You are here
Home > Article > நிஜமா… கற்பனையா…? – பேரா. பி.இராஜமாணிக்கம்

நிஜமா… கற்பனையா…? – பேரா. பி.இராஜமாணிக்கம்

இந்திய மக்கள் அதிக எதிர்ப்பு சக்தி பெற்றவர்களா?

வலிமையான மரபணுக்கள் கொண்டவர்களா?


ஒரு வழியாக கோமியமும் சாணமும் கொரோனாவில் இருந்து காப்பாற்றாது என்பதை மக்கள் புரிந்து கொண்டுவிட்டனர். இப்போது அடுத்த கட்டத்திற்கு திசை திருப்பப்பட்டு வருகின்றனர். அதாவது இந்தியர்களுக்கு அதிக நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது என்றும், இந்தியர்களின் மரபணு அதற்கேற்றாற்போல் மாற்றம் அடைந்துள்ளதென்றும், நமது தட்ப வெட்ப நிலையும் கொரோனாவை தடுக்கும் தன்மையுள்ளது என்றும் புதிய கட்டுக் கதைகளைக் கட்ட ஆரம்பித்து விட்டனர்.  இதை சாதாரண மக்களோ படித்தவர்கள் எனக் கூறப்படுபவர்களோ சொன்னால் கூடப் பரவாயில்லை. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தேசிய தலைவரும் புதுதில்லி அகில இந்திய மருத்துவக் கவுன்சில் முன்னாள் டீனாக இருந்தவருமான நரேந்திர குமார் மெஹ்ரா அவர்களே கூறியிருப்பது சர்ச்சை ஆகியுள்ளது.

நரேந்திரகுமார்  சொல்வது என்ன?

“முதலாவதாக இந்திய சமூகத்தில் ஏற்கனவே நுண்ணுயிரிகளின் தாக்கம் ஏற்பட்டு அதற்குரிய எதிர்ப்பு சக்தி இருப்பதால் கொரோனாவின் தாக்கம் குறைவாகவே இருக்கும். ஏனென்றால் கடந்த கால நுண்ணுயிரித் தாக்குதலால் நமது உடலில் டி செல்கள் வைரஸ் நுழைந்தவுடன் எதிர்த்தாக்குதல் நடத்தி நம்மைக் காப்பாற்றும். இந்தியா போன்ற நாடுகளில் எச்ஐவி, காசநோய், மலேரியா போன்ற நோய்களால் தாக்கப்பட்டு அதற்குரிய எதிர்ப்பு சக்திகளைப் பெற்று உள்ளனர். அதிக அளவில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் போன்ற மருந்துகள் சாப்பிட்டு வந்ததால் கோவிட் 19 தாக்குதல் அவ்வளவு எளிதல்ல.”

“இரண்டாவதாக. நம்முடைய பல வகையான மசாலா உணவுப் பழக்க வழக்கமும் ஆயுர்வேத பயன்பாடும் காலங்காலமாக இருந்து வருவதால் கோவிட் 19 தாக்குதல் குறைவாகவே இருக்கும்.”

“மூன்றாவதாக, நம்மிடம் கடந்த நோய்க் காலங்களில் ஏற்பட்ட மாறுதல்களால் மரபணுக்களில் ஏற்பட்ட மாற்றங்களும் காரணமாக இருக்கிறது. குறிப்பாக எச்எல்ஏ என்று சொல்லக் கூடிய மரபணு கிருமி நுழைந்ததும் ஆன்டிஜன் என்ற எதிர்ப்புப் பொருளை உருவாக்கி அதனை நுழையவிடாமல் அழிப்பதும் அதையும் மீறி வெற்றி பெற்ற கிருமிகளை டி செல்கள் எனக் கூறப்படும் பாதுகாப்பு செல்கள் அழித்தொழிக்க யுத்தம் நடத்தும். இந்திய மக்களின் மரபணு பிற நாட்டவர்களைக்காட்டிலும் பல வகையான மாற்றங்கள் பெற்ற காரணத்தினால் முதல் வளையத் தாக்குதலிலேயே அழிந்து விடும் என்பதால் கோவிட் 19 தாக்கம் நம்மிடையே குறைவாகவே இருக்கும். இருப்பினும் கோவிட்19 வைரஸ் நமது உடலில் அளவு கூடாமல் இருக்க வேண்டும். இதற்காக அரசு செய்து வரும் ஊரடங்கு நம்மை கிருமியின் அளவைக் கட்டுப்படுத்த உதவிடும்- இப்படிச் சொல்கிறார் நரேந்திரகுமார்.

