறைத்துக் கொள்கிறார்களே, அதுவும் நல்ல  வழிமுறைதான். அதிக விலையில் வருகிற வால்வு வைத்த முகக்கவசங்களை விட இவற்றுக்குச் செலவு குறைவு, பயனும் கூடுதல். முகக் கவசமோ, கைக்குட்டையோ, துப்பட்டாவோ எதுவானாலும், முகப்புப் பகுதியில் கையால் தொடாமல் காது நாடாக்களை அல்லது  பின்புறம் கட்டியிருக்கிற முனைகளைப் பிடித்துக் கழற்ற வேண்டும். முகப்பில் ஒருவேளை கிருமி படிந்திருக்குமானால், கைவிரல்களில் தொற்றி, பிறகு நாம் முகத்தைத் தொடுகிறபோது மூக்கில் இறங்கக் கூடும். முகக்கவசத்தை அப்படியே மேசையில் போட்டுவிடுவதும் தவறு. அந்த இடத்தை நாமும், மற்றவர்களும் தொடுவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது. முகத்திலிருந்து கழற்றியதும் சோப்பு நீரில் போட்டுவிட வேண்டும். பிறகு உலர வைத்துப் பயன்படுத்தலாம். கைகளை சானிடை சர், சோப்புப் போட்டு நன்றாகக் கழுவிக்கொள்வதும் முக்கியம்.


தெருவில் பீய்ச்சித் தெளிக்கப்படுகிற கிருமிநாசினியை வீட்டுச் சுவர்களில் பீய்ச்சலாமா..?


எந்த இடத்தில் தெளிக்கிறோம் என்பது முக்கியம். நம் கைகள் படக்கூடிய இடங்களில் முக்கியமாகத் தெளிக்க வேண்டும். தெருவில் கிருமிநாசினி தெளிப்பது ஒரு விரிந்த ஏற்பாடு. அதை வீட்டுச் சுவரில் அடிப்பதால்  பெரிய பலனில்லை.மேசை மேல் தெளிப்பதும் சரியல்ல. யாராவது மேசையைத் தொடுகிறபோது கைகளில் எரிச்சல், கண்ணெரிச்சல் ஏற்படலாம். தோல் பாதிப்புகள் உள்ளவர்களுக்குக் கூடுதல் சிக்கல் வரலாம். மேசையையும் சுவரையும் சோப்பு கரைத்த நீரால் துடைத்துவிடுவதே பயனுள்ளது.


அறிவியல் இந்த அளவுக்கு வளர்ந்துள்ள போதிலும், கொரோனா தாக்கத் தொடங்கி 6 மாதங்களாகியும், ஏன் இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை? இதற்கு மருந்தே இல்லையா?


உலகில் மருந்து கண்டுபிடிக்கப்படாத ஏராளமான நோய்கள் இருக்கின்றன. ஆனாலும் ஆராய்ச்சியாளர்கள் முயற்சிகளை நிறுத்திக்கொள்ளவில்லை. முதலில், ஏற்கெனவே இதே போன்ற நோய்களுக்குத் தரப்பட்டு வரும் மருந்துகளைத்தான் சோதித்துப் பார்ப்பார்கள். அதிலிருந்து அடுத்தடுத்த முயற்சிகளுக்குச் செல்வார்கள். சில நோய்களுக்கு விரைவில் மருந்துகள் கிடைத்து விடுகின்றன. சில நோய்களுக்கு அதிகக் காலமாகிறது. தற்போது கோவிட்-19க்குப் பயன்படுத்தப்படுகிற மருந்துகள், அந்த  நோயால் ஏற்படக்கூடிய கடுமையான வீக்கம் போன்ற பாதிப்புகளைக் கட்டுப்படுத்தக்கூடியவை. மருத்துவர்கள் தங்கள் சொந்த அனுபவத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட ஒரு மருந்து பலனளிப்பதாகக் கருதினால், அதைப் பயன்படுத்திப் பார்க்க சட்டப்பூர்வ வழி இருக்கிறது.
சென்னை யில் ஒருவர் கோவிட்-19 நோய்க்கு உள்ளான தனது தந்தையை மருத்துவ மனையில் சேர்த்தார். அதிகபட்சமாகப் பலனளிக்கிற ஒரு மருந்து பற்றி மருத்துவர்கள் சொன்னார்கள். அதன் விலை ஒரு லட்சத்து  15 ஆயிரம் ரூபாய்! அதே மருந்து ஹைதராபாத்தில் 95 ஆயிரம் ரூபாய்க்குக் கிடைப்பது தெரியவந்தது. இரவோடு இரவாக அவரே தனது மோட்டார் பைக்கில் சென்று அதை வாங்கிவந்தார், தந்தை குணமடைந்தார். மருத்துவமனையிலிருந்து இன்சூரன்ஸ் தொகை போக 6 லட்சம் ரூபாய்க்கு பில் வந்தது! முன்பு பிரிட்டனில் வேறொரு கடுமையான நோய்க்காகக் கண்டு பிடிக்கப்பட்ட இன்னொரு மருந்து இப்போது கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்துவதில் பெருமளவுக்குப் பலனளிக்கிறது. அதன் விலையும் மலிவு. மருந்துக் கடைகளில் எளிதில் கிடைக்கிறது. ஆனால் அதையும் மருத்துவர்கள் ஆலோசனைப் படி தான் பயன்படுத்த வேண்டும். முழுமையாகச் சோதிக்கப்பட்ட, நன்றாகப் பலனளிக்கிற சரியான மருந்துகள் வருவதே முக்கியம். அது எல்லோருக்கும் கட்டுப்படியாகக் கூடியதாகவும் இருக்க வேண்டும். அவசரப்படுவது சரியல்ல.


