You are here
Home > அறிவிப்புகள் > 5,8 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தும் முடிவைக் கைவிட வேண்டும்: தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

5,8 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தும் முடிவைக் கைவிட வேண்டும்: தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் தேர்வு மூலம் அனைத்து கற்றல் அடைவுகளையும் தீர்மானித்தல் என்பது அறிவியல் பூர்வமற்றது. தமிழ்நாடு அரசே ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்தும் முடிவை  திரும்பப் பெறுக…..

மத்திய அரசு உருவாக்க முனையும் புதிய கல்விக் கொள்கையின் பல்வேறு பாதக அம்சங்களில் ஒன்று தான்  மூன்றாம் வகுப்பு முதல் பொதுத் தேர்வுகள் நடத்த முயற்சி செய்வது. இது தவறு என்று நாடு முழுவதும் உள்ள கல்வியாளர்கள் கல்வி செயற்பாட்டாளர்கள் பல்வேறு அமைப்பினர் கூறி வருகின்றனர். கருத்துகளை அனுப்பி உள்ளனர். கருத்துக் கூறும் காலம் முடிந்து அடுத்த ஜனநாயக பூர்வமான நடைமுறைகளை தொடங்க வேண்டிய மத்திய அரசு, அதற்கு எதிரான நடைமுறையில் இறங்கியுள்ளது. ஜனநாயக பூர்வமற்ற முறையில் அரசியல் சாசனத்திற்கு விரோதமாக வரைவு கல்விக் கொள்கை சரத்துகளை அமுல்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

அதைப்போலவே தமிழ்நாடு அரசும் செயல்படுவது அதிர்ச்சியை அளிக்கிறது. ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கற்பித்தல், கற்றல் ஆகியவை முழுமையாக நடந்த பின்னரே தேர்வுகள் நடைபெற வேண்டும் என்பது பொதுவான விதி. அரசுப் பள்ளிகள் தனியார் பள்ளிகள் என எல்லாவற்றிலும் முழுமையான கற்றல் கற்பித்தல் நடைபெறுவதற்கு பல்வேறு தடைகள் உள்ளன. இத்தகைய தடைகளை களைவதற்கு பள்ளிக் கல்வி அமைச்சர் பின்லாந்து பயணம் உதவும் என்று பலரும் நம்பினார்கள். ஆனால் பின்லாந்து நாட்டில் இருந்து திரும்பியதும் குழந்தைகளின் உண்மையான கற்றலுக்கு விரோதமானதும் அறிவியல் பூர்வமற்றதுமான நடைமுறையை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. ஆண்டு இறுதியில் ஓர் மனப்பாடத் தேர்வு முறை தவறு எனக் கண்டறிந்து கைவிடப்பட்டது.

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு குழந்தைகளின் மீதான தேர்வு என்னும் நடைமுறையை வேகமாக முன்னெடுப்பது இதுவரை நாம் கல்வியில் பெற்ற வளர்ச்சியை பின்னுக்கு தள்ளவே பயன்படும். தேர்வுகள் குழந்தைகளின் மன அழுத்தத்தை அதிகரிக்கவே பயன்படும். உண்மையான கற்றல் நடைபெற பயன்படாது. எனவே ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பிற்கு பொது தேர்வு என்ற முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாக கைவிடுதல் அவசியம். ஆண்டு இறுதியில் ஒற்றைத் தேர்வு அதுவும் இந்திய சூழலில் பள்ளி இடைவிலகலை முடுக்கிவிடவே பயன்படும்.

ஆண்டு இறுதியில் ஒற்றைத் தேர்வு என்பது வடிகட்டும் தேர்வு முறை. சிறு வயதிலேயே படிப்பு வரவில்லை என்று முத்திரை குத்தப் பயன்படும் தேர்வு முறை இது. ஒவ்வொரு மாணவரது கற்றலைப் பலவாறும் பல்வேறு நிலைகளில் சோதித்து அறிய முடியும். ஒவ்வொரு நாளும் கற்றல் நடைபெறுகின்றதா என்பதை வகுப்பறையிலேயே வாய்மொழித் தேர்வு, சிறு தேர்வுகள் உடனடியாக மாணவரது கற்றல் நிலையை அறிந்து குறை தீர்க்க உதவும். ஆண்டு இறுதித் தேர்வினால் இளம் மாணவர்க்கு எப்பயனும் கிட்டாது.

எனவே அறிவியல் பூர்வமான முறையிலும் உண்மையான கற்றல் கற்பித்தல் நடைபெறும் வகையிலும் உண்மையான கற்றல் அடைவுகளை கண்டறியும் வழிமுறைகளை தமிழ் நாடு அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழ் நாடு அறிவியல் இயக்கம் தமிழ் அரசை கேட்டுக் கொள்கிறது..

முனைவர்.எஸ்.தினகரன், மாநிலத் தலைவர்

எஸ்.சுப்பிரமணி, பொதுச் செயலாளர்

Leave a Reply

Top