You are here
Home > Article > தண்ணீர் பஞ்சத்தை விரட்டியடித்த கிராமங்கள்

தண்ணீர் பஞ்சத்தை விரட்டியடித்த கிராமங்கள்

தண்ணீர்  லாரிகளில் தண்ணீர் பிடிக்க குடங்களுடன் நீண்ட வரிசைகளில் மக்கள் நிற்பது நமக்குப் பழகிப் போன காட்சிதான். ராஜஸ்தானும் இதற்கு விதிவிலக்கல்ல. டைம்ஸ் ஆப் இந்தியா தனது 2016 மே 1 நாளிதழில் தண்ணீர் பஞ்சத்தை மக்கள் சமாளித்த விதம் பற்றி மூன்று கட்டுரைகளை  வெளியிட்டிருக்கிறது. மூன்றையுமே ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

ஜெய்ப்பூரிலிருந்து 30 கி.மீ. தூரத்தில் உள்ள  லபோரியா என்ற கிராமத்தில் நீங்கள் தண்ணீருக்காக அலையும் மக்களைப் பார்க்க முடியாது. அங்குள்ள 350 குடும்பங்களின் கூட்டு முயற்சியால் நீரைச் சேமித்து வைத்து பஞ்சத்தை அவர்கள் வெற்றிகரமாகச் சமாளித்து வரும் அதிசயம் கடந்த 30 ஆண்டுகளாக  நடந்து வருகிறது. அருகில் உள்ள இடங்களில் நீர் 500 அடி ஆழத்திற்குக் கீழ் சென்றுவிட்ட நிலையில் இந்த கிராமத்தில் மட்டும் 15-லிருந்து 40 அடி ஆழத்திற்குள் கிடைக்கிறது எனில் அது எப்படி சாத்தியமானது என்பதை நாம் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும். சுமார் 2000 மக்கள் தொகை கொண்ட லபோரியா கிராமம் தனக்கு வேண்டிய தண்ணீரைப் பெற்றிருப்பது மட்டுமல்ல, சுற்றியுள்ள 10-15 கிராமங்களுக்குத் தண்ணீர் தானமும் செய்துவருகிறது.

பற்றாக்குறையிலிருந்து தன்னிறைவுக்கான அதன் பயணம் 1977ஆம் ஆண்டு தொடங்கியது. அந்த கிராமத்தைவிட்டு வெளியேறி வேறிடத்தில் வசித்து வந்த லட்சுமண் சிங் அந்த ஆண்டில் சொந்த கிராமத்திற்குத் திரும்பினார். அவர் பள்ளிப் படிப்பிலிருந்து இடைநின்றவர். கிராமத்தில் வறுமையும், ஊட்டச்சத்துப் பற்றாக்குறையும், சாதி மோதல்களுமே அவரை வரவேற்றன. நொந்து போனார்.  கிராமத்தில் விவசாயத்தை செழிக்கச் செய்வதுதான் இந்த அவலங்களுக்கான தீர்வு என்பது அவருக்கு உடனே புரிந்தது. ஆனால் தண்ணீர் கிடைப்பது மிகப் பெரிய பிரச்சனையாக இருந்தது. நிலப்பரப்பிலிருந்து 100 அடிக்குக் கீழேதான் நீர் இருந்தது. தண்ணீரை அந்த ஆழத்திலிருந்து இறைப்பதற்கு அப்போது எந்த வழியும் இருக்கவில்லை. தண்ணீரைப் பெற நாம் கீழே போக இயலாது எனில், தண்ணீரை மேலே வரச்செய்வதுதான் ஒரே வழி என நான் முடிவு செய்தேன் என்கிறார் சிங். நீரைச் சேமிக்க ராஜஸ்தானின் பாரம்பரிய வழியைப் பின்பற்றி சௌகா என்ற ஒரு வழிமுறையை அவர் வடிவமைத்தார். கிராம் விகாஸ் நவ்யுவக் மண்டல் லபோரியா (ஜிவிஎன்எம்எல்) என்ற லாபநோக்கம் இல்லாத ஒரு நிறுவனத்தையும்  தொடங்கினார். சௌகா வழிமுறைப்படி, மேய்ச்சல் நிலத்தில் செவ்வகவடிவிலான குழிகள் வெட்டப்பட்டன. சரிவான சுவர் உள்ள இந்தக் குழிகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டவை. ஓரங்களில் களிமண் பூச்சு கொண்டு  கரை கெட்டிப்படுத்தப்பட்டது. ஒரு குழியில் நிறையும் நீர் அருகில் உள்ள குழிகளுக்குச் சென்று பின்னர் அனைத்துக் குழிகளுக்கும் பரவுகிறது. இறுதியில் நீர் ஒரு குட்டையைச் சென்றடைகிறது. மழைநீரைச் சேமிக்கும் இந்த முறையினால் மண்ணின் மேற்பரப்பு ஈரப்பதம் உள்ளதாக மாறி, நிலத்தடி நீரைப் புதுப்பிக்கிறது. சுற்றி புற்களும் புதர்களும் வளரத் தொடங்குகின்றன. கடந்த 15 ஆண்டுகளில் சௌகா வழிமுறை 400 பிகாக்கள் (ராஜஸ்தானில் ஒரு பிகா என்பது 2530 சதுர மீட்டர்களுக்கு சமம்) மேய்ச்சல் நிலத்தில் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. கிராம மக்கள் ஒன்றிணைந்து பணத்தையும் உழைப்பையும் தர முன்வந்தனர்.  மண்ணில் ஈரப்பதம் ஏறிவிட்டதால் கிராம மக்களுக்கு தங்கள் வயல்களுக்கு நீர்பாய்ச்சாமலே கார்காலப் பயிரை (rabi crop) அறுவடை செய்ய முடிந்தது. கார்காலப் பயிருக்கு நிலத்தடிநீரை எடுக்காததால், அதை கோடைக்காலத்தில் பயன்படுத்திக் கொள்ள முடிகிறது என்கிறார் சோட்டு சிங் என்ற விவசாயி.

