You are here
Home > அறிவிப்புகள் > மகத்தான மக்கள் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் மறைவு : அறிவியல் இயக்கம் அஞ்சலி…

மகத்தான மக்கள் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் மறைவு : அறிவியல் இயக்கம் அஞ்சலி…

கணிணி பழுதானால் நின்றுவிடும். அதுபோலவே மூளை பழுதானால் உடலியக்கம் நின்றுவிடும். சொர்க்கம் என்பதோ இந்த வாழ்வுக்கு பிறாகான உலகம் என்பதோ இல்லவேயில்லை.  அப்படி ஒன்று இருக்கிறது என்று நம்புவது இருட்டைக் கண்டு பயப்படும் மனிதர்களுக்கான தேவதைக் கதைகள் என்று அறிவித்த விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் மார்ச் 14 தேதி அன்று மறைந்து விட்டார் என்ற துயரச் செய்தி கண்டு ஒட்டுமொத்த   அறிவியல் உலகமும் அவரை அறிந்தோரும் துயருற்று உள்ளனர். அந்த துயரத்தில் தமிழ் நாடு அறிவியல் இயக்கமும் பங்கேற்கிறது.தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றது.
அவர் கூறியது போலவே அவரது மூளை என்னும் கணிணி இயக்கத்தை நிறுத்திக் கொண்டது. தனது 21 ஆம் வயதில் ALS  என்ற நோயால் பாதிக்கப்பட்டு அதிக பட்சமாக இன்னும் இரண்டு ஆண்டுகளில் அவர் மரணித்துவிடுவார் என்று கணிக்கப்பட்ட அவர் அதற்கு மேலும் 55 ஆண்டுகள் வாழ்ந்து மகத்தான சாதனைகளைப் படைத்து இந்த உலகில் இருந்து விடைபெற்றுக் கொண்டிருக்கிறார்.. ஐன்ஸ்டீனுக்கு பிறகு  உலகுக்கு கிடைத்த அற்புத விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்ஸ்..
தனது கண் அசைவில் இயங்கும் கணிணியின் துணை கொண்டு அவர் கண்டுபிடித்துக் கூறியவை அவரது அறிவியல் எழுத்துக்கள் எவரும் எளிதில் எட்டிவிட முடியாத சாதனைகள். கருந்துகளைகள் பற்றிய அவரது கண்டுபிடிப்பு.. அவை ஒளியை உமிழும் என்று உரைத்த உண்மை… பெருவெடிப்புக்குப் பின்னர் இந்த பிரபஞ்சம் எப்படி விரிவடைந்தது என்ற கருத்துக்கள்.. குவாண்டம் ஈர்ப்பு பற்றிய அவரது ஆயுட்கால ஆய்வுகள் போன்றவை அறிவியல் உலகுக்கு மகத்தான பங்களிப்புகள்..
மேலும் அறிவியல் பரப்புதலுக்கு அவர் ஆற்றிய பங்கு மிகவும் போற்றத்தக்கது.. காலத்தின் சுருக்கமான வரலாறு என்ற அவரது நூல் நாற்பது மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. இரண்டரை கோடி பிரதிநிதிகள் விற்றுத் தீர்ந்தது. “பிரபஞ்சம் பற்றிய ஓர் மிகச் சுருக்கம்”   கிராண்ட் டிசைன்  என்ற பெயரில் வெளிவந்த தற்காலம் வரை பிரபஞ்சம் வளர்ந்த வரலாறு  என்று அவர் எழுதிக் குவித்ததும் அறிவியல் ஆர்வலர்கள் வாசித்து இன்புற்றதையும் எப்படி சொல்வது?
இதுதவிர ஐன்ஸ்டீன் போலவே  தன் சமகால சமூக பொருளாதார செயல்பாடுகளில் ஆதிக்க சக்திகளின் அத்துமீறல்களுக்கு தீவிர எதிர்வினை ஆற்றியவர்.  1968 ஆம் ஆண்டு வியட்நாம் யுத்தத்திற்கு எதிராக தன் தள்ளுவண்டி நாற்காலியோடு கலந்து கொண்ட இளைஞர். பாலஸ்தீன ஆதரவு நிலை கொண்டவர்.. இஸ்ரவேலின் அத்துமீறலை எதிர்த்து அந்நாட்டில் நடக்கவிருந்த அறிவியல் மாநாட்டில்  பங்கேற்பதைக் கூட தவிர்த்தவர்..
மருத்துவம் சமூக உடமையாக இருக்க வேண்டும் என்று கூறிவந்தார். இதற்கு எதிரான இங்கிலாந்தின் கருத்துக்களை கடுமையாக எதிர்த்தார். புவிவெப்பம் அடைதலை  மிகப் பணக்கார நாடுகள் கண்டு கொள்ளாமல் இருப்பதைக் கண்டித்தவர்.
இன்றைய நவீன முதலாளித்துவத்தால் வருவாய் ஏற்றத் தாழ்வுகள் தொடர்ந்து அதிகரிப்பதை பற்றியும் செல்வப் பங்கீடு செவ்வனே நடைபெறாமல் இருப்பதையும்  தொடர்ந்து எதிர்த்து வந்தார். அவரே குறிப்பிடுவது போல் “இந்த பிரபஞ்சம் யார் ஒருவராலும் கட்டமைக்கப்பட்டது அல்ல. யார் ஒருவரும் நமது விதியைத் தீர்மானிக்கவும் முடியாது. ‌சொர்கம் என்பதும் இல்லை. இந்த வாழ்வுக்கு பிந்தைய வாழ்வும் இல்லை. பிரபஞ்சம் என்னும் இந்தப் பெரும் கட்டமைப்பை  நமக்குக் கிடைத்த இந்த பெருவாழ்வு கொண்டு போற்றுவோம். அதற்கு நான் நன்றிக் கடன் பட்டவன்” என்னும் வார்த்தைகள் கொண்டே வழியனுப்புவோம்…
எந்த உடலுறுப்பும் செயல்பாடும் செயல்படாத மனிதன் என்ன செய்துவிட முடியும் என்பதற்கு மிக நீண்ட கால உதாரணமாக அவர் விளங்குவார். அவரது கண்டுபிடிப்புகள் கருத்துக்கள் ஆரோக்கியமான அறிவியல் வளர்ச்சிக்கு என்றென்றும் உறுதுணையாக இருக்கும்.
-தமிழ்நாடு அறிவியல் இயக்கம்  ( TNSF)

Leave a Reply

Top