You are here
Home > அறிவிப்புகள் > மதுரையில் புதிய கல்விக் கொள்கை கலந்துரையாடல் கூட்டம்

மதுரையில் புதிய கல்விக் கொள்கை கலந்துரையாடல் கூட்டம்

தேசிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்காக மனித வள மேம்பாட்டு அமைச்சகம்  நியமித்த திரு டி.எஸ்.ஆர்.சுப்ரமணியன் கமிட்டி தனது அறிக்கையை மே இறுதியில் சமர்ப்பித்து உள்ளது. ஆனாலும் இந்த அறிக்கையானது இன்னும் அதிகாரப்பூர்வமாக அரசால் வெளியிடப்படவில்லை. “அரசு உடனடியாக வெளியிடவில்லை எனில் நானே வெளியிடுவேன்” என குழுவின் தலைவர் டி.எஸ்.ஆர்.சுப்ரமணியன் அவர்களே மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தினை வலியுறுத்தி வருகிறார்..  இந்நிலையில் ஏப்ரல் 30ஆம் தேதியிட்ட இக்கமிட்டியின் அறிக்கையின் முழுவடிவமும் இணையத்தின் மூலமாக வலம் வந்துகொண்டிருக்கிறது..

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் புதிய கல்விக் கொள்கைக்கான இவ்வறிக்கை குறித்த கலந்துரையாடல் கூட்டம் கடந்த ஞாயிறன்று (ஜூன், 26) மதுரை மூட்டா அலுவலகத்தில் அறிவியல் இயக்கத்தின் மாநிலத் தலைவர் பேரா.மோகனா தலைமையில் நடைபெற்றது.. மாநிலச் செயலாளர் தேனி சுந்தர் மற்றும் அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பின் துணைத்தலைவர் பேரா.ராஜமாணிக்கம் ஆகியோர் கூட்டத்தின் நோக்கங்கள் குறித்தும் தொடர்பணிகள் குறித்தும் பேசினர்..

tnsf education (1)

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், மூட்டா, மதுரை காமராசர் பல்கலைப் பாதுகாப்புக் குழு, இந்திய சமூக விஞ்ஞானக்கழகம், ஏ.ஐ.எஸ்.ஏ உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட அமைப்புகள் கலந்துகொண்ட கூட்டத்தில் பின்வரும் ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன..