உண்மை என்ன?

மேற்சொன்ன மூன்று காரணங்களும் போதிய அறிவியல் ஆதாரங்களோ ஆராய்ச்சியாளர்களின் ஒப்புதலோ இதுவரை பெறவில்லை என்கிறார் தேசிய நோய் எதிர்ப்பு மைய விஞ்ஞானி டாக்டர் சத்யஜித் ராத் ( https://www.newsclick.in/How-Valid-and-Useful-are-Speculations-About-Covid-19-Biology). இந்த மாதிரியான அறிவியல் வெளியீடுகள் எந்த விதமான ஆராய்ச்சி அடிப்படையும் இல்லாமல் வெளியிடப்படும் கருத்துக்களாகும் என்கிறார். இவையாவும் இணையதளத்தில் வெளியிடப்படும் அரைவேக்காட்டு முன் வெளியீட்டு அறிவியல் கருத்துகளாகும். இந்தக் கருத்துக்கள் தோராயமாகவும் எளிமைப்படுத்தியும் சொல்லப்படுவதாக இருக்கிறது. இது அறிவியலில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.

தற்போது கூறப்படுகின்ற கருத்துக்களில் உள்ள தகவல்களில் மிகப் பெரிய தவறுகள் உள்ளன. கோவிட்19 பரவலின் வேகம், விரிவாக்கம், பாதிப்பு ஆகியன குறித்து தற்போது கூறப்படும் யூகங்கள் அனைத்தும் அடிப்படையில் தவறானவை. இந்த முடிவுகள் அனைத்தையும் கோவிட்19 நோய் முற்றிலும் ஒழிந்து போன பின்னரே கணக்கிட முடியும்.தற்போதைய நிலையில் தகவல்கள் வாரா வாரம் மாறிக் கொண்டிருக்கிற சூழ்நிலையில் எந்த முடிவையும் நாம் எடுக்க முடியாது. இதனால் தற்போது கூறப்படும் முடிவுகள் அனைத்தையும் நாம் சரியானதெனக் கூற முடியாது. இருப்பினும் இறுதியாக முடிவுகள் தெரியும் போது இந்த ஊகக் கருத்துக்கள் அனைத்தும் பொய்யாகக் கூடப் போகலாம்.

தட்பவெப்பம் தடுக்குமா?

தட்ப வெட்பம் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் என்பதும் போதிய அளவிளான தகவல் இல்லாமல் கூறப்படுகிறது. இந்தியாவின் தட்ப வெட்பம் மேலை நாடுகளை விட மாறுபட்டு இருப்பதால் நமக்கு கொரோனா தாக்குதல் குறைவான அளவில் தான் இருக்கும் என்பதும் தவறான கணிப்பாகும். ஏனென்றால் நம் நாட்டில் கொரோனா தாக்குதல் தற்போது தான் துவங்கியுள்ளது. தற்போதைய தகவலை வைத்து இப்போது இந்த முடிவுக்கு வர முடியாது. இப்படி முடிவுக்கு வருவதால் நாம் மேலை நாடுகள், சீனாவை விட உயர்ந்தவர்கள் எண்ணம் உருவாகி நமது நம்பிக்கை தவறான வழிக்கு இட்டுச் செல்லும்.

