You are here
Home > இயக்கச் செய்திகள் > நீட் – எக்சிட் தேர்வுகளை தமிழக அரசு எதிர்க்க வேண்டும் கல்வி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு வலியுறுத்தல்

நீட் – எக்சிட் தேர்வுகளை தமிழக அரசு எதிர்க்க வேண்டும் கல்வி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு வலியுறுத்தல்

சென்னை, ஜன.17-

மருத்துவக் கல்விக்கான நீட் மற்றும் எக்சிட் தேர்வுகளை தமிழக அரசு எதிர்க்க வேண்டும் எனகல்வி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.கல்வி உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் சென்னையில் அண்மையில் நடைபெற்றது. மாநில அமைப்பாளர் பேரா.நா.மணி, நிதிக்காப்பாளர் ச.மோசஸ் மற்றும்பல்வேறு ஆசிரியர் இயக்கங்களின் தலைவர்களும் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை உருவாக்க முன்மொழிவுகளில் காணப்பட்ட ஏராளமான ஆசிரியர், மாணவர் விரோத அம்சங்களுக்கு எதிராக நாடு முழுவதும் பரவலாக எதிர்ப்பியக்கங்கள் நடைபெற்றன. குறிப்பாக தமிழகத்தில் பள்ளி முதல் பல்கலைக் கழகங்கள் வரையிலான சுமார் 40க்கும் மேற்பட்ட ஆசிரியர், மாணவர் இயக்கங்கள் மற்றும் கல்விச் செயல்பாட்டு இயக்கங்களை உள்ளடக்கிய கல்வி உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பின் மூலமாக பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் எதிர்ப்பியக்கங்கள், கருத்தரங்குகள், கையெழுத்து இயக்கங்கள் நடைபெற்றதன் விளைவாக மத்திய அரசு தனது நிலையிலிருந்து சிறிது பின்வாங்கி உள்ளது.

புதிய கல்விக்கொள்கை உருவாக்கத்திற்காக புதிதாக ஒரு குழு அமைக்கப்படும் என அறிவித்துள்ளது.புதிதாக உருவாக்கப்படும் அக்குழுவில் கல்விஉரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பின் சார்பில் ஏற்கனவே தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவது போல், அனைத்து மாநிலங்களிலிருந்தும் சிறந்தகல்வியாளர்கள், சிறுபான்மையினர், விளிம்புநிலை மக்களின் கருத்துகளை பிரதிபலிக்கக் கூடியவர்களையும் இடம்பெறச் செய்ய வேண்டும் எனக்கேட்டுக் கொள்கிறோம். அதேசமயம், ஒருபுறம்புதிய குழு உருவாக்கப்படும் எனக் கூறிக் கொண்டேமறுபுறம் புதிய கல்விக் கொள்கையின் பல கூறுகளை நேரடியாகப் புகுத்த முனைந்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சியைக் கைவிடுதல், சி.பி.எஸ்.சி. பள்ளிகளில் தலைமைஆசிரியர்களுக்கு எழுத்துத் தேர்வு போன்றஅம்சங்களை கல்விக் கொள்கை உருவாக்கப்பணிகள் நடந்துகொண்டிருக்கும் போதே முன்கூட்டி அமல்படுத்துவது, மாநிலங்களில் குழப்பங்களை உருவாக்குவது போன்றவை ஜனநாயக நடைமுறைகளுக்கு எதிரானது. எனவேபுதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பணி முழுமையடையும் வரை இத்தகைய போக்குகளை மத்திய அரசு கைவிட வேண்டும் என கல்வி உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு வலியுறுத்துகிறது.தமிழகத்தில் காமராசர் ஆட்சியில் இருந்தகாலத்தில் கல்வியில் தகுதி, திறமை என்பதெல்லாம் கல்வி பெறுவதில் இருந்து மக்களைஅந்நியப்படுத்துவதே என்பதில் ஆழ்ந்த நம்பிக்கைகொண்டிருந்தார். கடும் நிதிநெருக்கடியிலும் பள்ளி முதல் மருத்துவக் கல்லூரிகள் வரை துவக்கினார்.

