You are here
Home > அறிவியல் வெளியீடுகள் > மேட்டுப்பாளையத்தில் ஆகஸ்ட் 5 முதல் புத்தகத் திருவிழா

மேட்டுப்பாளையத்தில் ஆகஸ்ட் 5 முதல் புத்தகத் திருவிழா

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மேட்டுப்பாளையத்தில் ஆகஸ்ட் 5 முதல் 15-ஆம் தேதி வரை புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வெள்ளி விழா ஆண்டையொட்டி, புத்தகத் திருவிழா நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் மேட்டுப்பாளையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு வரவேற்பு குழுத் தலைவர் தொழிலதிபர் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் சக்கரவர்த்தி ஆறுமுகம், கிராமியக் கலைஞர் பத்திரப்பன், நுகர்வோர் பாதுகாப்பு இயக்கத் தலைவர் வெங்கட்ராமன், காய்கறி வியாபாரிகள் சங்கத் தலைவர் ஹம்சா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறிவியல் இயக்கத்தின் நகரத் தலைவர் ராஜாமணி வரவேற்றார். அறிவியல் இயக்கத்தின் மாநிலத் தலைவர் பாதுஷா அறிமுக உரையாற்றினார். இதில் கானுயிர் இதழ் ஆசிரியர் முகமது அலி, பவானியைக் காப்போம் இயக்கப் பொறுப்பாளர் மணி, அறிவியல் இயக்க மாவட்ட நிர்வாகி மகபுநிஷா, பள்ளி நிர்வாகி ராமசாமி சிறப்புரையாற்றினர்.

இதில், பள்ளி மாணவர்களுக்குப் புத்தக சேமிப்பை ஊக்கு விக்கும் வகையில் 20 ஆயிரம் உண்டியல்களை வழங்கவும், ஜூலை 21-இல் 30 ஆயிரம் பேர் பங்கேற்கும் ஒரே நேரத்தில் வாசிப்பு நிகழ்ச்சியை நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. மேலும், ஆகஸ்ட் 5 முதல் 15-ஆம் தேதி வரை மேட்டுப்பாளையத்தில் புத்தகத் திருவிழா நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து, புத்தகத் திருவிழாவுக்கான இணையதளத்தை தொழிலதிபர் கிருஷ்ணசாமி துவக்கி வைத்தார். இதில், டாக்டர் இஸ்மாயில், எல்ஐசி முகவர் சங்கத் தலைவர் ரங்கசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அறிவியல் இயக்க வட்டச் செயலர் மணி நன்றி கூறினார்.

நன்றி: தினமணி நாளிதழ்

Leave a Reply

Top