You are here
Home > இயக்கச் செய்திகள் > தாரமங்கலம் கிளையின் சார்பில் பாவ்லோ பிரைரே பிறந்த தின நிகழ்ச்சி..

தாரமங்கலம் கிளையின் சார்பில் பாவ்லோ பிரைரே பிறந்த தின நிகழ்ச்சி..

புரட்சியாளர் மற்றும் கல்வியாளர் ஃபாவ்லோ ஃபிரையிரே அவர்களின் பிறந்த தினம் நேற்று (19 /9 /2019) வியாழக்கிழமை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் – கல்வி உபகுழு சார்பாக மாற்றத்திற்கான கல்வி என்ற தலைப்பில் NISE KIDS COLLEGE ல் கொண்டாடப்பட்டது.

எல்லாக் குழந்தைகளும் பள்ளிக்கூடம் போகனும் என்ற பாடலை திருமிகு சந்தோஷ் குமார் (வட்டார செயலாளர்) பாடினார்கள்.

நிகழ்விற்கு திருமிகு ராஜேந்திரசோழன் வட்டார தலைவர் அவர்கள் தலைமை தாங்கினார். மேலும் இக்கூட்டத்திற்கு முன்னிலையாக திருமிகு சீனிவாசர் முதல்வர் நைஸ் கிட்ஸ் காலேஜ் மற்றும் நமது அறிவியல் இயக்க செயற்குழு உறுப்பினர் அவர்கள் முன்னிலை வகித்து சிறப்பித்து தந்தார். திருமிகு பிரேம்குமார் வட்டார இணை செயலாளர் கூட்டத்திற்கு வந்திருந்த அனைத்து நண்பர்களையும் வரவேற்றார்.

அறிமுக உரையாக திருமிகு. சந்தோஷ்குமார் வட்டார செயலாளர் அவர்கள் ஃபாவ்லோ ஃபிரையிரேயின் வகுப்பறை ஜனநாயகம் பற்றிப் பேசினார். நம் கல்வி முறை ஒரு ஒரு வாய்க்கு பல காதுகளுக்கும் ஆன ஒரு சொற்பொழிவாகத் தான் இருக்கிறது என்றும் உண்மையில் அது பல வாய்களுக்கும் பல காதுகளுக்கும் ஆன ஒரு உரையாடல் கல்வியாக தான் இருக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும் ஒரு வகுப்பறை ஒரு வகுப்பறையில் ஜனநாயகம் இருக்க வேண்டுமென்றால் ஒரு ஆசிரியர் வகுப்பறைக்குள் நுழையும் முன் 50% தற்கொலை செய்துகொள்ள வேண்டும் 50% மாணவனாக மாற வேண்டும் அப்பொழுதுதான் ஜனநாயகத்தை கொண்டு வர முடியும் என்பதையும் ஃபாவ்லோ ஃபிரையிரே வழியாக விளக்கினார்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாவட்ட கல்வி உபகுழு இணை ஒருங்கிணைப்பாளர் திருமிகு ரமேஷ் அவர்கள் ஃபாவ்லோ ஃபிரையிரே பிறப்பும் வாழ்க்கையும் பற்றி சில மணித்துளிகள் உரையாற்றினார். “பவுனு குஞ்சு” என்ற நாடகத்தைப் பற்றியும் அதன் சாராம்சத்தை பற்றியும் கூறினார். உண்மையில் நம் நாட்டின் கல்வி முறையில் மாற்றம் தேவை என்பதைப் பற்றியும் அற்புதமாக எடுத்துக் கூறினார்.

ஃபாவ்லோ ஃபிரையிரேயின் மாற்றத்திற்கான கல்வி- அ.மார்க்ஸ் அவர்கள் எழுதிய புத்தகத்தை கிருஷ்ணம் புதூர் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமிகு செந்தில்குமார் அவர்கள் அறிமுகம் செய்து அதிலுள்ள முக்கியமான கருத்துக்களை எடுத்துரைத்தார். அவற்றை நாம் பின்பற்றும் கல்வி முறையை ஒரு வங்கிக் கல்வி முறை என்றும் வங்கி கல்வி முறை என்பது ஆசிரியர் என்பவர் மாணவனின் தலையில் தகவல்களை இட்டு நிரப்பும் முரட்டு அமைப்பை கல்வி முறை என்று கூறுவதா..? என்று அருமையாக விளக்கினார்.

மாணவனுக்கு தேவையான கல்வி முறை விடுதலை கல்வி முறை அதாவது பிரச்சனைகளை தீர்க்கக் கூடிய கல்வி முறையாக இருக்க வேண்டும் என்று கூறினார். நம் வகுப்பறையில் ஆசிரியர் என்பவர் செயல்படு பொருளாகவும் மாணவர் என்பவர் வினைப் படு பொருளாகவும் இருப்பதை காட்டுமிராண்டி செயல் என்றும் கூறினார்.

நமது வகுப்பறையில் ஆசிரியரும் மாணவரும் செயல்படு பொருளாகவே இருக்க வேண்டும் என்பது ஆசிரியரும் மாணவரும் சேர்ந்து கற்பித்தலை மேற்கொள்ள கூடிய பாடங்களை சார்ந்ததாக இருக்கவேண்டும் என்று கூறினார். இடையிடையே அழகான குட்டி கதைகளைக் கூறி அனைவரையும் கவர்ந்தார்.

