You are here
Home > கல்வி > ஏழை மாணவர்களுக்கு பாதகமாக உள்ளதால் மாற்று கல்விக் கொள்கை வெளியீடு

ஏழை மாணவர்களுக்கு பாதகமாக உள்ளதால் மாற்று கல்விக் கொள்கை வெளியீடு

சென்னை: மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை, ஏழை எளிய மாணவர்களுக்கு பாதகமாக உள்ளதால் 8ம் தேதி நடக்கும் மாநில மாநாட்டில் மாற்றுக் கல்விக் கொள்கையை வெளியிட உள்ளதாக கல்வி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கல்வி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பில் சென்னையில் நேற்று பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. அதில் கூட்டமைப்பின் அமைப்பாளர் மணி, நிதிக்காப்பாளர் மோசஸ், செயற்குழு உறுப்பினர்கள் தாஸ், பக்தவச்சலம் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது கூட்டமைப்பின் அமைப்பாளர் மணி கூறியதாவது:

மத்திய அரசு தயாரித்துள்ள புதிய கல்விக் கொள்கையானது, ஏழை, எளிய மாணவ மாணவியருக்கு உயர்கல்வி கிடைக்காத வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. தொடக்க கல்வியில் 8ம் வகுப்பு வரை தேர்ச்சி முறையை ரத்து செய்வது, கூட்டுப் பள்ளி என்ற பெயரில் தொடக்கப் பள்ளிகளை மூடுகின்ற செயல்களை மேற்கொள்வதாக உள்ளது.கல்விக் கொள்கை உருவாக்கும் போது மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்களிடம் கருத்து கேட்கப்பட வேண்டும். ஆனால் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அதை செய்யவில்லை.

எனவே, புதிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக ஒரு கல்விக் கொள்கையை இந்த கூட்டமைப்பு தயாரிக்கிறது. இதற்கு முன்னாள் துணை வேந்தர் வசந்திதேவி தலைமை ஏற்றுள்ளார். சென்னையில் அக்டோபர் 8ம் தேதி லயோலா கல்லூரியில் மாநில மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் மாற்றுக் கல்விக் கொள்கை வெளியிடப்பட உள்ளது. கேரளாவின் முன்னாள் கல்வி அமைச்சர் எம்.ஏ.பேபி மாற்றுக் கல்விக் கொள்கையை வெளியிடுகிறார். ஆந்திராவின் சட்ட மேலவை உறுப்பினர் பாலசுப்பிரமணியன் அதை பெற்றுக் கொள்கிறார். இந்த மாற்றுக் கல்விக் கொள்கை மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு கூட்டமைப்பின் அமைப்பாளர் மணி தெரிவித்தார்.

நன்றி: தினகரன் நாளிதழ்

Leave a Reply

Top