You are here
Home > அறிவிப்புகள் > கொரோனா பற்றிய தவறான தகவல்களை களைய அறிவியல்பூர்வ செய்திகளை கொண்டுசெல்லுக..!

கொரோனா பற்றிய தவறான தகவல்களை களைய அறிவியல்பூர்வ செய்திகளை கொண்டுசெல்லுக..!

தமிழக முதல்வருக்கு அறிவியல் இயக்கம் கடிதம்

மக்கள் மத்தியில் உலவும் கொரோனா பற்றிய தவறான மூடநம்பிக்கைகளை களைவதற்கு அரசு சாரா தொண்டு நிறுவனங்களையும், தன்னார்வ அமைப்புகளையும் சரியான முறையில் கண்டறிந்து, அறிவியல்பூர்வமான தகவல்களை கொண்டு செல்ல அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அறிவியல் இயக்கத்தின் சார்பில் மாநிலப் பொதுச் செயலாளர் எஸ்.சுப்ரமணி, முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

 கொரோனா பாதிப்பு ஏற்படத் தொடங்கிய நாளிலிருந்தே தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக கொரோனா பற்றிய விழிப்புணர்வு, அதனை ஒட்டி எழும் மூடநம்பிக்கைகள், வதந்திகள் மற்றும் பீதியை அகற்றுதல் ஆகிய பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம். உலகம் முழுவதும் இயங்கி வருகின்ற மக்கள் ஆரோக்கிய இயக்கத்தோடும் ஒத்திசைந்து பணியாற்றி வருகிறோம். இந்த நேரத்தில் கீழ் காணும் கோரிக்கைகளை தங்கள் உடனடி கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

மே 3 ஆம் தேதிக்கு மேல் ஒட்டு மொத்த ஊரடங்கை கைவிட வேண்டும். தொற்று இருக்கும் இடங்களை மட்டுமே தனிமைப்படுத்துதல் கண்காணிப்பை தீவிரப்படுத்துதல் அந்தப் பகுதியில் உள்ள அனைவரையும் பரிசோதித்தல் என்ற நிலைக்கு கொண்டு வர வேண்டும். இதர பகுதிகளில் பொருளாதார செயல்பாடுகள் தொடர வேண்டும். பொது விநியோகம் மூலம் விநியோகம் செய்யப்படுகிற பொருட்களை இரண்டு மடங்காக அதிகரிக்க வேண்டும். அனைத்து தனியார் மருத்துவ மனை களின் பயன்பாட்டையும் கொரோனா நோய்த்தொற்று கட்டுப்படுத்தும் காலம் வரை நேரடி அரசுக் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும்.

மருத்துவமனைகளில் செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் என கொரோனா நோய் தொற்று உள்ளவர்களை கையாளும் அனைவருக்கும் தற்காப்பு சாதனங்களை தரமானதாக, போதுமான அளவு வழங்க வேண்டும். மக்களோடும் மருத்துவர்களோடும் களப் பணியில் ஈடுபட்டிருக்கிற பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நண்பர்களுக்கும் போதுமான பாதுகாப்பு கவசங்களையும் உபகரணங்களையும் வழங்கி பாதுகாக்க வேண்டும்.

சாத்தியமான அனைத்தையும் தமிழ் நாட்டிலேயே போர்க்கால அடிப்படையில் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  ஒடிசா அரசு அறிவித்துள்ளது போல கொரோனா சேவையில் ஈடுபட்டு மரணம் அடைய நேரிடும் சமயத்தில் அவர்களுக்கு 50 இலட்சம் ரூபாய் பண முடிப்பு வழங்குதல் ,ஓய்வு பெறும் காலம் வரை முழு சம்பளம் ஓய்வூதியமாக வழங்குதல், குடும்ப ஓய்வூதியம் வழங்குதல், இறந்தவர்களின் உடல்களை முழு கண்ணியத்தோடு அடக்கம் செய்ய உத்தரவாதம் அளித்தல் ஆகியவை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

பெரும் பகுதி மக்கள் ஏழைகளாக உள்ள நாட்டில் அவர்களது குழந்தைகள் அனைவருக்கும் இணைய வழிக் கல்வி என்பது எல்லோருக்கும் சென்று சேராது. இணையம், கணினி வசதிகள் கிடைக்கப் பெறாத குழந்தைகள் இந்த வாய்ப்பை பயன்படுத்த இயலாது. இது மேலும் கற்றலில் ஏற்றத் தாழ்வுகளையே உருவாக்கும். எனவே இதுபற்றி ஓர் மதிப்பீடு இல்லாமல், திறனாய்வு இல்லாமல் அரசோ தனியார் கல்வி நிறுவனங்களோ இணைய வழிக் கல்வியை, தேர்வுகளை நிர்ப்பந்தம் செய்யக் கூடாது.

கிராமங்களிலும் நகரங்களிலும், அரசுப் பள்ளிகளிலும் தனியார் பள்ளிகளிலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழ்மை நிலையில் உள்ள வீட்டு பிள்ளைகளும் நல்ல வசதியான வீட்டுப் பிள்ளைகளும் என பல லட்சம் மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத உள்ளனர். இவர்கள் அனைவரின் வீட்டுச் சூழலும் ஒரே மாதிரியாக இருக்காது. ஊரடங்கு உத்தரவினால் வீட்டுக்கு ள்ளேயே முடக்கப்பட்டு இருக்கிற ஏழை தொழிலாளி குடும்பத்தைச் சார்ந்த மாணவர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்கு தேவையான வாழ்வாதாரம் இன்றி தவித்துக் கொண்டிருக்கிற சூழலில் அனைவருக்கும் ஒரே மாதிரியான பொதுத்தேர்வு என்பது எந்தவகையிலும் நியாயமானதாக இருக்காது.

கிராமங்களிலும் நகரங்களிலும், அரசுப் பள்ளிகளிலும் தனியார் பள்ளிகளிலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழ்மை நிலையில் உள்ள வீட்டு பிள்ளைகளும் நல்ல வசதியான வீட்டுப் பிள்ளைகளும் என பல லட்சம் மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத உள்ளனர். இவர்கள் அனைவரின் வீட்டுச் சூழலும் ஒரே மாதிரியாக இருக்காது. ஊரடங்கு உத்தரவினால் வீட்டுக்கு ள்ளேயே முடக்கப்பட்டு இருக்கிற ஏழை தொழிலாளி குடும்பத்தைச் சார்ந்த மாணவர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்கு தேவையான வாழ்வாதாரம் இன்றி தவித்துக் கொண்டிருக்கிற சூழலில் அனைவருக்கும் ஒரே மாதிரியான பொதுத்தேர்வு என்பது எந்தவகையிலும் நியாயமானதாக இருக்காது. ஏழைத் தொழிலாளர்கள் நிறைந்த ஊராட்சிகளில் தற்காலிக அம்மா உணவகங்களை திறந்து உணவு அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

 மக்கள் மத்தியில் இன்னும் கொரோனா பற்றி தவறான மூடநம்பிக்கைகள் நிறைந்த செய்திகள் உலாவிக் கொண்டிருக்கின்றன. அவற்றை களைவதற்கு அரசு சாரா தொண்டு நிறுவனங்களையும், தன்னார்வ அமைப்புகளையும் சரியான முறையில் கண்டறிந்து கொரொனா பற்றிய அறிவியல் பூர்வமான தகவல்களை கொண்டு செல்ல வேண்டும். மேற்காணும் கோரிக்கைகளை உடனடியாக பரிசீலித்து நிறைவேற்ற வேண்டும். இவ்வறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Top