You are here
Home > அறிவியல் கல்வி > திருவள்ளூரில் அறிவியல் கல்வி மற்றும் பிரச்சார உபகுழு மாநில மாநாடு

திருவள்ளூரில் அறிவியல் கல்வி மற்றும் பிரச்சார உபகுழு மாநில மாநாடு

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் அறிவியல் கல்வி மற்றும் பிரச்சார உபகுழு மாநில மாநாடு திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லியில் 21 ஜூலை 2019 அன்று சிறப்பாக நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத் தலைவர் பேராசிரியர் சோ. மோகனா அவர்கள் மாநாட்டினை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். திருமிகு செந்தமிழ்ச் செல்வன் அவர்கள் தலைமை வகித்தார்.

இந்த நிகழ்ச்சியில் கருத்துரையாற்றிய இந்திய கணிதவியல் நிறுவனத்தின் விஞ்ஞானி முனைவ‌ர் இராமனுஜம் அவர்கள் சமூக பிரச்சினைகளும் அறிவியல் அணுகுமுறையும் என்ற தலைப்பில் அநேக தரவுகளை முன்வைத்தார். 2015 சென்னை பெருவெள்ளத்தின்போது அறிவியல் பூர்வமாக அணுகியிருந்தால் எப்படி சேதங்களை குறைத்திருக்கலாம் எனறு விளங்கினார். அறிவியல் கண்ணோட்டத்தை மக்களிடம் பரப்புவதற்கு முன்பு அறிவியல் கண்ணோட்டம் உடைய நபர்களை அடையாளம் கண்டு ஒருங்கிணைக்க நமது இயக்கம் பாடுபட வேண்டும் என்று கூறியது அடுத்த கட்ட வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தது. .

தமிழில் அறிவியல் செய்திகளைத் தொகுத்து தினமும் Blogspot, வாட்சாப், முகநூல் மூலம் சமூக வலைத்தளங்களில் பரப்பிவரும் ஆசிரியர் ஜெயசீலன் அவர்களுடைய முயற்சி பாராட்டப்பட்டது. கைப்பேசி மூலம் எப்படி அறிவியல் பரப்பலாம் என்று அவர் செயல்விளக்கம் அளித்தார். தொழில்நுட்ப பயன்பாட்டு அறிவு இன்றைய சூழலில் அனைவருக்கும் தேவையான ஒன்று. அதைப் பூர்த்தி செய்யும் வகையில் ஊடகவியலாளர் ராம் அவர்களின் கலந்துரையாடல் பயனுள்ளதாக அமைந்தது.

கைப்பேசியிலேயே குறும்படம், மீம்ஸ் உருவாக்கும் தொழில்நுட்பத்தை பற்றிய ஆழமான விளக்கத்தை ஊடகவியலாளர் லட்சுமிகாந்த் பாரதி அவர்கள் வழங்கினார். கூகுள் வாய்ஸ் டைப்பிங் அனைவருக்கும் பயனுள்ளதாக இருந்தது.

மந்திரமா தந்திரமா அற்புதங்கள் நிகழ்த்துவதாக அப்பாவி மக்களை ஏமாற்றி மூடநம்பிக்கைகளில் ஆழ்த்துபவர்களை தோலுரித்துக் காட்டும் விதமாக மாயாஜாலங்களை அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலாளர் முனைவர். சேதுராமன் அவர்கள் அவருக்கே உரிய தனித்துவத்துடன் விளக்கினார். பாடல் பாடிய தோழர்கள் அனைவரும் அனைவரையும் அறிவியல் சிந்தையோடு அமர வைத்தார்கள்.இப்படியாக ஒவ்வொரு அமர்வும் பயனுள்ளதாக அமைந்தது. மாநாட்டை திட்டமிட்டு செயல்படுத்திய திருவள்ளூர் பொறுப்பாளர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். காலை உணவு மற்றும் மதியம் பிரியாணி என வயிற்றுக்கு உணவும் செவிக்கு அறிவும் நிறைவாக வழங்கினார்கள்.

இரண்டாண்டு அறிவியல் கல்வி உப குழுவின் சார்பில் நடைபெற்ற செயலறிக்கையை ஒருங்கிணைப்பாளர் தேமொழிச்செல்வி சமர்ப்பித்தார். அறிவியல் பிரச்சாரம் உப குழுவின் சார்பில் நடைபெற்ற செயலறிக்கையை ஒருங்கிணைப்பாளர் உதயன் சமர்ப்பித்தார். அதனைத் தொடர்ந்து அறிக்கை மீதான கருத்துகளையும்,எதிர்கால பணிகளையும் மாநிலம் முழுவதிலுமிருந்து வந்திருந்த மாவட்டப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

மாநாட்டில் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ளது போல் தமிழ்நாட்டில் மூடநம்பிக்கையை ஒழிப்பதற்கான சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலர் தியாகராஜன், பெரியார் நகர் நலச்சங்க பொருளாளர் இராமச்சந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்க, பொதுச்செயலாளர் திரு. அமலராஜன் அவர்களின் நிறைவுரையுடன் மாநாடு நிறைவடைந்தது. .

மாலையில், பூவிருந்தவல்லி சென்னீர்குப்பம் பகுதியில் பள்ளிக் குழந்தைகள், பொதுமக்களின் உற்சாகமான பங்கேற்புடன் சேதுராமன் அவர்களின் மந்திரமா தந்திரமா நிகழ்ச்சியும் சேலம் ஜெயமுருகன் அவர்களின் வானியல் பாடல்களுடன் வான் நோக்குதலும் நடைபெற்றன.

திருவள்ளூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் திருவாளர்கள் வேலாயுதம், பாலன், பாரி, சண்முகம் ஆகியோர் அடங்கிய மாவட்ட குழு மாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளை மிகவும் சிறப்பாக செய்திருந்தனர்.

வரும் ஆகஸ்ட் 9,10,11 தேதிகளில் திருப்பூரில் நடைபெறவுள்ள தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 20-வது மாநில மாநாட்டை ஒட்டி இந்த உபகுழு மாநாடு நடத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Top