You are here
Home > கல்வி > புதிய கல்விக் கொள்கை சவால்களை விளக்கும் மாநிலக் கருத்தரங்கம்

புதிய கல்விக் கொள்கை சவால்களை விளக்கும் மாநிலக் கருத்தரங்கம்

கல்வி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பில் புதிய கல்விக் கொள்கை 2016 சாவல்களை விளக்கி மாநில அளவிலான கருத்தரங்கம் சனிக்கிழமையன்று (ஜூலை 30) சென்னை லயோலோ கல்லூரி யில் நடைபெற்றது. கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மணி தலைமை தாங்கினார். நிதிக் காப்பாளர் ச.மோசஸ் வரவேற்றார். லயோலா கல்லூரியின் முதல்வர் ஆரோக்கிய சாமி சேவியர் துவக்கி வைத்தார்.
கல்வியில் வகுப்புவாத சாவல்கள் என்ற தலைப்பில் பேரா.அருணன் பேசுகையில்,“ கல்விப் பரவலைத் தடுப்பது, ஆன்மிக கல்வி முறை கொண்டு வருவது, அவர்களுக்கு ஏற்றவாறு கல்வி முறையை மாற்றிக் கொள்ளுவது உள்ளிட்ட பெரும் ஆபத்துகள் புதியக் கல்விக் கொள்கையில் உள்ளது. மேலும், அருகாமைப் பள்ளி என்ற முறை கைவிடப்படும். கலாச்சார ஒருமைப்பாடு என்ற போர்வையில் பிற மொழிகளைத் திணிக்க முயல்கின்றனர்” என்றார்.
பள்ளிக் கல்வி சந்திக்கும் சவால்கள் என்ற தலைப்பில் பேரா.ஆர்.இராமானுஜம் பேசுகையில்,“ உலகமயக் கொள்கை கடந்த 25 ஆண்டுகாலமாக பொதுக் கல்வி முறையை அழித்து விட்டது. மத்திய அரசின் புதியக் கல்விக் கொள்கை மாணவர்களையும் ஆசிரியர்களையும் குற்றவாளிகளாக மாற்றுவது கண்டிக்கதக்கது” என்றார்.
உயர்கல்வி சந்திக்கும் சவால்கள் என்ற தலைப்பில் பேரா. ஜேம்ஸ் வில்லியம்ஸ் பேசியபோது,“ 12 ஆம் வகுப்பு முடித்து வரும் மாணவர்களுக்கு பொதுத் நுழைவுத் தேர்வு வைத்து, அந்த மதிப் பெண்களின் அடிப்படையில் அவர்களுக்கு உயர்கல்வி வழங்குவது மக்களின்  கல்விக் கொள்கை அல்ல, ஆர்எஸ்எஸ் அமைப்பின் கல்விக் கொள்கை” என்றார்.
ஏசு சபையின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை ஸ்டீபன், அருட்தந்தை ஐhன்.கென்னடி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மாரியப்பன் நன்றி கூறினார்.  கல்வி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பில் சுமார் 25 அமைப்புகளைக் சேர்ந்த நிர்வாகிகள்,மாணவர்கள், பெற்றோர், பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பேரா.மணி எழுதிய  புதிய கல்விக் கொள்கை: ஆசிரியரும் மாணவரும் குற்றவாளிக்கூண்டிலா என்ற புத்தகமும், விழுது என்ற கருத்தரங்க சிறப்பிதழும் வெளியிடப்பட்டன. பேரா.இராமானுஜம் அவர்களின் புதிய கல்விக் கொள்கை: மெஹருன்னிசாவை இராக்கெட் ஏற்ற வேண்டுமே? என்ற நூலும் பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் கல்விக்கொள்கைக்கான சில உள்ளீடுகளின் தமிழாக்க நூலும் வெளியிடப்பட்டது..
இக் கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங் கள் பின்வருமாறு:
தீர்மானம் 1: இந்திய அரசியல் சாசனப்படி கல்வி பொது அதிகாரப்பட்டியலில் இருந்தபோதும் தற்போதைய மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை உருவாக்கப் பரிந்துரைகள் 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலும் உள்ள பள்ளிக்கல்வியில் கற்றல் கற்பித்தல், பாடத்திட்டம் உருவாக்கம் ஆகிய நடைமுறைகளை முற்றிலும் மத்தியத்துவப் படுத்தும் முயற்சி நடைபெறுகிறது. இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. எனவே இத்தகைய போக்கை மத்திய அரசு கைவிட வேண்டும் என கல்வி உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பின் இம்மாநில கருத்தரங்கம் மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறது..