இரண்டு பேருக்கு ஒரே வயது, இருவருக்குமே ஒரே மாதிரியான உடல் ஆரோக்கியம் என்று இருந்தும் ஒருவருக்கு கொரோனா தொற்று சாதாரணமானதாக இருக்கிறது, இன்னொருவருக்குக் கடுமையாக இருக்கிறது. ஏன்?


உடலுக்குள் புகுந்த வைரஸ் எண்ணிக்கையைப் பொறுத்து பாதிப்பில் மாறுபாடு இருக்கலாம். குறைவான எண்ணிக்கையில் புகுந்திருந்தால் குறைவான செல்களுக்குள் நுழைந்து குறைவான பாதிப்பை ஏற்படுத்தும், மிக அதிகமாகப் புகுந்திருந்தால் ஏராளமான செல்களைப் பாதித்துக் கடுமையான விளைவை ஏற்படுத்தக்கூடும். நோய் எதிர்ப்புத்திறன் மிகுதியாக இருக்கிறவருக்கு பாதிப்பு குறைவானதாக ஏற்படலாம். நோய் எதிர்ப்புத் திறன் குறைவாக உள்ளவருக்குக் கடுமையான பாதிப்பு ஏற்படலாம். குறைவாகவோ, நடுத்தரமாகவோ பாதிப்பு உள்ளவர்கள் விரைவில் குணமடைகிறார்கள். கடுமையான பாதிப்பு ஏற்பட்டவர்களுக்குத் தீவிர சிகிச்சை தேவைப்படுகிறது.


உலகம் முழுவதும் இரண்டாவது அலை கொரோனா வரும் என்ற அனுமானம் முன் வைக்கப்பட்டிருக்கிறது. அப்படி இரண்டாவது அலை வருமென்றால் எப்போது வரும்?


முதல் அலையே ஓய்ந்தபாடில்லை, இதில் இரண்டாவது அலையை எப்படி அனுமானிப்பது?கடற்கரையில் அலைகள் வருவதை ஓரளவுக்குக் கணக்கிடலாம். ஏனென்றால் அது திரும்பத் திரும்ப நிகழ்கிறது. நாளை காலையில் சூரியன் உதிக்கும் என்று எதை வைத்துச் சொல்கிறோம்? அது சுழல்முறையில் தொடர்ச்சியாக நிகழ்வதால் சொல்கிறோம். பெருந்தொற்றுகள் அப்படி சுழல்முறையில் ஏற்படுவதில்லை. இரண்டாவது அலை வரவே வராது என்றும் ஆராயாமல் சொல்லி விடக்கூடாது. வாய்ப்பு இருக்கிறதா என்றால் இருக்கிறது. எப்போது வரும், எந்த அளவுக்கு வரும் என்றெல்லாம் சோதிடம் கணிப்பதற்கில்லை.


