You are here
Home > அறிவியல் வெளியீடுகள் > நூல் அறிமுகம் : நீங்களும் உங்கள் சுற்றுச்சூழலும் – தேனி சுந்தர்

நூல் அறிமுகம் : நீங்களும் உங்கள் சுற்றுச்சூழலும் – தேனி சுந்தர்

படிப்பறிவில்லாத ஏழை மக்கள் வாழ்வதற்கான திறன்கள் மற்றும் பிழைத்திருப்பதற்கான உத்திகள் குறித்துத் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட்டவர் பிரெஞ்சு நாட்டு விஞ்ஞானி யோனா பிரீட்மேன்.. அவர் ஒரு கருத்தை மக்கள் மனதில் ஆழமாக பதிய வைப்பதில் ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளை விடச் சிறந்தது என்கிற நம்பிக்கையுடையவராக இருந்தார். சுற்றுச்சூழல் கல்வி, சுயதிட்டமிடல், சமையலறைத் தோட்டங்கள், உணவுகளைப் பாதுகாப்பது, உடல்நலம், பாதுகாப்பான குடிநீர் எனப் பல தலைப்புகளில் 300க்கும் மேற்பட்ட படப்புத்தகங்களை உருவாக்கியுள்ளார்.. அவற்றில் ஒன்று தான் நீங்களும் உங்கள் சுற்றுச்சூழலும் என்கிற இந்தப் புத்தகம்..

நூற்றுக்கும் மேற்பட்ட சிறு சிறு படங்கள்.. படங்களின் அருகிலேயே எளிமையான சிறு சிறு வாக்கியங்கள்.. குழந்தைகள், பெரியவர்கள், சூழலியல் செயல்பாட்டாளர்கள் என அனைவரும் அந்நூலை வாசிப்பிற்கும் வழிகாட்டலுக்கும் பயிற்சி அளிக்கவும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.. அவரவர் சுற்றுச்சூழலை எவ்வாறு பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.. கழிவுகளையும் களைகளையும் எப்படிச் செல்வமாக மாற்ற முடியும்.. மனிதக் கழிவிலிருந்து உரம், விவசாயத்திற்காக காடுகளை அழிக்காமல் எப்படி பண்ணைக்காடுகள் அமைப்பது, எத்தகைய பயிர்களைத் தேர்வு செய்ய வேண்டும், தரிசு நிலம் மற்றும் உவர் நிலங்களில் எப்படி நீராதாரம் பெருக்குவது என பல வழிகாட்டுதல்களை வழங்குவதாக இந்நூல் விளங்குகிறது.. 


நாம் பயன்படுத்தும் ஆடையை அழுக்காக்கி பின் மீண்டும் தூய்மைப்படுத்துவதற்கே நாம் மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கிறது.. கூடுமானவரை அழுக்குப் பிடிக்காமல் ஆடையைப் பயன்படுத்துவதே அதற்கு நல்ல ஆலோசனையாக இருக்க முடியும். அதுபோல தான் சூழல் சீர்கேடு அடைந்த பிறகு நிலம், நீர், காற்றை மீட்டெடுக்கப் போராடுவதை விடவும் மிக எளிமையான வழி அவற்றை ஆரோக்கியமான வழிகளில் மாசுபடாமல் பயன்படுத்துவதே ஆக்கப்பூர்வமான ஆலோசனை.

சூழலியல் குறித்த சிந்தனை அரசு மற்றும் அமைப்புகளின் சிந்தனையாகவும் செயல்பாடாகவும் மட்டுமல்லாமல் ஒவ்வொரு குடிமகனின் அன்றாட மனித வாழ்க்கையில் இயல்பான சிந்தனையாக விளங்க வேண்டும்.. ஒரு தனிமனிதன் தன்னுடைய வாழ்விலும் தன் சுற்றுப்புறத்திலும் சூழலைக் காப்பதோடு மட்டுமின்றி சுற்றுச் சூழல் சீர்கேட்டை ஏற்படுத்தும் நிறுவனங்களைக் கண்காணிக்க வேண்டும்.. அவர்கள் தங்களைச் சரிசெய்துகொள்ளும் வரை அந்நிறுவனத்தின் உற்பத்திப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்பன போன்ற ஆலோசனைகளும் முன்வைக்கப்படுகின்றன..