இந்திய மக்களின் எதிர்ப்பு சக்தி சிறந்ததென்றும் இதற்குக் காரணம் நம்மில் பலர் பல தொற்று நோய்களை எதிர்த்துப் போராடியதாலும் நமது மாசடைந்த சுற்றுச்சூழல் நமக்கு எதிர்ப்புத் திறனை வழங்கியுள்ளது எனபதாலும் நமக்கு வலிமையான எதிர்சக்தி உள்ளதென்றும் பேசுகின்றனர். ஆனால் உண்மையில் கொரோனா நோயின் இறப்பு விகிதம் இங்கும் சராசரியை விட அதிகமாகத்தான் உள்ளது. மேலும் கொரோனா மட்டுமல்ல, எந்த தொற்று நோய்க்கும் நாம் எதிர்ப்பு சக்தி பெற்றிருக்கிறோம் எனச் சொல்லவும் முடியாது.

மரபணுக்களில் உள்ளதா?

மேலும் இந்தியர்கள் தீவிர எதிர்ப்பு சக்தியை அளிக்கும் மரபணுக்களை பரிணாம ரீதியாகப் பெற்றுள்ளனர்; ஏனென்றால் காலங்காலமாக நாம் பல நோய்களின் தாக்குதலுக்கு உட்பட்டதால் என்று கூறுவது தவறானதாகும். உலகின் எந்த வகையான மனித குழுக்களிடையேயும் எதிர்ப்புத் திறனளிக்கும் மாற்றம் பெற்ற திறன் கொண்ட மரபணுக்கள் இருப்பதாக ஆராய்ச்சிகள்எதுவும் கூறவில்லை. இந்தியர்களில் அதிக அளவிலான கிருமிகளைக் கொல்லும் செல்கள் இயற்கையாக இருக்கின்றன என்ற கருத்தை 2008ல் வெளிவந்த ஒரு ஆய்வுக் கட்டுரையைக் காட்டிக் கூறுகின்றனர். அப்படி எதுவும் அந்தக் கட்டுரையில் காணப்படவில்லை. எச் எல் ஏ என்று சொல்லக் கூடிய மரபணுக்களில் பன்வகைத்தன்மை இருப்பதால் தற்போதைய கொரோனா வைரஸ் நோயை எதிர்க்கும் சக்தி உள்ளது என்கிற முடிவுக்கு எந்த ஆதாரமும் கிடையாது.

தற்போது மலேரியா எதிர்ப்பு குளோரோகுயின் மாத்திரைகளும் எச்ஐவி எதிர்ப்புக்கான மாத்திரைகளும் கோவிட்19 வைரசுக்குக் கொடுப்பதால் அதனைத் தடுத்து விடமுடியும் என்ற கருத்து மேலோங்கியுள்ளது. இதுவும் சரியானதல்ல. பாக்டீரியா எதிர்ப்பு மருந்துகள் போல், வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் போல் அதே நோய்க்குக் கூடத் தாமதமாக வழங்கினால் போதிய பலன் கிடைப்பதில்லை. எனவே புதிய வைரசுக்கு இது எவ்வாறு பயன்படும் என்பதை பயன்படுத்தி புதிய வலிமை மிக்க மருந்துகளைக் கண்டுபிடிக்க உதவிகரமாக இருக்கும் என்பதால் இதனை சோதனைக்கு உட்படுத்த வேண்டும்.

பிசிஜி தடுப்பு மருந்தால் பலனா?

