You are here
Home > அறிவியல் கல்வி > “துளிர்- ஜந்தர் மந்தர் அறிவியல் விநாடி-வினா போட்டியில் மாணவர்கள் பங்கேற்கலாம்

“துளிர்- ஜந்தர் மந்தர் அறிவியல் விநாடி-வினா போட்டியில் மாணவர்கள் பங்கேற்கலாம்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தும் வகையில் துளிர்- ஜந்தர் மந்தர் அறிவியல் விநாடி-வினா போட்டிகளில் பங்கேற்க மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, அறிவியல் இயக்கத்தின் திருநெல்வேலி மாவட்டச் செயலர் எம். சுரேஷ்குமார் கூறியது:

பள்ளி மாணவர்களிடையே பொதுஅறிவுத் திறனை மேம்படுத்தும் வகையில் துளிர் -ஜந்தர் மந்தர் அறிவியல் விநாடி-வினா போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன. நிகழாண்டுக்கான மாவட்ட அளவிலான போட்டிகள் தென்காசி அருகேயுள்ள செந்திலாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் வரும் 20ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. ஆரம்பநிலை (4, 5ஆம் வகுப்பு),  இடைநிலை (6, 7, 8), உயர்நிலை (9, 10), மேல்நிலை (11, 12ஆம் வகுப்பு) என 4 பிரிவுகளாக போட்டிகள் நடைபெறும். 5, 9, 11ஆம் வகுப்புகளில் வகுப்புக்கு இருவரும், இதர வகுப்புகளில் தலா ஒருவரும் சேர்த்துக் கொள்ளப்படுவர்.

போட்டிகள் அனைத்தும் தமிழ், ஆங்கில வழிகளுக்கு தனித்தனியே நடைபெறும். முதலில் எழுத்துத் தேர்வு நடைபெறும். இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம், செய்முறை, காரண காரியம், துளிர்- ஜந்தர் மந்தர் அறிவியல் இதழ்களிலிருந்தும் கேள்விகள் கேட்கப்படும். நேரடி பதிலுக்கு 10 மதிப்பெண்களும், கடந்து வரும் கேள்விகளுக்கு 5 மதிப்பெண்களும் வழங்கப்படும்.

ஒரு பள்ளியிலிருந்து ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு அணி மட்டுமே கலந்துகொள்ள வேண்டும். பங்குபெறும் அனைவருக்கும் பாராட்டுச் சான்றும், வெற்றி பெறுவோருக்கு பரிசுகளும் வழங்கப்படும். மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெறுவோர் வரும் 27ஆம் தேதி நடைபெறும் தென்மண்டல அளவிலான போட்டிகளில் பங்கேற்கலாம்.

மாநில அளவிலான போட்டி அடுத்தமாதம் 3ஆம் தேதி கோவையில் நடைபெறும். மேலும், விவரங்களுக்கு திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தோர் சுரேஷ்-97891-50763, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தோர் முத்துசாமி-99943-68567 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Leave a Reply

Top