You are here
Home > இயக்கச் செய்திகள் > ருபெல்லா தடுப்பூசி ஆபத்தா? பாதுகாப்பா? விளக்கமளிக்கும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

ருபெல்லா தடுப்பூசி ஆபத்தா? பாதுகாப்பா? விளக்கமளிக்கும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

தமிழ்நாட்டில் தற்போது சர்ச்சையை கிளப்பி வருவது அரசியல் வட்டாரம் மட்டும் அல்ல. மருத்துவத்துறையும் பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளாகி வருகிறது. தமிழகத்தில் உள்ள பள்ளிகளின் வாயிலாக அம்மைகளுக்கான ருபெல்லா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அத்தடுப்பூசி MMR என்பார்கள். அதை அரசு, தமிழகத்தின் அனைத்து குழந்தைகளுக்கும் விலையில்லாமல் இலவசமாக பயன்படுத்திக் கொள்ள வசதி செய்து, செயல்படுத்தி வருகிறது. அதன்மீது மற்ற சமூக அமைப்புகளும், பெருமுதலாளிகளும் தனது இலாபம் குறைகிறது என்பதற்காக தவறான கருத்தினை பரப்பி வருகின்றனர்.

ருபெல்லா தடுப்பூசி போடுவதால் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து என்றும், அத்தடுப்பூசி போட்டவுடன் காய்ச்சல் வருகிறது என்றும் பரப்பப்பட்டு வருகிறது. ஆகையால் மக்கள் அத்தடுப்பூசி போடுவதை தவிர்த்து வருகின்றனர். கிராம மக்கள் கல்வி அறிவியலில் இன்றும் பின்தங்கி உள்ளதால் மீடியாக்களும், சில சமூக அமைப்புகளும், அரசியல் வாதிகளும் தவறாக பரப்பி வரும் தகவலை நம்பி அத்தடுப்பூசியை தவிர்த்து வருகின்றனர். இதுகுறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மக்களின் நலன் கருதி ருபெல்லா தடுப்பூசி பற்றி விளக்கமளித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள பாரதி மெட்ரிக்குலேஷன் பள்ளியில் நடைபெற்ற தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் மாநில பொருளாளர் செந்தமிழ்ச்செல்வன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தமிழகம் முழுவதும் போடப்பட்டு வரும் ருபெல்லா MMR தடுப்பூசி குறித்து பேசினார். MMR தடுப்பூசி நல்லதா? கெட்டதா? பாதுகாப்பானதா? தற்போது உள்ள காலநிலைக்கு அத்தடுப்பூசி அவசியமா? MMR தடுப்பு போடுவதால் காய்ச்சல் வருமா? வந்தால் என்ன காரணம்? அதன் பின்விளைவுகள் என்ன? என்பது பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது.

குறிப்பாக MMR தடுப்பூசி தற்போது உள்ள காலநிலைக்கு அவசியம் என்றும், ஒவ்வொரு குழந்தையும் அத்தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளனர். MMR தடுப்பூசி போட்டால் காய்ச்சல் வருவது என்பது அந்த மருந்து சரியாக செயல்படுகிறது. அதன் வேலையை செய்கிறது என்று அர்த்தம் என்றும், அதனால் எந்தவித பாதிப்பும் வராது என்றும் கூறினர். கூட்டத்தில் MMR தடுப்பூசி குறித்து மக்களிடம் சரியான விழிப்புணர்வு கொண்டு சென்று, அதன் மூலம் அத்தடுப்பூசி மூலம் அனைத்து குழந்தையும் பயன்பெற செய்ய வேண்டும் என உறுதியேற்றனர்.

கிட்டதட்ட சுமார் 40 வருடங்களுக்கு முன்பு தட்டம்மையால் குழந்தைகள் பெரும்பாலும் பாதிப்படைந்து வந்தனர். அதற்காக அரசு அறிமுகப்படுத்திய தடுப்பூசியால் தற்போது தட்டம்மையை முழுமையாக விரட்டியடிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தான் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. ஒரு தாய் கருத்தரிப்பு ஏற்பட்டவுடன், அக்குழந்தை மற்றும் தாயின் நலன் கருதி குறிப்பிட்ட கால இடைவெளிக்கு இடையிடையே நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் மருந்துகளும், ஊட்டச்சத்துக்கள் நிறைந்த மருந்துகளும் வழங்கப்பட்டு, சத்துள்ள உணவுகளை உண்ண அறிவுறுத்தப்படுகிறது. ஆகையால் உலக நாடுகள் ஒன்றிணைந்து, பிறக்கும் குழந்தைகளின் நலன் கருதி, குழந்தைகள் பாதிக்க என்ன காரணம்? என ஆராய்ந்து அதன் அடிப்படையில் கண்டறிந்ததுதான் MMR தடுப்பூசி.