 • முதலாவதாக புதிய கல்விக் கொள்கை வரைவினை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையினை அனைத்து தரப்பினரும் அறிந்துகொள்ளும் வகையில் மத்திய அரசு உடனடியாக வெளியிட வேண்டும்..
 • இந்திய வரலாற்றில் முதல் முறையாக கீழிருந்து மேல் கருத்துக் கேட்பு என்றெல்லாம் விளம்பரப்படுத்தப்பட்டாலும் கடந்த ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரையிலும் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட கருத்துக் கேட்புக் கூட்டங்கள் வெறும் கண் துடைப்பாகவே நடந்துமுடிந்திருக்கிறது..
 • உதாரணத்திற்கு 600க்கும் மேற்பட்ட மாவட்டங்களிலும் 6000க்கும் மேற்பட்ட ஒன்றியங்களிலும் 4000க்கும் மேற்பட்ட நகரங்களிலும் கருத்துக்கேட்பு நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது.. ஆனால் தமிழகம், புதுச்சேரி ஆகிய இரு மாநிலங்களுக்கும் சேர்த்து மதுரை, கோவை, சென்னை ஆகிய மூன்று இடங்களில் மட்டுமே, அதுவும் இரகசியக் கூட்டங்களாக நடந்து முடிந்தன..
 • எந்தவொரு ஆசிரியர் அமைப்பையோ, மாணவர் அமைப்புகளையோ, கல்வியில் தொடர்ச்சியாக பங்களிப்பு செய்து வரக்கூடிய தன்னார்வ அமைப்புகளையோ பெயருக்குக் கூட கலந்தாலோசிக்கவில்லை..
 • இன்னும் இப்படியொரு கருத்துக் கேட்பு நடந்துகொண்டிருப்பதாகவே இலட்சக்கணக்கான ஆசிரியர்களுக்குத் தெரியவே தெரியாது.. இப்படியாகத்தான் இந்தக் கருத்துக் கேட்பு நடந்து முடிந்திருக்கிறது..
 • சமூக, பொருளாதார, பண்பாட்டுப் பின்னணியில் கல்வியை அணுகாமல் வெறும் நிர்வாகப் பிரச்சனையாக மட்டுமே கல்வியை அணுகுவது ஆபத்தான விளைவுகளை உருவாக்கும் என்பதை மத்திய அரசு உணர வேண்டும்..
 • கருத்துக் கேட்பு நிகழ்வுகளின் மூலம் கிடைத்த தகவல்களை தொகுக்கவும் புதிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கையினை உருவாக்கவும் அமைக்கப்பட்ட ஐவர் குழுவில் முன்னாள் என்.சி.இ.ஆர்.டி. இயக்குநர் இராஜ்புத் அவர்களைத் தவிர யாருமே கல்வியாளர்கள் இல்லை.. மாறாக அரசின் நிர்வாகப்பணிகளில் இருந்தவர்கள்.. எனவே இந்த குழுவின் பரிந்துரைகளை ஏற்க முடியாது..
 • எனவே முப்பதாண்டுகள் கழித்து உருவாக்கப்படவுள்ள இந்தியாவின் புதிய கல்விக்கொள்கையானது இருபத்தோராம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ளும் வண்ணம் அமைய வேண்டியது அவசியம்.. எனவே கல்வியாளர்களைக் கொண்ட புதிய குழு அமைக்கப்பட வேண்டும்.. நாடு முழுவதும் ஆசிரியர், மாணவர், பெற்றோர் அமைப்புகளுடனும் அரசியல் கட்சிகளுடனும் உண்மையான கருத்துக் கேட்பு கூட்டங்களை நடத்தி அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் உள்வாங்கி புதிய கல்விக்கொள்கை உருவாக்கப்பட வேண்டும்..
 • நாட்டின் ஒட்டுமொத்த நலனைக் கருத்தில் கொள்ளாமல் வெறுமனமே தனது இந்துதுவா செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான கருவியாக புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பணியைக் கருதும் போக்கினை மத்திய அரசு கைவிட வேண்டும்..
 • இந்தியா வேறுபட்ட புவியியல் தன்மைகளை, பன்முகக் கலாச்சாரக் கூறுகளைக் கொண்ட நாடு.. அதன் பன்முகத் தன்மை பாதுகாக்கப்பட வேண்டும்.. அதனை விடுத்து பள்ளிக்கல்வி, உயர்கல்வி அனைத்தையும் மையப்படுத்தும் போக்கினையும் மத்திய அரசு கைவிட வேண்டும்..
 • அள்ளித் தெளித்த கோலமாக, அவசர அவசரமாக உருவாக்கப்படும் இந்தப் புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையினை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளக்கூடாது.. கல்வியாளர்களைக் கொண்ட குழு அமைத்து, விரிவான அளவில் முறையான கருத்துக் கேட்புக் கூட்டங்களை மத்திய அரசு நடத்த வலியுறுத்த வேண்டும்..

மேற்கண்ட ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.. மேலும் புதிய கல்விக் கொள்கை குறித்த கலந்துரையாடல்களை மாநிலம் முழுவதும் அனைத்து ஆசிரியர், மாணவர் அமைப்புகளையும் ஒருங்கிணைத்து நடத்துவதெனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.. அடுத்த கலந்துரையாடல் கூட்டம் ஜூலை 10 ஆம் தேதி திண்டுக்கல் நகரில் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது..

