You are here
Home > இயக்கச் செய்திகள் > தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்தும் அகில இந்திய பிரச்சாரம் தொடங்கியது

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்தும் அகில இந்திய பிரச்சாரம் தொடங்கியது

சென்னை: “அறிவியல் பார்வையில் இந்தியாவை அறிவோம்’’ என்ற முழக்கத்தோடு அகில இந்திய அளவில் அறிவியல் பிரச்சார இயக்கம் நவம்பர் 7ஆம் தேதி துவங்கி அடுத்தாண்டு நவம்பர் 7 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. பொதுமக்களிடம் அறிவியல் குறித்த விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கத்தில் மக்கள் இயக்கமாக இது நடைபெற உள்ளது. இதன் ஒரு பகுதியாக சென்னை கேரள சமாஜத்தில் சர்.சி.வி.ராமன் பிறந்த நாளான திங்களன்று (நவ.7) இதன் தொடக்க விழா நடைபெற்றது.

“சப்கா தேஷ், ஹமாரா தேஷ்’’ என்ற “எல்லோருக்குமான தேசம், எங்கள் தேசம்’ என்ற உணர்வை மாணவர்கள் மனதில் ஆழமாக பதிக்கும் நோக்கோடு இந்தப் பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசிய, ‘தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலத் தலைவர்s பேராசிரியர் மோகனா, பன்முகத்தன்மை, ஜனநாயகம், வளர்ச்சி, சமூக நீதி
ஆகிய தலைப்புகளில் அனைவருக்கும் அறிவியல் பார்வையை ஏற்படுத்தும் முயற்சி இது என்றும் பெண்கள் பங்கேற்போடு சமூகமாற்றத்தை நிகழ்த்த வேண்டும்’’ என்றார்.

தொடக்கவுரையாற்றிய பின், அகில இந்திய மக்கள் அறிவியல் இயக்கங்களின் கூட்டமைப்பின் (ஏஐபிஎஸ்என்) துணைத்தலைவர் பேரா.ராஜமாணிக்கம், அறிவியலுக்கு எதிரான அரசியல் சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. அறிவியல் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. அறிவியலுக்கு எதிராக பேசுவர்களின் ஒலி அதிகமாக கேட்கிறது. அறிவியல் ஆய்வுக்கான நிதியை மத்திய அரசு குறைக்கிறது. இந்நிலையில் எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் அறிவியலை பரப்பும் பணியை செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அறிவியல் வெகுஜன இயக்கமாக மாறவேண்டும் என்று கூறிய அவர், ‘பன்முகத்தன்மைக்கும் ஆபத்தை விளைவிக்கும் கருத்துக்களை அறிவியலின் துணைகொண்டு முறியடிக்கவேண்டும். மாநிலம் முழுவதும் ஆயிரம் மையங்களில் அறிவியல் பயணம், மக்கள் அறிவியல் திருவிழாக்கள், ஆசிரியர் கல்வித்திருவிழாக்கள், குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் நட்பு பரிமாற்றம் அறிவியல் நிகழ்ச்சிகள் நடத்தப்படவேண்டும்’’ என்றார்.

முன்னதாக மாநிலச் செயலாளர் உதயன் வரவேற்றார். “எங்கள் தேசம்’’ என்ற தலைப்பில் அறிமுக மாநிலப் பொருளாளர் செந் தமிழ்ச்செல்வன் உரையாற்றினார். கேரளம் வித்யாலயம் மேல்நி லைப்பள்ளியின் தாளாளர் பணிக்கர், தலைமை ஆசிரியர் சதீஷ் ஆகியோர் வாழ்த்திப்பேசினர். ‘துளிர் இல்லம்’ செயல்பாடுகள் குறித்து மாநிலச் செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணி பேசினார். சென்னை மாவட்ட நிர்வாகிகள் இளங்கோ, ராமச்சந்திரன், பூங்கோதை ஆகியோர் அறிவியல் பாடல்களைப் பாடினர்.இந்த நிகழ்ச்சியில் அறிவியல் விழிப்புணர்வு பிரச்சார பதாகைகள் வெளியிடப்பட்டன. நிறைவாக உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது.

Leave a Reply

Top