You are here
Home > இயக்கச் செய்திகள் > மக்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிடுக: தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

மக்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிடுக: தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

பொருளாதார விரிவாக்கத்திற்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் 15.2.2017 ல் கூடியது. இக்கூட்டத்தில் இந்தியாவில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கான முதலீடு அதிகரிப்பது, பன்னாட்டு கம்பெனிகள் முதலீடு செய்ய வேண்டுமென முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இந்தியாவில் பூமிக்கடியில் ஹைட்ரோ கார்பன்கள் புதைந்திருப்பதாக கண்டறியப்பட்ட இடங்களில் தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நெடுவாசல் பகுதியும் உள்ளடங்கியுள்ளது.

வானக்கன்காடு பகுதியில் 92 -93 களிலும், கருக்காகுறிச்சி, நல்லான்கொல்லை, வடகாடு ,கோட்டைக்காடு ஆகியபகுதிகளில்  2006ம் ஆண்டுகளிலும் இதற்கான முன்னோட்டப் பணிகள் நடைபெற்றுள்ளது. இப்பகுதியில் ஆழ்குழாய் மூலம் துளையிட்டு ஆய்வு செய்துள்ளனர். இப்பணியை எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ONGC) மேற்கொண்டு வருகிறது.

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு நெடுவாசல் மற்றும் சுற்றுவட்டார கிராமப்பகுதி மக்களும் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இச்சூழலில் கள நிலை குறித்து அறியவும், இத்திட்டத்தில் உள்ள பிரச்சனைகள் குறித்து விளக்கவும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் முடிவு செய்து கள ஆய்வு மேற்கொண்டது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வளர்ச்சி உபகுழு மாநில ஒருங்கிணைப்பாளர்  எம்.எஸ்.ஸ்டீபன்நாதன், மாநிலச்செயலாளர் எஸ்.டி.பாலகிருஷ்ணன், மாவட்டத்தலைவர் அ.மணவாளன், ஒன்றியச்செயலாளர்கள்  சீவானந்தம், சசிக்குமார் சமூக ஆர்வலர்கள் மதி, நாராயணன் ஆகியோர் கொண்ட குழு கள நிலைமை குறித்து ஆய்வு செய்தது.

ஹைட்ரோ  கார்பன்

கார்பனும் ஹைட்ரஜனின் இணைவுதான் ஹைட்ரோ கார்பன். மீத்தேனின் வேதி இணைவு கார்பனும் ஹைட்ரஜனும் தான். அதாவது CH4. ஒரு கார்பனும் நான்கு ஹைட்ரஜன்களுமே மீத்தேன். கார்பனுக்கும், ஹைட்ரஜனுக்கும் இடையே இன்னொரு CH2 வைத் சேர்த்தால் அதன் பெயர் ஈத்தேன். CH3 CH3 மூன்று எனில் புரோபேன், நான்கு எனில் பியூட்டேன், ஐந்து எனில் பெண்டேன், ஆறு எனில் ஹெக்சேன் ஆகும்.மொத்த்த்தில் பெட்ரோலியம், நிலக்கரி, எரிவாயு, மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு, நாப்தா, ஷேல் எரிவாயு போன்றவற்றின் மொத்த வடிவமே ஹைட்ரோ கார்பன் ஆகும்.

2016க்கு முன்புவரை மீத்தேன், பெட்ரோலியம், மண்ணென்ணெணைய் போன்ற எரிபொருள் எடுப்பதற்கு தனித்தனியாக அனுமதி பெற வேண்டும்.3.3.2016க்குப் பின்பு ஹைட்ரோ கார்பன் என்ற பெயரில் ஒரே அனுமதியில் எந்த எரிபொருளும் எடுக்கலாம். அந்த அடிப்படையில் நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் என்ற திட்டம் அனுமதி பெற்றிருப்பது பலத்த சந்தேகத்தைக் உண்டாக்குகிறது.

மீத்தேன் என்பது வீட்டில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு போன்ற எரிவாயு. நிலக்கரி அல்லது பழுப்பு நிலக்கரி படுகையில் கரி அடுக்குகள் இடையேயும் ஏடுகள் இடையேயும் உள்ள மீத்தேன் சுற்றி இருக்கும். நீரின் அழுத்தத்தால் இருக்கும் இடத்தில் இறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நீரை இறைத்து அழுத்தத்தைக் குறைத்தால்தான் வாயு வெளியேறி நிலத்தின் மேல்பரப்பிற்கு வர இயலும். ஆனால் நிலக்கரி சுரங்கங்களில் நிலக்கரி எடுக்கப்படும்போது இவை வெளியேறலாம்.

