You are here
Home > இயக்கச் செய்திகள் > குழந்தைகளின் சத்துணவுத் திட்டம் மற்றும் சுகாதார திட்டங்களை தொடர்ந்து நடைமுறைப் படுத்த வேண்டும்..

குழந்தைகளின் சத்துணவுத் திட்டம் மற்றும் சுகாதார திட்டங்களை தொடர்ந்து நடைமுறைப் படுத்த வேண்டும்..

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அரசுக்கு வேண்டுகோள்

கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இன்னும் எத்தனை மாதங்கள் இந்த நிலை நீடிக்கும் என்று சொல்ல இயலாது. கற்றல் கற்பித்தலில் தடை, நீண்ட இடைவெளி ஒரு பிரச்சினை தான் என்றாலும் அதனைத் தவிர்க்க இயலாது. அதே நேரம் மீட்டெடுக்க வாய்ப்புகள் உள்ளது.

ஆனால், அதைவிட பிரம்மாண்டமான பிரச்சினையாக இருப்பது பள்ளிக்குழந்தைகளுக்கு சத்துணவு தருவதில் ஏற்பட்டுள்ள தடை மற்றும் நீண்ட இடைவெளி ஆகியவை ஆகும். மூன்று மாதம் சத்துணவு கிடைக்காத குழந்தைகள் எவ்வாறு தமது நோய் எதிர்ப்புச் சக்தியினை உயர்த்திக் கொண்டு கோவிட் 19க்கு எதிராக போராட இயலும். மேலும் சத்துணவின்மையால் எதிர்காலத்தில் அவர்கள் கற்றல் கற்பித்தல் பாதிக்கப்படும் அபாயமும் உற்றுநோக்கத் தக்கது.

பள்ளிகள் செயல்படவில்லை என்றாலும் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் மதிய உணவுத் திட்டம் தொடர்கிறது. இந்தியாவிலும் கூட கேரளா, பீகார், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், கர்நாடகா, ஹரியானா, சத்தீஸ்கர், ஒடிசா, உத்தரகாண்ட், ஆந்திரா, அசாம்,ஜம்மு காஷ்மீர்….. போன்ற பல்வேறு மாநில அரசுகள் பள்ளி வேலை நாட்களை கணக்கில் கொண்டு அந்நாட்களுக்கான சமைத்த உணவையோ, உணவு தயாரிப்பதற்கான பொருட்களையோ, சமைப்பதற்கு ஆகும் செலவு தொகையையோ அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் குழந்தைகளுக்கும் கொண்டுசேர்ப்பதை உறுதிப்படுத்தி செயல்பட்டு வருகின்றன.

இந்தியாவில் 12 கோடி குழந்தைகள் சத்துணவு திட்டம் மூலம் பள்ளியில் உணவு பெறுகின்றனர். இத்தனை பெரிய எண்ணிக்கை குழந்தைகள் ஏற்கனவே உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள சூழலில் சத்துணவின்மையாலும் பாதிக்கப்படுவது கவலைக்குரிய அம்சமாகும். இப்படிப்பட்ட குழந்தைகள் ஏற்கனவே சிரமங்களில் உழலும் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்பது சொல்லிப் புரியவேண்டியதில்லை.

எந்தக் குடும்பங்களுக்கு வேலையிழப்பும் வருவாயின்மையும் வாழ்வாதாரமின்மையும் பெரிய பிரச்சினையாக உள்ளதோ, அதே குடும்பங்களைச் சார்ந்த குழந்தைகள் தான் அரசின் சத்துணவுத் திட்டத்திலும் இதுவரை பயனடைந்து வந்துள்ளார்கள். பள்ளி நாட்களில் குறைந்தபட்சம் ஒரு வேளையாவது ஊட்டச்சத்து கிடைப்பதற்கு சத்துணவு திட்டம் உத்தரவாதம் தந்தது. தற்போது அதற்கும் வாய்ப்பில்லாமல் உள்ளது. எனவே குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பான இப்பிரச்சனை தொடர்வதை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கவலையோடு சுட்டிக்காட்ட விரும்புகிறது.

தற்போது குழந்தைகளுக்கு சத்துணவிற்கான தொகையை அக்குழந்தைகளின் பெற்றோர்களுக்கு நேரடியாக வழங்குவதற்கான முயற்சிகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளதாக அறிய முடிகிறது. குழந்தைகளின் சத்துணவிற்காக அரசால் ஒதுக்கப்படும் தொகை மிகவும் குறைவானது என ஏற்கனவே விமர்சிக்கப்பட்டு வரும் சூழலில் அத்தொகை பெற்றோரின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படுமாயின் அக்குடும்பத்தின் வேறு சில முன்னுரிமைகளுக்கு செலவிடப்படும் அபாயமும் உள்ளது என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்..

எனவே நேரடியாக சத்துணவிற்கான தொகையினை நேரடியாக வங்கிக்கணக்கில் செலுத்தும் இம்முறையைக் கைவிட வேண்டும் எனவும் ஏற்கனவே உள்ள பள்ளி அமைப்பு முறையின் மூலமாகவே வழக்கமான சத்துணவு ஏற்பாடுகளை உரிய அலுவலர்களைக் கொண்டு செயல்படுத்தப்பட வேண்டும் எனவும் கொரனாத் தொற்றைத் தடுப்பதற்கான தனிமனித இடைவெளி, முகக்கவசம், சோப்பு போன்ற உரிய ஏற்பாடுகளுடன் நடைமுறைப் படுத்தப்பட வேண்டும் எனவும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தமிழக அரசை வலியுறுத்துகிறது.

மேலும் வளரிளம் குழந்தைகளுக்கான நாப்கின்கள் மற்றும் இதர குழந்தைகளுக்கான இரும்புச்சத்து மாத்திரைகள் மற்றும் குடற்புழுநீக்க மாத்திரைகள் போன்றவற்றைத் தொடர்ந்து உரிய கால இடைவெளியில் அரசு வழங்கிட வேண்டும் எனவும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்துகிறது..

மேற்கண்ட நடவடிக்கையைச் செயல்படுத்துவதற்காக பின்வரும் ஆலோசனைகளையும் அரசின் பரிசீலனைக்கு முன்வைக்கிறோம்..

  1. பெரும்பாலான துவக்கப் பள்ளிகளில், நடுநிலைப்பள்ளிகளில் பள்ளி வளாகத்தில் வழக்கம் போல் சமைக்கலாம். பின்னர் இந்த உணவை வழக்கமான முட்டை உள்ளிட்டவற்றுடன் இணைத்து வீதிக்கு ஒரு பெற்றோர் / தன்னார்வலர் மூலம் வழங்க முயற்சிக்கலாம். . ஏற்கனவே பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களில் 40 வயதிற்கு உட்பட்டவர்களை தேர்ந்தெடுத்து அவர்கள் உதவியுடன் வழங்கலாம்..
  2. சென்னை போன்று கொரோனா பரவல் பிரச்சினை உள்ள பகுதிகளில் அந்தந்த தெருக்களிலேயே ஆர்வமுள்ள பெற்றோர்கள்/ தன்னார்வலர்களைப் பயன்படுத்தி சமைத்து வழங்க முன்வரலாம்
  3. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திலுள்ள பணியாளர்களைக் கூட இப்பணிகளில் ஈடுபடுத்தலாம்.

எஸ் .சுப்பிரமணி
பொதுச் சயலாளர்
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

Leave a Reply

Top