You are here
Home > இயக்கச் செய்திகள் > குழந்தைகள் அறிவியல் மாநாடுவழிகாட்டி ஆசிரியர்களுக்கு இன்று பயிற்சி முகாம் துவக்கம்

குழந்தைகள் அறிவியல் மாநாடுவழிகாட்டி ஆசிரியர்களுக்கு இன்று பயிற்சி முகாம் துவக்கம்

தேசியக் குழந்தைகள் அறிவியல் மாநாட்டை முன்னிட்டு வழிகாட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் உடுமலையில் வியாழக்கிழமையும் (ஜூலை 14), திருப்பூரில் வெள்ளிக்கிழமையும் நடைபெற உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வெளியிட்டுள்ள செய்தி:

இந்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையும், தேசிய அறிவியல் தொழில்நுட்ப குழுமமும் இணைந்து 1993-ஆம் ஆண்டில் இருந்து தேசியக் குழந்தைகள் அறிவியல் மாநாட்டை நடத்தி வருகிறது.

அதற்காக, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மூலமாக ஒருங்கிணைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு குழந்தைகள் அறிவியல் மாநாடு டிசம்பர் 27-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில், 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை மற்றும் 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை என இரண்டு நிலைகளில் மாணவ, மாணவியர் பங்கேற்கலாம்.

இந்த ஆண்டின் ஆய்வுக்கான மையக் கருப்பொருளாக, தொடர்ந்து குன்றாத வளர்ச்சிக்கு அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புதுப்புனைவுகள் எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் வழிகாட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமையும் (ஜூலை 14), திருப்பூர், கே.எஸ்.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமையும் நடைபெற உள்ளது.

இதில், அரசுப் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த ஆர்வமுள்ள ஆசிரியர்கள் (பள்ளிக்கு ஒருவர்) கலந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: தினமணி நாளிதழ்

Leave a Reply

Top