மீத்தேன் எடுப்பதே தவறு எனக் கூறுவது அறிவுடமையாகாது. ஆனால் அப்படி எடுக்கும்போது கிடைக்கும் பயனைக் காட்டிலும் அதனால் விளையும் பாதகங்கள் அதிகம் என்றால் எடுப்பது தவறு எனத்தான் கூற வேண்டும். மேலும் புவி வெப்பமாதல் ஒரு பெரும் பிரச்சினை. படிம எரிபொருட்களை ஆகக் குறைந்த அளவில் பயன்படுத்த வேண்டும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். புவிப் பந்தில் புதைந்து கிடக்கும் படிம எரிபொருள் அனைத்தையும் எடுத்துப் பயன்படுத்தினால் இந்தப் புவி எந்த உயிரும் வாழத் தகுதியற்ற கோளமாக மாறிவிடும் எனபதையும் மனதில் கொள்ள வேண்டும்.

மீத்தேன் வாயுவை அதைச் சுற்றியுள்ள நீர்தான் அழுத்தி அதன் இடத்தில் இறுத்தி வைத்துள்ளது. மீத்தேன் எடுக்க வேண்டுமென்றால் ஆழ்துளைக் கிணற்றின் மூலம் இந்த நீரை முதலில் வெளியேற்ற வேண்டும். இந்த நீர் மிகவும் அதிக அளவில் வரக்கூடியது மட்டுமல்ல மிக அதிகமான உப்புகள் உள்ள உப்புநீர். புரடுயூஸ்டு வாட்டர் என அழைக்கப்படும் இந்த கழிவு நீர்தான் பெரும் பிரச்சினையாக மாறிவிடும்.

டெல்டா மாவட்டங்கள்

டெல்டா மாவட்டங்களில் மட்டும் செயல்படுத்துவதற்கான காரணம் காலங்காலமாய் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குகளின் போது அடித்து வரப்பட்ட மரங்கள், தாவரங்கள் படிந்து, படிந்து, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாய், மக்கி, இறுகி கட்டி தட்டி என தொன்மபடிமங்களாய், வாயு வடிவில் இருந்தால், மீத்தேன், திட மற்றும் திரவ வடிவங்களில் மண்ணில் படிந்திருக்கும். மண்ணில் துளையிட்டு இவற்றை வெளியில் எடுத்து லிக்யுஃபைடு பெட்ரோலியம் கேஸ் என்னும் LPG, கம்பரஸ்டு நேச்சுரல் கேஸ் என்றறியப்படும் CNG, பெட்ரோல், டீசல், மண்ணெண்ணை, உரம், பெயின்ட் இத்யாதிகள் என்று தயாரிக்கப்படுகிறது.

படிம எரிபொருட்களான நிலக்கரி, பழுப்பு நிலக்கரி, கச்சா எண்ணெய், எரிவாயு எல்லாம் ஒரு காலத்தில் வாழ்ந்த உயிர்ப் பொருட்களின் எச்சத்தால் உருவானவையே. தொல்பழங்காலத்தில் உயிர் வாழ்ந்த தாவரங்களும், விலங்குகள் புழு பூச்சிகளும் இறந்து மண்ணில் புதைந்து மட்கிப்போகின்றன. மேலும் மேலும் நீரும் மண்ணும் சகதியும் சேர்வதால் கடும் அழுத்தத்திற்கு உள்ளாகின்றன. இதனால் வெப்பமும் அதிகரிக்கின்றது. இந்த அதிக அழுத்தம், வெப்பம் காரணாமாக உயிர்ப் பொருள், நிலக்கரியாக, பழுப்பு நிலக்கரியாக, எண்ணெயாக, எரிவாயுவாக மாற்றம் அடைகின்றது.

