You are here
Home > இயக்கச் செய்திகள் > ஏரியை பாதுகாக்கக் கோரி சைக்கிள் பேரணி

ஏரியை பாதுகாக்கக் கோரி சைக்கிள் பேரணி

கொண்டங்கி ஏரியைப் பாதுகாக்க வலியுறுத்தி கடலூரில் சைக்கிள் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கடலூரிலிருந்து சுமார் 4 கி.மீ, தொலைவில் 300 ஏக்கர் பரப்பில் கொண்டங்கி ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியின் கரையாக கேப்பர் மலை அமைந்துள்ளது. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை கடலூர் நகர மக்கள் மட்டுமின்றி புருகீஸ்பேட்டை, வெட்டுக்குளம், கரையேறவிட்ட குப்பம் உள்ளிட்ட கிராம மக்களின் குடிநீர்த் தேவை மற்றும் விவசாயப் பணிகளுக்கு இந்த ஏரி நீர் பயன்பட்டு வந்தது. ஆனால், நாளடைவில் ஏரியின் பயன்பாடு குறைந்ததால் பராமரிப்பு இல்லாமல் தூர்ந்தது. இதனால் கொண்டங்கி ஏரியைப் பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை சமூக ஆர்வலர்களிடம் எழுந்துள்ளது.

 இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த கடலூர் மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், பொதுநல இயக்கங்கள், அறிவியல் இயக்க குழந்தைகள் அமைப்பான துளிர் இல்ல உறுப்பினர்களோடு இணைந்து சைக்கிள் பேரணி கடலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

 மஞ்சக்குப்பம் மைதானத்தில் இப்பேரணியை கடற்கரை வாழ் மக்கள் வாழ்வுரிமை இயக்கச் செயலர் ரமேஷ்பாபு தொடங்கி வைத்தார். கொண்டங்கி ஏரியின் வரலாறு குறித்து அறிவியல் இயக்க மாவட்டச் செயலர் எஸ்.விக்டர்ஜெயசீலன் பேசினார். அனைத்து குடியிருப்போர் நலச் சங்கங்களின் பொதுச்செயலர் மு.மருதவாணன், குழந்தைகள் விஞ்ஞானி லட்சுமிநாராயணன் ஆகியோர் நீர்நிலைகளை பாதுகாப்பதின் அவசியம் குறித்து பேசினர்.

 பேரணி கொண்டங்கி ஏரியில் நிறைவு பெற்றது. அப்போது, ஏரியைச் சுற்றியுள்ள சூழ்நிலை மண்டலம் குறித்த தகவல்கள், ஏரிக்கு வரும் அரியவகைப் பறவைகள், தாவர வகைகள் குறித்து சுற்றுப்புறச் சூழ்நிலை நிபுணர் கோகுல் விளக்கமளித்தார்.

 நிகழ்ச்சியில் அறிவியல் இயக்க மாநிலச் செயலர் ஸ்டீபன்நாதன், கடலூர் கிளைத் தலைவர் உதயேந்திரன், ஐ லவ் இந்தியா அறக்கட்டளை நிறுவனர் ஜனார்த்தனன், கோமதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நன்றி: தினமணி நாளிதழ்

One thought on “ஏரியை பாதுகாக்கக் கோரி சைக்கிள் பேரணி

  1. இன்று (03-11-2016) மாவட்ட அளவில் பன்ருட்டி
    ஜான்டூவி மெட்ரிகுலேசன் பள்ளியில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடைபெற்றது.

Leave a Reply

Top