இன்று தமிழகத்தில் 24 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் தமிழகஅரசு தற்போது பின்பற்றி வரும் சேர்க்கை நடைமுறை மூலம் மருத்துவம் படித்தவர்கள் தற்போது மிகச் சிறப்பாகவே மருத்துவ சேவையாற்றி வருகின்றனர்.இந்நிலையில் நீட் தேர்வு என்பது மருத்துவக் கல்வி சேர்க்கையில் தமிழக மக்களுக்கு, குறிப்பாகவிளிம்பு நிலை மக்களுக்கு மருத்துவக் கல்வி உரிமையை மறுப்பதோடு, தமிழக அரசு தனது நிதியில்தனது மக்களுக்கு வழங்கி வரும் தரமான மருத்துவக் கல்வியை மறுப்பதாகவும் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானதாகவும் அமையும்.

மேலும் நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி மையங்கள்நாடெங்கும் காளான்கள் போல உருவாகிடவும் அதன் மூலம் சகலபிரிவு மக்களையும் மாணவர்களையும் தனியார் நிறுவனங்கள் கொள்ளையடித்திடவுமான ஒரு புதிய சந்தையை ஏற்படுத்திக் கொடுத்திடவே உதவும் என்பதால் மத்திய அரசு இந்த நீட் தேர்வு நடத்துகின்ற முடிவைக் கைவிட வேண்டும் என கல்வி உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பின் மாநிலச் செயற்குழு வலியுறுத்துகிறது. மேலும் இந்நுழைவுத் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு கல்வி உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு முழுமையாகத் துணைநிற்கும் என்பதையும் இம்மாநிலச் செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது.

மேலும் நீட் தேர்வைப் போலவே மற்றும் ஒருதேர்வு எக்சிட் தேர்வாகும். ஐந்தரை ஆண்டுகள்மருத்துவம் படித்து பயிற்சி பெற்று மருத்துவப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றாலும் மருத்துவராகப் பணிபுரிய முடியாது என்னும் நிலைக்கு தள்ளுகிறது இத்தேர்வு. எனவே மருத்துவக் கல்வியினைக் கொச்சைப்படுத்துகின்ற இந்த தேர்வினையும் அமலாக்கக் கூடாது எனவும், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை உத்தரவாதப்படுத்தும் பொருட்டு அனைத்துப் பள்ளிகளிலும் வருகின்ற கல்வியாண்டு துவக்கத்தின் போதே மழலையர் வகுப்புகள் துவங்கப்பட வேண்டும். அதற்கான ஆசிரியர்களும் தாமதமின்றி உடனடியாக நியமிக்கப்பட வேண்டும் எனவும் மாநில அரசை கல்வி உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

மேலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும்பள்ளிகளில் கற்றல் கற்பித்தல் நேரம் விரயமாகாத வண்ணம் தமிழக அரசு கோடை விடுமுறையின் போதே பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்திடவும் பாடநூல்கள் உள்ளிட்ட அனைத்து விலையில்லாத் திட்டங்களையும் கோடை விடுமுறையின் போதே தனி அலுவலர்கள் மூலம் பள்ளியிலேயே கொண்டு சேர்த்திட வேண்டும் எனவும் அக்.8 அன்று கல்வி உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பின் சார்பில் சென்னையில் நடைபெற்ற மாநில மாநாட்டில் கல்வியாளர் முனைவர் வே. வசந்தி தேவி அவர்களது தலைமையிலான கல்வியாளர்கள் குழு தயாரித்த மாற்றுக் கல்விக் கொள்கைக்கான மக்கள் சாசனம் வரைவு அறிக்கை வெளியிடப்பட்டது.

விவாத அரங்கு

அந்த அறிக்கையை முன்வைத்து தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் மாநில அளவிலான வாசிப்பு முகாம் நடைபெற்றுள்ளது. அதன்மூலம் கல்விக் கொள்கை குறித்து பொதுமக்களிடமும் விவாதிக்கப்பட்டுள்ளது. அதன்தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் 8 மண்டலங்களாகப் பிரித்து இந்த வரைவறிக்கை மீதான ஒரு நாள் விவாத அரங்கை பிப்.5 அன்று நடத்துவதுஎனவும் அந்நிகழ்வில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் 42 அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்கேற்று தங்களது ஆலோசனைகளைத் தெரிவிக்க வேண்டும் எனவும் வரக்கூடிய ஆலோசனைகளைத் தொகுத்து வரைவினைச் செழுமைப்படுத்தி மாற்றுக் கல்விக் கொள்கையை இறுதிப்படுத்தி நாட்டின் புதிய கல்விக் கொள்கைஎவ்வாறு அமைய வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக மத்திய, மாநில அரசுகளுக்கு அனுப்பி வைப்பது எனவும் கல்வி உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பின் மாநிலச் செயற்குழுசார்பில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி: தீக்கதிர் நாளிதழ்

Leave a Reply

Top