இன்று வாழ்ந்து மடியும் உயிர்ப்பொருட்கள் எண்ணெய், எரிவாயு,நிலக்கரி,பழுப்பு நிலக்கரியாக மாற்றம் அடைவதில்லை. சுமார் 5 கோடி ஆண்டுகளுக்கு முன்பிருந்து சுமார் 1,5 கோடி ஆண்டுகள் முன்புவரை வாழ்ந்து மடிந்த உயிர்ப்பொருட்கள்தாம் இப்படி மாற்றம் அடைந்துள்ளன. அதற்குப் பிறகு பூமிப் பந்தைச் சுற்றியுள்ள வளி மண்டலத்தில் ஆக்சிஜன் அளவு கூடிவிட்டபடியால், மடியும் உயிர்ப்பொருள் ஆக்சிஜனுடன் இணைந்து சாம்பல் போலாகி விடுகின்றது. எனவே 1,5 கோடி ஆண்டுகளுக்கு முன்பிருந்து இன்றுவரையிலோ இனிமேலோ நிலக்கரியோ, பழுப்பு நிலக்கரியோ, எண்ணெய்யோ எரிவாயுவோ உருவாக வாய்ப்பு இல்லை. அதற்கான சூழல் இல்லை.

கோரிக்கைகள்

நெடுவாசல் பகுதியில் உள்ள கருக்காகுறிச்சி ஊராட்சி மன்றத்தில் கருக்காகுறிச்சி, நல்லான்கொல்லை ஆகிய கிராமங்களிலும், வடகாடு ,கோட்டைக்காடு, வானக்கன்காடு  ஆகிய   பகுதிகளிலும்  இதற்கான ஆழ்துளை குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றில் வானக்கன்காடு கிராமத்தில் அமைகப்பட்ட ஆழ்குழாய் முறையாக பராமரிக்கப்படாததால் கச்சா எண்ணெய் வழிந்துகொண்டிருக்கிறது. இது பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியுள்ளது.

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு என மக்களிடையே நிலத்தை ஓ என் கி சி பெறவில்லை. எண்ணெய் எடுப்பதற்கு என பெறப்பட்டுள்ளது. அரசு நிறுவனம் அல்லாமல் தனியார் நிறுவனமான ஜெம் இப்பணியில் ஈடுபட உள்ளது மக்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது.

நெடுவாசல் பகுதியைச் சுற்றிலும் சுமார் 100க்கும் மேற்பட்ட கிராமப் பகுதி மக்கள் வாழ்கின்றனர். வறட்சி மிகுந்த புதுக்கோட்டை மாவட்டத்தில்  ஓரளவு செழிப்பாக பகுதி நெடுவாசல் பகுதியாகும். காவேரி ஆற்றுப் பாசானமும் பொய்த்த நிலையில் ஆழ்குழாய் தண்ணீர் மூலம் விவசாயம் செய்து வருகின்றனர். விவசாயமே இப்பகுதி மக்களின் பிரதானத் வாழ்வாதாரத் தொழிலாக உள்ளது. தற்போது 300 முதல் 400 அடியில் ஆழ்குழாய் அமைத்து தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர்.

நெல், கரும்பு, மா,வாழை,பலா,கடலை, சோளம்,மலர்,தென்னை  ஆகியவை பயிர் செய்து வருகின்றனர். அரியவகை தாவரங்கள் ,உயிரினங்கள் உள்ள பகுதியாகும்.பல்லுயிரிப் பெருக்கம் நிறைந்த பகுதியாகும். விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் மக்களுக்கு எந்தவொரு விளக்கத்தையும் மத்திய அரசோ, ஒ என் ஜி சி நிறுவனமோ தரவில்லை என்பது வருந்தத்தக்கது. மேலும் விவசாயம் நலிந்து வரும் சூழலில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமலும், விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் அமைக்காமலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை துவங்குவது  சுமார் 50,000 ஏக்கர் விவசாய நிலத்தை பாதிக்கும்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் இப்பகுதி மக்களுக்கு எந்தவித பயனும் இல்லை. மாறாக  நீராதாரத்தை மேன்மேலும் சுரண்டுவதற்கும், விவசாயம் முடங்குவதற்கும், மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை முடக்குவதற்கும், சுற்றுச்சூழல் கேட்டிற்குமே வழிவகுக்கும்.தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வளர்ச்சிப் பணிகளுக்கு எதிரானவர்கள் அல்ல. தெளிவான உறுதியான அறிவியல்பூர்வமாக இல்லாத திட்டங்களை மட்டுமே தமிழ்நாடு அறிவியல் இயக்கம் எதிர்க்கிறது. எனவே இத்திட்டத்தை கைவிட வேண்டுமென தமிழ்நாடு அறிவியல்  இயக்கம் வேண்டுகோள் விடுக்கிறது.

அன்புடன்

(எம்.எஸ்.ஸ்டீபன்நாதன்)

மாநில ஒருங்கிணைப்பாளர்

வளர்ச்சி உபகுழு

தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

நன்றி: http://www.nakkheeran.in

Leave a Reply

Top