You are here
Home > Article > வெறும் கல்வி உதவாது, அதை ஞானமாக்க வேண்டும்: கரூர் புத்தகக் கண்காட்சியில் நெல்லை கண்ணன் உரை

வெறும் கல்வி உதவாது, அதை ஞானமாக்க வேண்டும்: கரூர் புத்தகக் கண்காட்சியில் நெல்லை கண்ணன் உரை

கரூரில் பள்ளி கல்வித் துறை, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் பாரதி புத்தகாலயம் சார்பில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் வியாழக்கிழமை சிறப்பு விருந்திராகப் பங்கேற்ற அவர் மேலும் பேசியது:

ஐயப்ப சாமிக்கு மாலை போடுவது வெறும் பக்தியாகவே இருக்க வேண்டும், வேஷமாக இருக்கக் கூடாது. மாலையை கழற்றிய உடனே மது அருந்தச் சென்றுவிடக்கூடாது. பலப்பல தெய்வங்கள் என மக்களைப் பிரிக்காதீர்கள், தெய்வம் ஒன்றே என்றார் பாரதி. இறைவனுக்கு உருவமே கிடையாது.
ஒரு பெண் தனியாக இருந்தால் அவரது வாழ்க்கை எப்படியாக மாறும் என்பதற்கு எத்தனையோ ஆளுமைகொண்ட ஜெயலலிதாவின் மரணம் ஒரு சாட்சி. மனதைச் சுத்தமாக வைத்துக்கொண்டால் அனைத்துக் கடவுள்களும் நம்முடன் இருப்பர். சாமியை நம்புங்கள்; தங்கத்தேர் இழுப்பது தவறு. சிலை செய்தபோது தவறு ஏற்பட்டால் தண்ணீருக்குள் போடுவது இயல்பு. அத்திவரதரை தண்ணீருக்குள்ளே வைத்தால்தான் அனைவரும் கும்பிடுவர். ஆனால் ஜீயர் கூறுவதுபோல அவரை வெளியே வைத்திருந்தால் எத்தனை பேர் வழிபடுவார்கள் எனத் தெரியாது.
நாம் ஓய்ந்துவிட்டால் நோய் வந்துவிடும். பிள்ளைகளை ஓடியாட விளையாட விடுங்கள். ஆடுகள் நம்மை நம்பி வாழும் ஜீவன்; ஆனால் நாம் கிடாக்கறியைத்தான் விரும்பி சாப்பிடுகிறோம்.

வாழும்போது மனிதநேயத்தோடு வாழுங்கள். குழந்தைகளோடு பேசுங்கள், பல குழந்தைகளின் தற்கொலைக்கு காரணம் பெற்றோர்தான்.

காமராஜர் ஒரு நாள் காரில் சென்றபோது அங்கே ஆடுமேய்த்த சிறுவனிடம் ஏன் பள்ளிக்குச் செல்லவில்லை என்கிறார். அதற்கு சிறுவன் பள்ளிக்குச் சென்றால் யார் கஞ்சி கொடுப்பார்கள் என்கிறான். அப்போது கஞ்சி ஊற்றினால் பள்ளிக்குச் செல்வாயா எனக் கேட்ட பிறகு, சென்னைக்குச் சென்ற அவர் நிதி அமைச்சரிடம் மதிய உணவுத் திட்டம் குறித்து சொன்னபோது, அதற்கான நிதி இல்லை என்கிறார் அமைச்சர். அதற்கு பிச்சையெடுத்தாவது பள்ளி செல்லாக் குழந்தைகளைப் படிக்க வைப்பேன் எனக் கூறியவர் காமராஜர்.

இன்று சாதாரண வட்டக் கவுன்சிலருக்கு நான்கு கார்கள். இதுதான் இன்றைய நிலைமை. காமராஜர் காலத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் ஒரு நகரத்தை உருவாக்க வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டும் எனக் கூறியபோது, ஒரு நகரம் எப்படி இருக்க வேண்டும் என்பதை மதுரையை பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள், மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கவா பார்க்கிறீர்கள் என அதிகாரிகளைக் கண்டித்தார். ஆனால் இன்று ஆங்கிலம் தெரியாத அரசியல்வாதி வெளிநாடுகளுக்குச் செல்கிறார்.

வள்ளுவன் நட்புக்கு மட்டும் 5 அதிகாரம் வைத்ததில் இருந்து தெரிந்து கொள்ளுங்கள், கூடா நட்பு கேடாகும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். பிள்ளைகளை திருக்குறளை, திருவாசகம் படிக்கச் சொல்லுங்கள். வெறும் கல்வி உதவாது, அதை ஞானமாக்க வேண்டும் என்றார் அவர்.

பரணிபார்க் கல்விக் குழுமங்களின் செயலர் பத்மாவதி மோகனரெங்கன் தலைமை வகித்தார். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன், பரணிபார்க் பள்ளி முதன்மை முதல்வர் சொ. ராமசுப்ரமணியன், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் சக்திவேல், தலைவர் மகாவிஷ்ணன் உள்ளிட்டோர் வாழ்த்தினர். பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், தமிழறிஞர்கள் பங்கேற்றனர். தீபம் உ. சங்கர் வரவேற்றார்.

Leave a Reply

Top