அடுத்து மாற்றுக்கல்வி கொள்கைக்கான மக்கள் சாசனம் 2016 என்ற புத்தகத்தை கல்வி உபகுழு மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் அறிமுகம் செய்து வைத்து பின் இந்த புத்தகத்தை திருமிகு. சுந்தரலிங்கம் செயற்குழு உறுப்பினர் அவர்கள் மதிப்புரை வழங்கினார்.

புரட்சியாளர் ஃபாவலோ ஃபிரையிரேயின் பொன் மொழியான உலகத்தை மாற்றி அமைப்பது என்பது ஒரு சில மனிதர்களின் தனி உரிமை அல்ல.. ஒட்டுமொத்த சமூக உரிமை ஒருவரை இன்னொருவர் தேர்வு செய்வது என்பது பேசுவது என்பது சாத்தியமல்ல என்பதை குறிப்பிட்டு தன்னுடைய மதிப்புரையை வழங்கினார்.

இந்த மாற்று கல்விக் கொள்கைக்கான மக்கள் சாசனம் என்ற புத்தகம் உருவாக காரணமான 14 பேரை கொள்கை உருவாக்கக் குழு முனைவர் வசந்திதேவி , ஆயிஷா நடராஜன் , முனைவர் ராஜகோபாலன், பேராசிரியர் வெங்கடேஷ் ஆத்ரேயா, பொதுப் பள்ளிக்கான மாநில மேடை பிரின்ஸ் கஜேந்திரபாபு, பேராசிரியர் ச. மாடசாமி போன்ற போன்ற ஆளுமைகளை குறிப்பிட்டு உரையை தொடர்ந்தார். தற்பொழுது நமது கல்வி முறையில் ஏற்பட்டிருக்கும் இந்த அசௌகரியம் மாற்றங்களை இந்த நூல்களின் வாயிலாக எடுத்துரைத்தார். மழலைக் கல்வி முறை, இடைநிலைக் கல்வி முறை, உயர் கல்வி முறை இந்தியாவில் எப்படி இருக்க வேண்டும் என்பதை இந்த புத்தகம் விளக்குகிறது என்பதை கூறினார்.

பட்டியலின மக்களுக்கும் மலைவாழ் மக்களுக்கும் தேவையான கல்வி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்பதையும் குறிப்பிட்டார். அதேபோல பச்சிளம் குழந்தை பராமரிப்பு மற்றும் கல்வி குழந்தை பருவ பராமரிப்பு வளர்ச்சி போன்றவற்றை விளக்கினார். இந்தப் புத்தகம் அரசுக்கு பரிந்துரைத்த கல்விக் கொள்கைக்கான புத்தகம் என்பதை கூடுதல் தகவலாக சொன்னார்.

மிகவும் சிறப்பான முறையில் தனக்கு வழங்கப்பட்ட நேரத்தில் இந்த மாற்று கல்விக் கொள்கைக்கான மக்கள் சாசனம் புத்தகத்தை அனைவரும் புரிந்து கொள்ளும் படியும் எடுத்துக் கூறி தன்னுடைய உரையை முடித்தார். இடையிடையே ஆசிரியர்கள் மற்றும் அறிவியல் இயக்க உறுப்பினர்களின் மாணவர் நலன் சார்ந்த சமூக நலன் சார்ந்த விஷயங்கள் பகிரப்பட்டது. தனியார் பள்ளிகளில் தற்போது இருக்கும் கல்வி முறைகளைப் பற்றியும் குறிப்பிட்டார்கள்.

தனியார் பள்ளிகளில் விடுமுறை நாளான சனிக் கிழமைகளிலும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் ஸ்பெஷல் கிளாஸ் என்ற அடிப்படையில் மாணவனுக்கு ஓய்வே தராமல் ஒருவிதமான ஏதேச்சதிகார போக்கோடு செயல்படுவதை ஆசிரியர்கள் அனைவரும் கலந்துரையாடினோம்.

மாணவனுக்கு அவன் விரும்பிய வழியில் கல்வியை கற்றுக் கொடுக்க வேண்டும் என்று பரவலாக எழுந்த கருத்து. இவ்வகையில் இந்தக் கூட்டம் மிக ஆரோக்கியமான ஒரு கலந்துரையாடலோடு அணுகப்பட்டது.

இறுதியாக கல்வி உபகுழு இணை ஒருங்கிணைப்பாளர் திருமிகு ரமேஷ் அவர்கள் திருமிகு ரமேஷ் அவர்கள் பகுதி உப குழுவின் வேலைகள் பற்றியும் அதன் தன்மைகளைப் பற்றியும் விளக்கினார். பின்பு இந்த வருடத்திற்கான துளிர் திறனறிதல் தேர்வு நடக்க இருக்கிறது அதற்கான சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளராகவும் அவரை அறிமுகப்படுத்திக் கொண்டு அங்கு வந்திருந்த ஆசிரியர்களுக்கும் அறிவியல் இயக்க உறுப்பினர்களுக்கும் அவர்கள் சார்ந்த பள்ளியில் இந்த துளிர் திறனறிதல் தேர்வை மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் எழுத வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இறுதியாக நன்றியுரை நம் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வட்டார துணை தலைவர் திருமிகு வள்ளிமுத்து நன்றி கூறினார்.

சி.சந்தோஷ்குமார், வட்டார கிளை செயலாளர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தாரமங்கலம் கிளை, சேலம் மாவட்டம்.

Leave a Reply

Top