உலக சுகாதார மையத்தினால் அங்கீகரிக்கப்பட்ட MMR தடுப்பூசி வெளிநாடுகளில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏன்? நம் நாட்டிலும் பயன்பாட்டில் தான் உள்ளது. பிறந்த குழந்தைக்கு போடப்படும் போலியோ சொட்டு மருந்து போல் உயர் ரக மருந்தாக MMR தடுப்பூசி உள்ளது. இதற்கு முன்னர் MMR தடுப்பூசி, பணம் படைத்த பெரும் முதலாளிகளின் குழந்தைகளுக்கு மட்டும், தடுப்பூசிக்குண்டான விலைக்கு உரிய பணம் கொடுக்கப்பட்டு போடப்பட்டு வந்தது. ஆனால் அரசு, மற்ற ஏழைக் குழந்தைகளும் பயன்பெற வேண்டும் என்பதற்காக இலவசமாக விலையில்லாமல் வழங்கி வருகிறது. தற்போது இலவசமாக வழங்கி வருவதால் அதன் மகத்துவம் தெரியாமல் மக்கள் நிராகரித்து வருகின்றனர்.

தற்போது உள்ள குழந்தைகள் சரியான ஊட்டச்சத்து இன்றி பிறக்கிறது. நம் நாட்டில் உள்ள பெண் குழந்தைகள் பெரும்பாலும் ஊட்டச்சத்து குறைபாடால் கருத்தரிப்பின் போதும், குழந்தையை ஈன்றெடுக்கும்போதும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். ஊட்டசத்து குறைப்பாட்டால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளது. இயற்கையாகவே ஒவ்வொரு மனிதனுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி நம் உடலில் உள்ளது. நோய் உருவாக காரணம் வைரஸ் தாக்கம். அந்த வைரஸ் நம்முள் சென்றுவிட்டால், அதற்கான பாதிப்பை ஏற்படுத்தி உடல்நல குறைவுக்கு ஏற்படுத்துகிறது. அந்த வைரஸ்களிடம் இருந்து நம்முள் உள்ள நோய் எதிர்ப்பு சக்திகள் நம்மை பாதுகாத்து, சம்பந்தப்பட்ட வைரஸை அகற்றுகிறது.

ஆனால் அதற்கான நோய் எதிர்ப்பு சக்தி எங்குள்ளது. வைரஸ் நம்முள் தோல் நுண்துளைகள், வாய், மூக்கு, கண், காது, ஆசன துளைகள் வழியாக நுழைகிறது. இதனை முதலில் தோல் நுண்துளை வழியாக நுழையும் வைரஸை வியர்வை துளிகள் அகற்றுகிறது. ஆனால் நாம் வியர்வை முழுவதும் ஒழுக விடாமல் துடைப்பதால் வைரஸ் உள்ளேயே தங்கி விடுகிறது. தும்பல் வரும்போது மூக்கு வழியாக பயணிக்கும் வைரஸ் அகற்றப்படுகிறது. இதுபோன்ற நம் உடலில் ஏற்படும் இயற்கையான செயல்பாடுகள் உடலில் நுழையும் வைரஸை அகற்றி, நம் உடலை பாதுகாக்கவே. அவற்றையும் கடந்து செல்லும் வைரஸை நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்திகள், அந்த வைரஸை செயலிழக்க செய்து, அடியோடு அகற்றுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி என்பது நாம் உண்ணும் சத்துள்ள உணவுகளின் மூலம் கிடைக்கும் ஊட்டச்சத்துக்கள் தான். ஆனால் தற்போது உண்ணும் உணவில் அந்த ஊட்டசத்துக்கள் குறைவு. ஆகையால் தான் நோய் பரவும் அபாயம் அதிகம். அதற்காக தான் MMR தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதனை புரிந்து கொள்ளாமல் மக்கள் எதிர்த்து வருகின்றனர்.

அனைவரும் MMR தடுப்பூசியை தன் குழந்தைகளுக்கு போட வேண்டும். தன் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு அரசின் இந்த இலவச திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நம் எதிர்கால இளைஞர்களான அக்குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என்பது தான் அறிவியல் இயக்கத்தின் நோக்கம் என கூறினர். அறிவியல் இயக்கம் மக்கள் நலன் கருதி செயல்படும் ஒரு அமைப்பு. நாட்டில் தவறான சட்டங்கள் இயற்றும்போதும், வெளிநாட்டின் சூழ்ச்சிகள் உள்நுழையும் போதும், பகுதி மக்களின் அறியாமையால் வரும் பாதிப்பை உணராத போதும், அறிவியல் ரீதியாக ஆய்வு செய்து, அதில் உள்ள உண்மைகளை மக்களிடம் பல்வேறு கலைநிகழ்வுகள், மேடை நாடகங்கள், கருத்துரைகள் மூலம் விளக்கி, மக்களின் நலனுக்கு எதிரான சூழ்ச்சிகளை அறவே அகற்ற பாடுபடும் ஒரு இயக்கம்.

தான் கடந்து வந்த பாதையில் பல்வேறு சாதனைகளை செய்துள்ளது என்பதும், சமச்சீர் கல்வியில் அறிவியல் இயக்கத்தின் பங்கு பெரிதும் உதவியது என்பதும் மக்கள் அறிந்த ஒன்று. ஆகையால் இந்த இயக்கம் ஒரு விபரத்தை கூறினால் அறிவியல் ரீதியாக அணுகி தான் கூறும் என்பது அறிவோம். எனவே அனைத்து தமிழக மக்களும் தங்களின் குழந்தைகளின் நலன் கருதி அரசு இலவசமாக வழங்கி வரும் ருபெல்லா MMR தடுப்பூசியை பயன்படுத்த வேண்டும் என்பது தான் எங்களின் விருப்பமும்.

நன்றி: https://mediahorn.news

Leave a Reply

Top