எந்தப் பயிர்களை விளைவிக்கலாம் என்பதையும் மக்கள் திட்டமிட்டனர். நீர் அதிகமாகத் தேவைப்படும் பயிர்களை அவர்கள் தவிர்த்தனர். கோடைக்காலங்களில் பசுந்தீவனமும் (green fodder) காய்கறிகளும் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. அதுவும் கிணறுக்கு அருகே இருந்த வயல்களில் மட்டும். கிராம மக்கள் தங்களுக்குள் வகுத்துக் கொண்ட இந்தக் கட்டுப்பாடு வேறு சில நன்மைகளையும் கொணர்ந்தது. மேய்ச்சல் நிலம் பசுமையானதும் மிருகங்களுக்கு போதுமான அளவில் தீவனம் கிடைத்தது. குஜராத்திலிருந்து கிர் என்ற உள்நாட்டு பசு இனம்  கொணரப்பட்டு பால்பண்ணைத் தொழில் மேம்படுத்தப்பட்டது. கிர் பசு ஒரு நாளில் எட்டிலிருந்து பத்து லிட்டர் வரை பால் தந்தது. தற்போது ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது இரு பசுக்கள் வளர்க்கப்படுகின்றன.  பால் விற்பனை மூலம் ஒவ்வொரு வீட்டினரும் மாதம் சுமார் 30000 ரூபாயிலிருந்து 45000 ரூபாய் வரை வருமானம் ஈட்ட முடிகிறது. ஐந்து மாடுகள் வைத்திருப்போருக்கு இன்னும் கூடுதல் வருமானம் கிட்டுகிறது என்கிறார் ஜிவிஎன்எம்எல் தன்னார்வலர் அர்ஜுன் சிங்.  லபோரியா கிராமத்தின் முன்னுதாரணத்தை இன்று 58 கிராமங்கள் பின்பற்றத் தொடங்கிவிட்டன. அருகில் உள்ள பிற கிராமங்களுக்கும் அது பரவிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் உள்ள விவசாய சங்கத்தினர் லபோரியாவுக்குச் சென்று தண்ணீர் பஞ்சத்தை விரட்டியடிக்கும் முறையைக் கற்றுவந்து இங்கே அமுல்படுத்தத் தொடங்கலாமே?

பேராசிரியர் கே. ராஜு

aasiriyan11@gmail.com

Leave a Reply

Top