You are here
Home > NCSC > “மாணவர்களின் திறனை ஆசிரியர்கள் கண்டறிய வேண்டும்’

“மாணவர்களின் திறனை ஆசிரியர்கள் கண்டறிய வேண்டும்’

மாணவர்களின் திறனைக் கண்டறிய ஆசிரியர்கள் புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என, முதன்மை கல்வி அலுவலர் இரா. சுவாமிநாதன் கேட்டுக் கொண்டார்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், மாணவர்களை அறிவியல் துறையில் சிறந்து விளங்கச் செய்யும் வகையில் அறிவியல் ஆசிரியர்களுக்கான வழிகாட்டி பயிற்சி முகாம் 3 தினங்கள் நடைபெறுகிறது.

திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் செவ்வாய்க்கிழமை இப் பயிற்சியை தொடங்கிவைத்து முதன்மை கல்வி அலுவலர் இரா. சுவாமிநாதன் பேசியது: மாணவர்கள் அறிவியல் பாடத்தை ஆர்வத்துடன் கற்கும் வகையில் கல்வித் துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

இதற்காக ஆசிரியர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. முதல் வகுப்பிலிருந்து 8ஆம் வகுப்பு வரையுள்ள அறிவியல் ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

மாவட்ட அறிவியல் மையமாது கிராமப்புறங்களில் ஆய்வகம் வசதியில்லாத பள்ளிகளைகண்டறிந்து ஆசிரியர்கள், மாணவர்களை ஊக்குவித்து வருகிறது. இயற்கையைப் பாதுகாக்க வேண்டும். இயற்கையோடு இணைந்த படைப்புகளை கண்டறியும் வகையில் மாணவர்களை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும்.

மாணவர்களின் திறன், ஆற்றலை கண்டறிந்து மேம்படுத்த ஆசிரியர்கள் புதிய முயற்சியை  மேற்கொள்ள வேண்டும். கேள்வி எழுவதால்தான் புதிய சிந்தனை பிறக்கிறது. புதிய படைப்புகளுக்கு வித்திட முடியும். அந்த வகையில் சமுதாயத்துக்கு உகந்த இயற்கையோடு இணைந்த படைப்புகளை உருவாக்க வேண்டும் என்றார் அவர்.

இம்முகாமிற்கு மாவட்ட அறிவியல் மைய அலுவலர் கே. நவராம்குமார் தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.கணபதி முன்னிலை வகித்தார்.

பொதுத்தேர்வில் இம்மாவட்டத்தில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் தலைமையாசிரியர், ஆசிரியர்களுக்கு சான்று வழங்கப்பட்டது. டீம் அறக்கட்டளை இயக்குநர் பி. திருமலைமுருகன், கல்வியாளர்கள் டி. ரமேஷ், எம்.எஸ். மதியழகன், அறிவியல் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஏழு அமர்வுகளாக நடைபெற்ற இம்முகாமில் அறிவியல் மைய கல்வி ஒருங்கிணைப்பாளர் டி. மாரிலெனின், தூய சவேரியார் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் பி. பீட்டர் பாஸ்கரன், சுற்றுச்சூழல் விஞ்ஞானி ஜி. விஜயலட்சுமி, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயலர் எம். தியாகராஜன், மதுரா கல்லூரி பேராசிரியர் எஸ். தினகரன், அறிவியல் இயக்க மாநிலத் தலைவர் எஸ். மோகனா, சொக்கலிங்கம் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

அறிவியல் இயக்கச் செயலர் எம். சுரேஷ்குமார் வரவேற்றார். அறிவியல் மைய கல்வி உதவியாளர் பொன்னரசன் நன்றி கூறினார். புதன்கிழமை (ஜூலை 27) சேரன்மகாதேவி கல்வி மாவட்டத்தில் உள்ள அறிவியல் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. வியாழக்கிழமை தென்காசி கல்வி மாவட்ட அறிவியல் ஆசிரியர்களுக்கு அங்குள்ள நல்லமணி யாதவா கல்லூரியில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

நன்றி: தினமணி நாளிதழ்

Leave a Reply

Top