You are here
Home > இயக்கச் செய்திகள் > புதிய கல்விக் கொள்கையின் அபாயங்கள்: தமிழகம் முழுவதும் பிரச்சார இயக்கம்

புதிய கல்விக் கொள்கையின் அபாயங்கள்: தமிழகம் முழுவதும் பிரச்சார இயக்கம்

சென்னை, ஜூலை 25-

புதிய கல்விக் கொள்கையில் உள்ள அபாயங்களை மக்களிடம் கொண்டு செல்வ தற்காக தமிழகம் முழுவதும் பிரச்சார இயக்கம் நடத்த போவதாக கல்வி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு அறிவித்துள்ளது.மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ள புதிய கல்விக் கொள்கையில் பல்வேறு அபா யங்கள் உள்ளன. இதை எதிர்த்து போராட தமிழ்நாட்டில் உள்ள ஆசிரியர்கள், மாணவர், கல்விச் செயல்பாட்டாளர்கள் ஆகியோர் ஒன்றி ணைந்து கல்வி உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு என்ற அமைப்பு திங்கட்கிழமையன்று (ஜூலை 25) உருவாக்கப்பட்டது.கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளராக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தைச் சேர்ந்த பேராசிரியர் நா.மணி, நிதிக் காப்பாளராக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ச.மோசஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் நா.மணி, மத்திய அரசு உருவாக்கியுள்ள `புதிய கல்விக் கொள்கை உருவாக்கத்திற்கான சில உள்ளீடுகள்’ என்ற ஆவணத்தை தமிழ் உள்ளிட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் வெளியிட வேண்டும். அதன் மீது கருத்துக் கூறுவதற்காக மூன்று மாத கால அவகாசம் தரப்பட வேண்டும். புதிய கல்விக்கொள்கையின் வரைவு அறிக்கையை தயாரிக்க அனைத்து மாநிலங்களையும் பட்டியலினத்தவர், பழங்குடியினர், சிறுபான்மையினர் உள்ளிட்ட விளிம்புநிலை மக்களின் கருத்துகளையும் பிரதிபலிக்கக் கூடியதாக புதிய வரைவுக் குழு உருவாக்கப்பட வேண்டும். தமிழக அரசு புதியக்கல்விக் கொள்கை மீது கருத்து தெரிவித்திருந்தால் அதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் அனைத்து தரப்பினர் கருத்தையும் கேட்ட பின்பே கருத்தை தெரிவிக்க வேண்டும் என்றார்.தமிழக சட்டப்பேரவையில் கல்விக் கொள்கை பற்றி விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 30 அன்று சென்னை லயோலா கல்லூரிக் கலையரங்கில் கூட்டமைப்பு சார்பில் ஆயிரம் பேர் பங்குபெறும் மாபெரும் கருத்தரங்கு நடைபெற உள்ளது. புதிய கல்விக் கொள்கை உருவாக்கத்தின் அபாயங்களை விளக்கும் வகையில் இரண்டு ஆவணங்கள் கருத்தரங்கில் வெளியிடப்பட உள்ளன என்றும் அவர் கூறினார்.மத்திய அரசு இப்பிரச்சனையில் நடவடிக்கை எடுக்காவிடில் இதன் பாதக விளைவுகளை அனைத்து தரப்பினரிடமும் எடுத்துச் செல்வது, ஆகஸ்ட் முதல் வாரம் தொடங்கி மாநிலம் முழுவதும் ஆறு மண்டலங்களாகப் பிரித்து வேன் பிரச்சார இயக்கம் மேற்கொள்வது. பிரச்சார இயக்கத்தின் நிறைவாக திருச்சியில் செப். 5ஆம் தேதி ஆசிரியர் தினத்தன்று குறைந்தபட்சம் 3000 பேர் பங்குபெறும் மாநாடு நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் சந்தித்து புதிய கல்விக் கொள்கை தொடர்பான பாதகமான அம்சங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வலியுறுத்துவது எனவும் முடிவாக்கப்பட்டுள்ளது. இப்போதைக்கு இந்த கூட்டமைப்பில் 20 அமைப்புகள் சேர்ந்துள்ளன. மேலும் பல அமைப்புகள் சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார் அவர்.மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் விவேகானந்தன், தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் சங்கத்தின் சார்பில் ராமலிங்கம், தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி தலைமையாசிரியர் சங்கத்தின் சார்பில் பூபாலன், தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் சார்பில் மாயவன் மற்றும் பக்தவச்சலம், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் பேட்ரிக் ரைமண்ட், பொது பள்ளிக்கான மாநில மேடை சார்பில் பிரின்ஸ் கஜேந்திர பாபு, தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் சாஸ், இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் மாரியப்பன், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் சுந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நன்றி: தீக்கதிர் நாளிதழ்

Leave a Reply

Top