இந்தியாவில் வரும் பிப்ரவரி மாத வாக்கில் 20 கோடிப்பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கும், தினமும் 2 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள் என்று ஒரு ஆய்வறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறதே..?


கணிதமுறை மாதிரியமைப்புகளையும் புள்ளிவிவரங்களையும் அடிப்படையாகக் கொண்டுதான் இப்படிப்பட்ட கணிப்புகளுக்கு வரவேண்டும். ஒரு பந்தைத் தூக்கிப் போடுகிறோம் என்றால் நியூட்டன் விதி அடிப்படையில், அதன் தொடக்க வேகம், திசை போன்றவற்றை வைத்து அது எங்கே விழும் என்று நம்மால் கணிக்க முடியும். கிருமித் தொற்றுகளைப் பொறுத்தவரையில் ஏற்கெனவே வந்த கிருமிகளின் தாக்கங்கள் பற்றிய விவரங்களை வைத்து மதிப்பிடுவோம். கோவிட்-19  கிருமி புதியது.அதற்கு முன்மாதிரி எதுவும் கிடையாது. தொற்று வேறு, அது நோயாக மாறுவது வேறு. எந்த அறிகுறியும் இல்லாமலே கூட பலருக்குக் கொரோனா தொற்று இருக்கும். அந்த ஆய்வறிக்கை அறிவுப்பூர்வமானதல்ல என்று தள்ளிவிடவும் முடியாது. என்ன மாதிரியான கணித மாதிரிகளைக் கையாண்டார்கள் என்பதை வைத்துத்தான் மதிப்பிட முடியும். மாறுபட்ட இயற்கைச் சூழல்கள் உள்ள மிகப்பெரிய நாடான இந்தியாவில் ஒரே மாதிரியான பாதிப்பு, இத்தனை பேருக்கு ஏற்படும் என்று கணிக்க முடியுமா? ஒரு குறிப்பிட்ட வட்டாரத்திற்கான தகவல்களை அடிப்படையாக் கொண்டு, வரும் நாட்களில் அங்கே இத்தனை பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று ஓரளவு க்குச் சொல்ல முடியும். நாடு தழுவிய அளவில் சொல்வது கடினம். அதைக் கூட, அடுத்த மாதத்திற்கான கணிப்பாகக் கூறினால் கவனிக்கலாம், ஆறு மாதத்திற்குப் பிறகு வரக்கூடியதாகச் சொல்வதை ஏற்கவியலாது.


காய்கறிகள் வாங்குகிறோம், அவற்றின் மேல் கொரோனா கிருமிகள் இருக்குமா? கொசு, பூச்சிகள் மூலமாகக் கொரோனா பரவுமா?


காய்கறிகளை சமைத்துதான் உண்கிறோம் என்பதால் பிரச்சனையில்லை. கொத்தமல்லி, கருவேப்பிலை போன்றவற்றையும் கூட  சமையலில் கடைசியாகப் போடாமல் முதலிலேயே போட்டு கொதிக்க வைப்பது நல்லது. பச்சையாகவே உண்ணும் காய்கறிகளைப் பொறுத்த வரையில் பொதுவாக நன்றாகக் கழுவிவிட்டுத்தான் சாப்பிடுவோம். இப்போது அதைக் கண்டிப்பாகச் செய்தால் போதும். கொசு பற்றிய  பொதுவான எச்சரிக்கை எப்போதுமே தேவை. டெங்கு முதலியவை கொசுவால்தான் பரவுகின்றன. ஆனால் கொரோனாவுக்கும் கொசுவுக்கும் சம்பந்தமில்லை. மற்ற பூச்சிகள் பற்றியும் எப்போதும் போன்ற கவனம் இருந்தால் போதும்.


‘ஆர்நாட் (R 0)’, ‘ஹெர்ட் இம்யூனிட்டி’ என்றெல்லாம் பேசப்படுவது என்ன? வெளியே செல்லாமல் வீட்டிலேயே இருக்கிறவர்களுக்கும் தொற்று ஏற்படுவது எப்படி?


