You are here
Home > கல்வி > அறிவொளி இயக்கத்தின் வெள்ளிவிழா மாநாடு

அறிவொளி இயக்கத்தின் வெள்ளிவிழா மாநாடு

1991-ல் தொடங்கப்பட்ட அறிவொளி இயக்கத்தின் தொடர்சியாக தொடர்கல்வி இயக்கம், வளர்கல்வி இயக்கம், ஆரோக்கிய இயக்கம், அனைவருக்கும் கல்வி இயக்கம், சிட்டுக்கள் மையம், துளிர் இல்லம் என மாவட்டத்தில் அதன் செயல்பாடுகள் இத்தகைய சாதனைகளைப் படைத்த அறிவொளி இயக்கத்தின் வெள்ளிவிழா ஆண்டு கடந்த வியாழக்கிழமையன்று புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நடைபெற்றது. விழாவிற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டத் தலைவர் அ.மணவாளன் தலைமை வகித்தார். இதில் அறிவொளி இயக்கம் குறித்து அமெரிக்க ஆய்வாளர் ஃப்ராங்க்(எ) பிரான்சிஸ்கோடி எழுதிய ‘லைட் ஆப் நாலெட்ஜ்’ என்ற ஆங்கில நூலை வெளியிட்டு தமிழக அரசின் முன்னாள் முதன்மைச் செயலாளர் மற்றும் முன்னாள் அறிவொளி இயக்கத் தலைவர் ஷீலாராணி பேச்சு:
தன்னார்வத் தொண்டர்களின் தன்னலம் கருதாத உழைப்பினாலேயே இது சாத்தியமானது. ஆட்சியர் என்ற முறையில் நான் ஒரு கருவியாக மட்டுமே இருந்தேன். இன்றைக்கு பாமரப் பெண்கள் இந்த மேடையில் இவ்வளவு தைரியமாக முழங்கியதை நினைத்து மிகவும் பெருமையாக இருக்கிறது. இதுமட்டும் போதாது. பெண்கள் மேலும் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். படிப்பையும் அறிவையும் பயனுள்ளதாக ஆக்கிக்கொள்ள வேண்டும். வேலை வாய்ப்புகளை நாமே உருவாக்கிக்கொள்ள வேண்டும். நமது பாரம்பரிய மருத்துவ முறை ஆங்கில மருத்துவத்தைவிட பல மடங்கு மேலானது. பாரம்பரிய மருத்துவ அறிவு கிராமங்களில்தான் கொட்டிக்கிடக்கிறது. 85 சதவித நோய்களை மருத்துவமனைக்குச் செல்லாமலேயே குணப்படுத்த முடியும். எனவே சித்தா, ஹேமியோபதி, யுனாணி மருத்துவமுறைகளை பலப்படுத்த வேண்டும். மீண்டும் ஒரு மக்கள் இயக்கம் இந்த மாவட்டத்தில் உருவாக வேண்டும் என்றார்.
விழாவில் சிறப்புரையாற்றிய அறிவொளி இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் வெ.பா.ஆத்ரேயா கல்வி முறையில் அரசுக்கும் நமக்கும் மிகுந்த வேறுபாடு உள்ளது. 1991 என்பது சோசலிச கருத்துக்கு பின்னடைவு ஏற்பட்ட காலம். தனியார் மயம் தாராளமயம் நாட்டுக்குள் நுழைந்த காலம். பாபர் மசூதி இடிக்கப்பட்ட நேரம். வலதுசாரிக் கருத்தாங்கள் வலுப்பட்ட காலம். அந்த நேரத்தில் மிகவும் சோர்வுற்று இருந்த நமக்குள் புத்தொளி பாய்ச்சியது அறிவொளி இயக்கம். நமது மாவட்ட ஆட்சியர் இலாராணிசங்கத்தின் ஏற்பாட்டால் மிகப்பெரிய மக்கள் இயக்கமாக வளர்ந்தது.
நமது கடமை இத்தோடு முடிந்துவிடவில்லை. இந்த வெள்ளி விழாவை மீண்டும் ஒரு தொடக்கமாக நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். தவறான கல்விக்கொள்கையால் நமது அரசுப் பள்ளிகள் காலாவதியாகிக் கொண்டு இருக்கிறது. இது மிகப்பெரிய ஆபத்தில் கொண்டு முடியும். ஒருசில மேட்டுக்குடிகள் மட்டும் உயர்கல்வி பெற்றால் போதும். மற்றவர்கள் அவரவர் தொழில் கல்வியைக் கற்கலாம் என்ற குலக்கல்வி முறையை திணிபதற்கான முயற்சிகள் நடக்கிறது.
எனவே உடனடியாக நாம் களத்தில் இறங்க வேண்டும். அரசுப் பள்ளிகளையும் அரசு உதவி பெறும் பள்ளிகளையும் காப்பாற்ற வேண்டும். இந்த பள்ளிகளை மாணவர்கள் சேர்ப்பு இயக்கத்தை நடத்த வேண்டும். அருகாமைப் பள்ளிதான் மாணவர்களின் நலனுக்கு உகந்தது என்பதை பெற்றோருக்கு உணர்த்த வேண்டும். சமச்சீரான கல்வி முறையை வளர்ப்பதற்கு இந்த நாளில் சபதமேற்போம் என்றார்.
விழாவில் அமெரிக்க ஆராய்ச்சியாளர் பிரான்சிஸ்கோடி அறிவியல் இயக்க மாநிலத் தலைவர் பேரா.மோகனா, பொதுச்செயலாளர் அ.அமலராஜன், வட்டாட்சியர் சி.ஸ்டாலின், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் சி.கோவிந்தசாமி, ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.முத்தையா உள்ளிட்டோர் பேசினர். நூலின் முதல் பிரதியை எஸ்.ஏ.கருப்பையா பெற்றுக்கொண்டார். அறிவொளித் தொண்டர்களும் கற்போர்களும் தங்கள் அனுபவங்களை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர். முன்னதாக எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.ராஜ்குமார் வரவேற்க அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் எம்.வீரமுத்து நன்றி கூறினார்.

Leave a Reply

Top