You are here
Home > இயக்கச் செய்திகள் > புதிய கல்விக் கொள்கை சம்பந்தமாக சட்டமன்றத்தில் விவாதிக்க வேண்டும் கல்வி உரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு வலியுறுத்தல்

புதிய கல்விக் கொள்கை சம்பந்தமாக சட்டமன்றத்தில் விவாதிக்க வேண்டும் கல்வி உரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு வலியுறுத்தல்

சென்னை ஜூலை 26 & தமிழக சட்டமன்றம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்நிலையில் புதிய கல்விக்கொள்கை குறித்து விவாதித்து, தமிழக உரிமைகளை பாதுகாக்க தக்க வகையில் முடிவுகளை எடுக்க வேண்டும் என கல்வி உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து கல்வி உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மணி கூறியதாவது, மத்திய அரசு கடந்த ஒன்றரை வருடமாக புதிய கல்விக்கொள்கை குறித்து கருத்துக் கேட்டதாக மோசடியான தகவலை கூறுகிறது. ஆனால் எங்கு கருத்துக் கேட்டனர் என்பது தெரியவில்லை. டி.ஆர்.எஸ்.சுப்பிரமணியன் தலைமையில் அமைக்கப்பட்ட கல்விக்குழு பரிந்துரைகளை பல்வேறு பாதகமான அம்சங்கள் உள்ளன. 14 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு கல்வி கேள்விக்குறியாகும் நிலைமை உள்ளது. திறன் மேம்பாடு என கூறி கல்வியையை கற்காமல் செய்யும் நிலையில் உள்ளது.

பொதுப்பட்டியலில் உள்ள கல்வியை மாநில அரசை கலந்து ஆலோசிக்காமல் மேற்கொண்டுள்ளது. பள்ளியில் உள்ள சிக்கல்களை வெறும் நிர்வாக சிக்கல்களாக கருதி அதற்கு தகவல் தொழில்நுட்ப மேலாண்மையை மட்டும் நம்பி ஆசிரியர் மற்றும் மாணவர்களை குற்றவாளி கூண்டில் நிறுத்துவது போல் உள்ளது. உயர்கல்வியை முற்றிலும் தனியார் மயம் ஆக்கப்படும் போன்ற பரிந்துரைகளை அளிக்கப்பட்டுள்ளன.

எனவே புதிய கல்விக் கொள்கையை உள்ள குறைகளை களைய வேண்டும் என்பதற்காக 20 சங்கங்கள் ஒன்றினைந்து கல்வி உரிமைப்பாதுகாப்பு கூட்டமைப்பு உருவாக்கி உள்ளோம்.

மத்திய அரசு மனிதவள மேம்பாட்டுத்துறை புதிய கல்விக்கொள்கை குறித்து தற்பொழுது இணையதளத்தில் வெளியிட்டுள்ள 44 பக்க அறிக்கையை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் வெளியிட வேண்டும். அந்த அறிக்கை மீது கருத்து தெரிவிக்க 3 மாதம்  கால அவகாசம் வழங்க வேண்டும். கருத்துகளை அவர்களின் தாய் மொழியில் வழங்குவதற்கு வழிவகை செய்ய வேண்டும். தற்பொழுது உருவாக்கப்பட்டுள்ள கல்விக் கொள்கை இந்திய கூட்டாச்சி தத்துவத்திற்கு எதிரானது. ஒய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. எனவே புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையை உருவாக்க அனைத்து மாநிலங்களையும் பட்டியலினத்தவர், பழங்குடியினர், சிறுபான்மையினர் உள்ளிட்ட விளிம்பு நிலையில் உள்ள மக்களின் கருத்துக்களை பிரதிபலிக்க கூடியதாக உருவாக்க வேண்டும்.

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறையின் ஆவணம் மாநில அரசுகளுக்கு கருத்துக் கேட்பதற்காக அனுப்பட்டுள்ளதாக தெரிகிறது. தமிழக அரசு அதன்மீது கருத்து தெரிவித்திருந்தால் அதனை தமிழக மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். கருத்து தெரிவிக்காவிட்டால் தமிழக கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர் சங்கங்கள் ஆகியவற்றை கலந்தாலோசித்து அதன் பிறகு மாநில அரசு கருத்துகளை தெரிவிக்க வேண்டும். தமிழக சட்டமன்றம் நடைபெறும் இந்த சூழ்நிலையில் புதிய கல்விக் கொள்கை உருவாக்கத்தின் மீதான இந்த பிரச்சனைக்கு முக்கிய விவாதப் பொருளாக எடுத்துக் கொண்டு விவாத்தித்து தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்றவகையில் மாநில உரிமைகளை பாதுகாக்கதக்க வகையில் முடிவுகளை எடுக்க வேண்டும்.

புதிய கல்விக் கொள்கையில் உள்ள விவரங்கள் குறித்து அரசியில் கட்சிகளின் ஆதரவை பெறும் வகையில் அனைத்து அரசியல் கட்சியின் தலைவர்களையும் இன்று முதல் சந்தித்து மனு அளித்து, ஆதரவினை கோருவதற்கு உள்ளோம்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 30ம் தேதி சென்னையில் கருத்தரங்கம் நடத்தப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து மாநிலங்கள் முழுவதும் புதிய கல்விக் கொள்கையின் பாதகங்கள் குறித்து பிரச்சாரம் நடத்தப்பட உள்ளன. மத்திய அரசு இதற்கும் செவி சாய்க்காவிட்டால் ஆகஸ்ட் முதல்வாரம் துவங்கி மாநிலம் முழுவதும் 6 மண்டலங்களாக பிரித்து வேன் பிரச்சாரம் செய்வதுடன், செப்டம் 5 ம் தேதி ஆசிரியர் தினத்தன்று திருச்சியில்  ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் மாநாட்டை நடத்தவும் திட்டமிட்டுள்ளோம் என கூறினர்.

அதனைத் தொடர்ந்து பேசிய மோசஸ், புதிய கல்விக் கொள்கை வந்தால் அரசு ஆரம்ப பள்ளிகள் மிகப்பெரும் பாதிப்பை அடையும்.  அரசு பணம் இருப்பவர்களுக்கு மட்டுமே படிக்கலாம் என்பது போல் கூறியுள்ளது. கடந்த ஆண்டே அரசு எடுத்த கணக்கின் படி 1200  ஆரம்ப பள்ளிகளை மூடுவதற்கு கணக்கெடுக்கப்பட்டது. ஆனால் தற்பொழுதும் மூடாமல் இருக்கிறது. இந்த ஆண்டும் மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பள்ளிகளை கணக்கெடுத்து உள்ளது. அதன் அடிப்படையில் மூடப்படுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆசிரியர்களுக்கு 5 ஆண்டிற்கு ஒருமுறை தகுதித் தேர்வு வைப்பது, பள்ளி மேலாண்மை குழு, கிராமக் கல்விக்குழுவின் மூலம் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது அவர்களுக்கு பிடிக்காத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு வாய்ப்பாக அமையும். எனவே தமிழக அரசு ஆசிரியர்களின் கருத்துகளையும் கேட்டறிந்து தெரிவிக்க வேண்டும் என்றார்.

இந்த பேட்டியின் போது, மூட்டா சார்பில் விவேகானந்தன்,தமிழ்நாடு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் கே.ஓ.பி.சுரேஷ், தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாயவன், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாநில செயலாளர் பேட்ரிக் ரேய்மாண்ட்,பல்கலைக் கழக ஆசிரியர்கள் சங்கம், தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி தாஸ்,  பொதுப்பள்ளிகான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டனர்.

நன்றி: தின இதழ்

Leave a Reply

Top