தொற்று ஏற்பட்ட ஒருவர், தன்னிடமிருந்து எத்தனை பேருக்குத் தொற்றைப் பரப்புகிறார் என்பதே ‘ஆர்நாட்’. ஊரடங்குக் கட்டுப்பாடுகள் இல்லாத நிலையில் ஒருவரிடமிருந்து இரண்டுபேருக்கு அல்லது அதிக பட்சமாக மூன்று பேருக்குப் பரவக்கூடும். தொற்று ஏற்பட்டவர்களில் 20 சதவீதம் பேர் தான் இப்படிப் பலருக்கும் பரப்புகிறவர்களாக இருக்கிறார்கள். மற்ற 80 சதவீதத்தினர் அப்படிப் பரப்புவதில்லை. அதற்கு ஊரடங்கால் பெரும்பாலோர் வெளியே செல்வதில்லை, முகக்கவசம் பயன்படுத்துகிறார்கள், இடைவெளி விட்டு நின்று பேசுகிறார்கள் என்பதெல்லாமும் ஒரு காரணமாக இருக்கலாம்.
ஹெர்ட் இம்யூனிட்டி என்பது ஒரு சமூகமாகவே தொற்றுத் தடுப்புத் திறனோடு இருப்பதைக் குறிக்கிறது. உதாரணமாக, பெரியம்மை தடுப்பு மருந்து வந்த பின் அடுத்தடுத்த தலைமுறைகளில் அந்த நோய் பெருமளவுக்கு இல்லாமலே போய்விட்டது. அதுபோல முந்தைய தொற்றுகளாலும் தடுப்பு மருந்துகளாலும் உடலில் இயற்கையான நோயெதிர்ப்புத் திறன் கூடுதலாக உள்ள தலைமுறைகள் உருவாவதை ஹெர்ட் இம்யூனிட்டி என்கிறார்கள்.
கொரோனாவிலிருந்து எப்போதுதான் விடுதலை கிடைக்கும்?
கொரோனாவை விடவும் நம்மை அடக்கி வைத்திருக்கிற பல கொடுமைகளிலிருந்து நாம் விடுதலை பெற வேண்டியிருக்கிறது. கொரோனா அனுபவத்திலிருந்து அந்த விடுதலைக்கான முயற்சிகளையும் மனிதகுலம் மேற்கொள்ளட்டும். ஒரு ஆராய்ச்சி, நியாண்டர்தால் போன்ற சில ஆதி மனிதக் குழுக்களில் கொரோனா வைரஸ் இருந்ததற்கான தடயம் இருப்பதாகத் தெரிவிக்கிறது. கொரோனாவை வெல்வதில் இப்படிப்பட்ட ஆராய்ச்சிகளும் பங்களிக்கக் கூடும். உடனே இது போய்விடாது. மருந்து கண்டுபிடிக்கப்பட்டு விட்ட பிறகும் பல நூறு கோடி அளவில் தயாராகிப் புழக்கத்திற்கு வர வெகு காலம் ஆகும். இதைப் புரிந்து கொண்டு அனைவரும் முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவது, சமூகமாகப் பொறுப்புணர்வது, தனி மனிதர்களாகவும் பங்களிப்பது என முன்வர வேண்டும். ஊரடங்கை அடக்கி வைக்கிற சட்டம்-ஒழுங்கு நடைமுறையாக இல்லாமல் குடிமக்களுக்கு இணக்கமான செயல்முறையாக அரசாங்கம் கையாள முடியும். ஊரடங்கை அறிவார்ந்த முறையில் கையாளும் நாடுகளிடமிருந்து அனுபவங்களைப் பெற்று இங்கேயும் செயல்படுத்த முடியும். அறிவியலாளர்கள், மக்களிடையே கொண்டுசெல்லக்கூடிய எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் போன்ற அறிவியல் தகவல் தொடர்பாளர்கள் உள்பட ஊர் கூடி இழுத்தால், கொரோனா விடுதலையை நோக்கியும் தேர் நகரும்.


(பல்வேறு மொழிகளையும் சேர்ந்த அறிவியலாளர்கள் இணைந்து உருவாக்கியுள்ள ஐஎஸ்ஆர்சி அமைப்பின் இந்தக் காணொலி உரையாடலை யூ-டியூப் தளத்தில் முழுமையாகக் காணலாம். www.indscidncecovid.in என்ற வலைத்தளத்தில் வெளியீடுகளை இலவசமாகப் பெறலாம்.)


தொகுப்பு: தோழர் அ.குமரேசன் நன்றி: தீக்கதிர் நாளிதழ்

Leave a Reply

Top