மேலும் ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். ஒரு முன்பதிப்பு ஆய்வுக் கட்டுரை, பிசிஜி தடுப்பு மருந்து பெற்றவர்கள் கோவிட்19 இறப்பில் குறைவாகவும் நோய் குறைவாகவும் உள்ளனர் எனத் தெரிவிக்கிறது. குறிப்பாக மேலை நாடுகளில் உள்ள வயதானோர் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதின் காரணம், அவர்கள் வெகு நாட்களுக்கு முன்னரே இந்த தடுப்பு மருந்துகளை பயன்படுத்தியதால் வயதானவர்களில் அதன் வீரியம் குறை்ந்திருக்கும்; எனவே மீண்டும் இந்தத் தடுப்பு மருந்தைப் பயன்படுத்தலாம் என்கின்றனர். இந்த ஆய்வினை மெக் ஹில் பல்கலைக் கழக முனைவர் பட்ட ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். ஏனென்றால் எல்லா நாடுகளிலும் பிசிஜி தடுப்பு மருந்து முழுமையான அளவில் வழங்கப்பட்ட போதிலும் குறை வருவாய் நாடுகளைக் காட்டிலும் உயர் வருவாய் நாடுகளில் அதிக அளவில் இருக்கிறது என்பது குறித்த பகுப்பாய்வு மிகவும் குறுகிய அளவிலானதாக இருக்கிறது. பிற காரணிகளோடு ஒப்பாய்வு செய்யும் போது தான் அதன் உண்மைத் தன்மை வெளிவரும். உதாரணமாக பருவகாலநாடுகளுக்கிடையே உள்ள வேறுபாடுகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ளும் போது இவ்விருவரும் ஒருவருக் கொருவர் ஒப்பாய்வு செய்து பார்க்காததால் தவறுகள் வரும் வாய்ப்புள்ளது.

பிசிஜி தடுப்பு மருந்து வழங்கியுள்ள எதிர்ப்புத்திறன் கோவிட் 19 வைரசையும் தடுத்து நிறுத்தும் எனக் கூறுவதில் எந்தவிதமான ஆதாரம் இல்லை. இதே போன்று தொழுநோய்க்குத் தரப்படும் எதிர்ப்பு மருந்தும் இதற்குப் பயன்படும் எனக் கருதுவதும் தவறானதாகும். ஏனெ்னறால் ஒரு குறிப்பிட்ட நோய்க்காகத் தரப்பட்ட எதிர்ப் பொருள் மருந்து பல வகையான கிருமிகளுக்கு எதிர்ப் பொருளாகச் செயல்படும் என்ற கருத்தும் தவறானதாகும்.

செய்ய வேண்டியது என்ன?

மக்களாகிய நாம் தற்போது செய்ய வேண்டியது விலகி இருப்பதும் முகக் கவசம் அணிவதும் தான். எனவே தற்போதைய சூழலில் நமக்கு நாமே அக்கறை கொள்வது மட்டுமல்லாமல் சமூகத்தைப் பற்றி அக்கறை கொள்வதே அவசியம் ஆகும். 

அதே போல் விஞ்ஞானிகளும் இது போன்ற அரைகுறைக் கருத்துக்களை கூறிக் கொண்டு கற்பனையில் மிதக்காமல் அமைதியாக, நேர்மையாக, தொடர்ந்து ஆராய்ச்சி செய்து ஏன் செய்கிறோம், எப்படிச் செய்கிறோம் என்றதோடு எதிர்பார்ப்பையும் அதில் உள்ள குறைபாடுகளையும் உண்மையாகக் கண்டறிந்து மக்களிடம் சொல்ல வேண்டும். முதலில் இது போன்ற பேய்க் கதைகளையும் கற்பனைக் கதைகளையும் விஞ்ஞானிகள் தங்களுக்குள் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம் என்கிறார் டாக்டர் சத்யஜித் ராத்.

இறுதியாக, இது நிஜமல்ல கற்பனை என்பதற்கும் இது உண்மையல்ல என்பதற்கும் கீழ்க்கண்ட ஒரு செய்தி போதும். 1918ல் நடந்த ஸ்பானிஷ் ஃப்ளூ பாதிப்பில் இந்தியாவில் கிட்டத்தட்ட 170 லட்சம் (சுமார் அன்று இருந்த மக்கள் தொகையில் 6 சதவீதம் ) இந்தியர்கள் இறந்தனர். அப்படி இந்தியர்களுக்கு தனியாக அதிக நோய் எதிர்ப்பு சக்தியிருந்தால் இப்படி நடந்திருக்குமா?

Leave a Reply

Top