You are here
Home > இயக்கச் செய்திகள் > திருநந்திக்கரையில் கிராம வளர்ச்சி மையம் திறப்பு

திருநந்திக்கரையில் கிராம வளர்ச்சி மையம் திறப்பு

குலசேகரம் அருகே திருநந்திக்கரையில் கிராம வளர்ச்சி மையம் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.

திருந்திக்கரை கிராம வளர்ச்சிக்கான மக்கள் இயக்கம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் மலர் சுயஉதவிக் குழு இணைந்து திருநந்திக்கரையில் மாணவர் மற்றும் இளைஞர்கள் மத்தியில் திறன் மேம்பாடு மற்றும் இயற்கை விவசாயம், சுகாதார விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்யும் வகையில் கிராம வளர்ச்சி மையம் அமைத்துள்ளது.

இம்மையத் திறப்பு விழாவுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க கிளைத் தலைவர் பி.டி. திவாகரன் பிள்ளை தலைமை வகித்தார். கிராம வளர்ச்சிக்கான மக்கள் இயக்க உறுப்பினர்கள் நாணுகுட்டன், கார்த்திகேயன், கே. உஷா, ஆர். சுந்தரேஷன், ஷீலா கார்த்திகேயன், நிஷாந்த் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஷீஜா சந்திரன் வரவேற்றார்.

திற்பரப்பு பேரூராட்சி 6ஆவது வார்டு உறுப்பினர் எம். சசிகுமார் அறிமுக உரையாற்றினார். மையத்தில் தொழிலதிபர்கள் கே. சுகுமாரன் நாயர், சி. பாலசந்திரன் நாயர், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட கெளரவத் தலைவர் ஆர். செலின் மேரி ஆகியோர் குத்துவிளக்கேற்றினர். கேரள சாஸ்தர சாகித்ய பரிஷத் கே.கே. கிருஷ்ணகுமார் மையத்தை திறந்து வைத்தார்.

இதில், முன்னாள் மக்களவை உறுப்பினர் ஏ.வி. பெல்லார்மின், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் ஜே.ஆர். பத்மதேவன், செயலர் பி.ஆர். கணேசன், மலர் இயக்க மாவட்டச் செயலர் ஜான்சிலி பாய், எழுத்தாளர் பொன்மனை வல்சகுமார், மாவட்ட திட்டக் குழு உறுப்பினர் எஸ்.சி. ஸ்டாலின் தாஸ், சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி துணை மருத்துவக் கண்காணிப்பாளர் என்.வி. சுகதன் உள்ளிட்டோர் உரையாற்றினர். பி. கிருஷ்ணன் நாயர் நன்றி கூறினார்.

நன்றி: தினமணி நாளிதழ்

Leave a Reply

Top