You are here
Home > இயக்கச் செய்திகள் > புதிய கல்விக்கொள்கையை எதிர்த்து தமிழகம் முழுவதும் தொடர் இயக்கம் கல்வி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு முடிவு

புதிய கல்விக்கொள்கையை எதிர்த்து தமிழகம் முழுவதும் தொடர் இயக்கம் கல்வி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு முடிவு

திருச்சிராப்பள்ளி. செப்,4-

மோடி அரசின் புதிய கல்விக்கொள்கையை எதிர்த்து தொடர் இயக்கம் நடத்த கல்வி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. கல்வி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் மாநில பொதுக்குழு கூட்டம் சனிக்கிழமை திருச்சியில் நடைபெற்றது.கூட்டத்திற்கு கல்வி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் மாநில அமைப்பாளர் பேராசிரியர் என்.மணி தலைமை வகித்தார்.

கூட்டத்தில் நிதிக்காப்பாளர் மோசஸ் பேசுகையில், 1997க்கு முன் ஒருவகுப்புக்கு ஒரு ஆசிரியர் இருந்தார். அதன் பின் 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என வந்த பின் பிரச்சனை ஆரம்பித்தது. இன்றைக்கு 19 ஆயிரம்அரசு பள்ளிகளில் 2 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். இந்த பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களுக்கு தேர்தல், கணக்கெடுப்பு என மற்ற வேலைகளை கொடுப்பதன் மூலம் இந்த பள்ளிகளில் 1 ஆசிரியர் பள்ளிகளாகவே செயல்படுகிறது. தற்போது உள்ள அரசுப் பள்ளிகளின் நிலை என்பது சிறுமழை பெய்தால் கூட அனைவரும் நனையும் நிலையில் உள்ளது.அரசு பள்ளிகள் திறக்க விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் தனியார் பள்ளிகளுக்கு உள்ளதா என்பது கேள்விகுறி தான். தமிழகத்தில் ஆயிரக்கணக்கான அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தனியார் மயத்தை தடுக்காமல் அரசு பள்ளிகளை காப்பாற்ற முடியாது. புதிய கல்வித் திட்டம் அரசு பள்ளிகளை காலி செய்யும் வேலையை செய்கிறது. மேலும் தனியார் பள்ளியில் படித்தால் தான் வேலைகிடைக்கும் என்ற சூழ்நிலையை உருவாக்கி உள்ளனர். தனியார் பள்ளிகளோ பெரிய கட்டிடங்களை கட்டி ஆசிரியர்களின் உழைப்பை சுரண்டுகிறது.மாணவர்களின் மனப்பாட முறையை மாற்றவேண்டும் என கூறிவிட்டு அதே மனப்பாட முறையில் நடைபெறும் ஆசிரியர் தேர்வு எந்த வகையில் சரி என்று கேள்வி எழுப்பினார்.

கூட்டத்தில் தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிபட்டதாரி ஆசிரியர் கழக நிறுவன தலைவர் மாயவன், தமிழ்நாடு இடைநிலைஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் சங்கர், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்க செயல் தலைவர் தயாளன், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மண்ட், இந்திய மாணவர் சங்க மாநிலச் செயலாளர் உச்சிமாகாளி, மூட்டா மாநிலத் தலைவர் பேராசிரியர் ஜஸ்டன் மனோகர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்க மாநில துணைத் தலைவர் நந்தலாலா, பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர் சங்க மாநிலதலைவர் உதயசூரியன், தமிழ்நாடு அறிவியல் இயக்க பொதுச் செயலாளர் அமலராஜன் உள்ள கல்வி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பில் உள்ள 30 அமைப்புகளின் மாநிலத்தலைவர், பொதுச் செயலாளர், முக்கிய நிர்வாகிகள். அனைத்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், நிதிகாப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில்தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலச் செயலாளர் சுந்தர் புதிய கல்விக் கொள்கை வேண்டும் என்பதில் கல்வி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினருக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை. இதற்காக அவர்கள் கடைப்பிடிக்க கூடிய நடைமுறைகள் ஏற்றுக்கொள்வதாக இல்லை. புதிய கல்விக்கொள்கை உருவாக்கத்திற்கான உள்ளீடுகுறித்த ஆவணத்தை அனைத்து மொழிகளிலும் வெளியிட வேண்டும். புதிய கல்விக் கொள்கை குறித்து தமிழக அரசு ஆசிரியர், மாணவர் அமைப்புகளைஅழைத்து கலந்து பேசி அதன் அடிப்படையில் தனது கருத்தை மத்திய அரசுக்கு சொல்ல வேண்டும். கருத்து கூற வழங்கப்பட்டுள்ள கால அவகாசத்தை மேலும் 3 மாதத்திற்கு நீட்டிப்பு செய்ய வேண்டும்.4ம் வகுப்பு வரையில் மட்டுமே தேர்ச்சி, 10ம் வகுப்பை இரண்டு பிரிவாக பிரிப்பது, அகில இந்திய அளவில் நுழைவுதேர்வுகள் நடத்துவது இதுபோன்ற பல விசயங்கள் மாணவர்களுக்கு எதிரானது. மத்திய அரசு அதிகாரிகளை கொண்ட குழுவை அமைத்துள்ளது அதனை கலைத்து விட்டு கல்வியாளர்களை கொண்ட குழுவை அமைக்க வேண்டும். அதில் சிறுபான்மை மற்றும் விளிம்பு நிலை மக்கள் பிரதிநிதிகளும் இடம் பெற வேண்டும். புதிய கல்விக் கொள்கை குறித்து அரசு பிரச்சாரம் செய்ய வேண்டும். புதிய கல்விக் கொள்கையில் உள்ள ஆசிரியர், மாணவர்கள் விரோதப்போக்கு இன்னும் ஆசிரியர்கள், மாணவர்களுக்கே தெரியவில்லை. செப்டம்பர் 10, 11 மற்றும் 24, 25 தேதிகளில் அனைத்து மாவட்டங்களிலும் கருத்தரங்கம் நடைபெற உள்ளது.ஒரு முன் மாதிரி மாற்றுக் கல்விக்கொள்கையை உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பில் தயாரித்து வரும் 30ம் தேதி 5ஆயிரம்ஆசிரியர்கள் பங்கேற்கக் கூடிய மாநிலஅளவில் நடைபெறும் கருத்தரங்கில் வெளியிடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. மாற்றுக் கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கான வரைவு குழுவின் தலைவராக முன்னாள் துணைவேந்தர் வே.வசந்திதேவி, செயலாளராக ஆயிஷா நடராஜன், உறுப்பினர்களாக பேராசிரியர் வெங்கடேஷ். ஆத்ரேயா, கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலன், விஞ்ஞானி ராமனுஜம், கல்வியாளர்கள் பிரின்ஸ் கஜேந்திரபாபு, பொன்ராஜ், உச்சிமாகாளி மற்றும் மாணவிதீபா ஆகியோர் செயல்பட உள்ளனர். மேலும் புதிய கல்விக் கொள்கையில் திருத்தம் செய்ய வலியுறுத்தி 10லட்சம் பேரிடம் கையெழுத்து இயக்கம் நடைபெற உள்ளது என்றார்.

பேட்டியின் போது கல்வி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் மாநில அமைப்பாளர் மணி, நிதிகாப்பாளர் மோசஸ், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில துணைத் தலைவர் கவனகன், திருச்சி மாவட்ட பொறுப்பாளர் இளங்கோ ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Reply

Top