தீர்மானம் 2: புதிய கல்விக் கொள்கை 2016 உருவாக்கம் முற்றிலும் வெளிப்படைத் தன்மையோடும் கீழிருந்து மேல், அனைவரையும் உள்ளடக்கி, கருத்துக் கேட்பு நடத்தப்படும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அறிவித்தது. ஆனால் அதற்கு நேர்மாறாக முற்றிலும் வெளிப்படைத் தன்மையற்றும் ஜனநாயகத்திற்கு புறம்பாகவும் கருத்துக் கேட்பு நடத்தப்பட்டுள்ளது. அதன் பின்னர் டி.எஸ்.ஆர். சுப்ரமணியம் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு அரசிற்கு தனது அறிக்கையை சமர்ப்பித்து இருந்தபோதும் அரசு அதனை ஏற்றுக் கொண்டதாகவோ வெளியிட்டதாகவோ கூறாத நிலையில் அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாக நம்பப்படும் வரைவுக் கொள்கை உருவாக்கத்திற்கான சில உள்ளீடுகள் என்ற தலைப்பில் ஒரு ஆவணம் இணையதளத்தில் மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ளது. கருத்துக் கேட்பு நடைமுறையும் வரைவுக் குழு நடைமுறையும் முன்னுக்குப் பின் முரணானதாகவும் ஜனநாயக மாண்புகளுக்கு விரோதமாகவும் உள்ளது. அறிக்கை பெரும்பான்மை பரிந்துரைகள் ஏற்கத்தக்கவாறும் இல்லை. இக்குழுவின் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகளே.. எனவே அனைத்து மாநிலங்களையும் பட்டியலின் மக்கள், பழங்குடி மக்கள், சிறுபான்மையின மக்கள் ஆகியோரை உள்ளடக்கிய கல்வியாளர்களைக் கொண்ட குழு அமைத்து கல்விக்கொள்கை வரைவு அறிக்கையை தயாரிக்க வேண்டும் என மத்திய அரசை இக்கூட்டமைப்பின் கருத்தரங்கு கோருகிறது..
தீர்மானம் 3: மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை புதிய கல்விக் கொள்கைக்கான ஆவணத்தின் மீது கருத்துக் கூற மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கை விட்டுள்ளதாக நாளிதழ்கள் வாயிலாக அறியமுடிகிறது. இது வரையிலான புதிய கல்விக் கொள்கை உருவாக்க முயற்சியில் அரசியல் சாசன நடைமுறைகள் பற்றியும் அந்த ஆவணம் மக்கள் மீது ஏற்படுத்தும் தாக்கங்கள் பற்றியும் கருத்துக் கூறாமல் தமிழக அரசு மௌனம் சாதித்து வருகிறது. தமிழக அரசு இதன் மீது ஏற்கனவே கருத்து தெரிவித்து இருந்தால் அதனை தமிழக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். கருத்து கூறாமல் இருந்தால் தமிழ்நாட்டு கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்களிடம் கலந்தாலோசித்து அதனடிப்படையில் அரசு தனது கருத்தை தெரிவிக்க வேண்டும் என தமிழக அரசை இக்கூட்டமைப்பின் கருத்தரங்கம் வலியுறுத்துகிறது..
தீர்மானம் 4: தேசிய அளவிலும் மாநில அளவிலும் மிகவும் முக்கியத்துவம் பெற்ற கல்விக் கொள்கை உருவாக்க ஆவணம் பற்றியும் அதன் தாக்கங்கள் பற்றியும் தமிழக அரசு நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.. விவாதத்தின் இறுதியில் அரசு தனது நிலையை தெளிவுபடுத்த வேண்டும் என்று கல்வி உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்புக் கருத்தரங்கம் கேட்டுக் கொள்கிறது…
தீர்மானம் 5: பல்வேறு மத நம்பிக்கைகளைக் கொண்ட, மதச் சார்பற்ற இந்தியக் குடியரசின் மத்திய மனித வளமேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்கள் மீண்டும் குருகுலக் கல்வியை உருவாக்க வேண்டும்.. சமஸ்கிருதத்தை பாடமொழியாக கொண்டுவர வேண்டும் என ஆலோசனைகளை வழங்கும் ஆர்.எஸ்.எஸ்.ன் துணை அமைப்புகள் நடத்திய கூட்டத்திற்கு சென்றிருப்பதும் அவர்களோடு 3 மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதையும் கல்வி உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கிறது..
தீர்மானம் 6: மத்திய அரசு புதிய கல்விக் கொள்கை உருவாக்கத்திற்காக கருத்துக் கேட்க வெளியிட்டிருக்கும் ஆவணம் பெரும்பான்மை இந்திய மக்களுக்குப் புரியாத மொழியில் உள்ளது.. எனவே இந்த ஆவணம் அனைத்து இந்திய மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டு இணையதளத்தில் வெளியிடப்பட வேண்டும்.. அவ்வாறு வெளியிட்ட தேதியிலிருந்து பொதுமக்கள் கருத்துக் கூறுவதற்காக குறைந்தபட்சம் 3 மாத கால அவகாசம் அளிக்கப்பட வேண்டும்.. இதனைத் தவிர்த்து வெறும் 15 நாட்கள் கால அவகாச நீட்டிப்பு என்பது வெறும் கண் துடைப்பாகும்.. இத்தகைய நடைமுறைகளை கல்வி உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கிறது..

Leave a Reply

Top