இருபத்தோராம் நூற்றாண்டின் கால்வாசி முடியப்போகிறது.. அறிவியலால் பிரமிப்பூட்டும் வகையில் பல வசதிகளைப் பெற்றிருக்கிறோம் என்ற போதிலும் அனைத்து மக்களின் அன்றாடத் தேவைகள் எட்டப்பட்டுள்ளனவா என்கிற கேள்வி எழுகிறது. நாட்டின் மக்களிடையேயும் நாடுகளிடையேயும் காணப்படும் ஏற்றத்தாழ்வுகள் நிச்சயம் மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை. உலகெங்கும் பல்லாயிரக்கணக்கான அணு ஆயுதங்கள் தயாரித்து வைக்கப்பட்டுள்ளன.

நாடுகளிடையே ஆயுத பேரங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. உலகம் முழுவதுக்கும் நாளொன்றுக்கு 1 பில்லியன் டாலர்கள் ஆயுதங்களுக்காக செலவிடப்படுகின்றன. லட்சக்கணக்கான மக்கள் ஒவ்வொரு நாளும் பசியோடு தூங்கச் செல்கின்றனர். பல கோடி மக்களுக்கு இன்னும் நல்ல குடிநீர் வசதி கிடைக்கப்பெறவில்லை என்ற போதிலும் விஞ்ஞானிகளும் வல்லுநர்களும் ஆயுத தயாரிப்புகளுக்கான ஆராய்ச்சிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.


பெருகி வரும் ஆற்றல் தேவைகளை ஈடுகட்ட இருக்கின்ற வளங்கள் அனைத்தும் சுரண்டி எடுக்கப்படுகின்றன. அதன் விளைவாக சுற்றுச்சூழல் வெகுவாகப் பாதிக்கப்படுகிறது. இயற்கைப் பேரிடர்கள் ஏற்படுகின்றன. சூழலியல் சுமைகளும் கூட ஏழை நாடுகளின் மீதே ஏற்றி வைக்கப்படுகின்றன. நூலின் முன்னுரையில் கூறப்படும் பல விசயங்கள் நாம் ஒவ்வொருவரும் ஆழ்ந்து சிந்திக்கத்தக்கது..

தொடக்க வகுப்பு குழந்தைகள் கூட எளிதாகப் படிக்க முடியும்.. குழந்தைகள் படித்தால் ரசிப்பார்கள்.. பெரியவர்கள் படித்தால் சிந்திப்பார்கள்.. செயல்படுவார்கள்.. இந்த கொரனா காலச் சூழலில் பெற்றோரும் குழந்தைகளும் இணைந்து படிக்கலாம்.. செயல்பாடுகளை அவர்கள் வீட்டுத் தோட்டத்திலும் மாடித்தோட்டத்திலும் இருந்து தொடங்கலாம்..

சூழலியல் சிந்தனையை குடும்பங்களில் இருந்து வளர்த்தெடுக்கலாம். அன்றாட வாழ்வில் இயல்பான சிந்தனையாக உணர்வாக சூழலியல் குறித்து விழிப்புணர்வு மாற வேண்டும். 
நமது சுற்றுச்சூழலைக் கட்டிக்காப்பது நமது கடமை.. எதிர்கால சந்ததியினருக்கு நமது பூமி வாழத்தக்கதாக இருக்க வேண்டும். இயற்கை வளங்களை முற்றிலுமாக கபளீகரம் செய்துவிடாமல் இயற்கையுடன் இசைபட வாழ உறுதியேற்போம்..  

இந்நூலை தமிழில் சி.எஸ்.வெங்கடேஸ்வரன் எழுதியுள்ளார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் அறிவியல் வெளியீடுகள் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. விலை ரூ.75/-

தேனி சுந்தர்

Leave a Reply

Top