புதிய கல்விக் கொள்கை உருவாக்கத்திற்கான டி.எஸ்.ஆர் சுப்ரமணியன் குழு அறிக்கை மீதான கருத்துகள்

பள்ளிக் கல்வி:

 • பள்ளிக் கல்வியைப் பொறுத்த வரையில் கல்வி உரிமைச் சட்டபப்டி எட்டாவது வரை இல்லாத கட்டாயத் தேர்ச்சி முறையை மாற்றி ஐந்தாம் வகுப்பில் கொண்டு வருவதற்குப் பரிந்துரைக்கிறது. இது மாணவ்ர்கள் ஆரம்பக் கல்வியிலேயே விடுபடும் அபாயத்தை உருவாக்குகிறது. எட்டாம் வகுப்பில் இருந்து தொழிற் கல்வியை வலியுறுத்துவது முழுமையான கல்வி பெறாத முறைசாராத் தொழிலாளர்களை உருவாக்கும் வழியாகவும் குலத் தொழிலுக்கு இட்டுச் செல்லும் அபாயமாகவும் இருக்கிறது. எனவே அனைவருக்கும் மேல்நிலைக்கல்வி வரை கல்வி உரிமையாக்கப்பட வேண்டும்
 • கல்வி உரிமைச்சட்டம் வடிவமைத்துக் கொடுத்த பள்ளி மேலாண்மைக் குழுவின் பணிகளை முற்றிலும் கண்டுகொள்ளாமல் ஆசிரியர்களுக்குத் தண்டனை வழங்கும் அதிகாரம் கொடுப்பது பழைய ஊராட்சி நிர்வாக முறையில் இருந்த தீய விளைவுகளைக் கொண்டு வரும்..
 • மாணவர்கள் திறன் மதிப்பீடு உள், வெளி மதிப்பிடுதல் மூலம் கண்டறியபப்ட்டு அதற்கு ஆசிரியர் மட்டுமே பொறுப்பாக்கப்படுவது அறிவியலற்ற அணுகுமுறை ஆகும்.
 • ஆசிரியர்களுக்கு லைசென்ஸ் வழ்ங்கும் முறை கொண்டு வரப்பட்டு அது 10 வருடங்களுக்கு ஒரு முறை வெளித் தேர்வு மூலம் டிரைவிங் லைசென்ஸ் போல புதுப்பிக்கப்படும் என்ற முறை கேலிக்குரியதாக இருக்கிறது..=
 • மைனாரிட்டி நிறுவனங்கள் கல்வி உரிமைச் சட்டப்படி 25 சதவீத சேர்க்கையை உறுதிப்படுத்த சட்டத்தில் திருத்தம் கொணர்வது என்பது அதன் உரிமையைப் பறிக்கும் செயலாகும்..
 • கணிதம், அறிவியல் தேர்வுகளில் இரண்டு வகை கொணரப்பட்டு மாணவர்களைத் தரம் பிரித்து ஒதுக்கும் நிலைக்கு வழி செய்கிறது.
 • பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலும் தேசிய அளவில் இம் மாணவர்கள் மீண்டும் ஒரு தேசியத் தேர்வு எழுதி அதன் தரததை உறுதிப்படுத்திக் கொள்வதன் பின்னரே உயர்கல்விக்குச் செல்ல அனுமதிப்பது மாநிலக் கல்விமுறையைக் கொச்சைப்படுத்துவதாக உள்ளது.
 • மலைவாழ் மகக்ளுக்கு திறன் வளர்ப்புப் பயிற்சி அளிப்பது என்பது மீண்டும் அவர்களை அதே குலத் தொழிலைச் செய்ய ஊக்குவிக்கவே பயன்படும்..
 • ஐந்தாம் வகுப்பு வரை மட்டும் தாய்மொழி வழிக் கல்விக்குப் பரிந்துரைப்பதை மாற்றி பள்ளிக் கல்வி முழுவதும் தாய்மொழிவழிக் கல்வியை வலியுறுத்த வேண்டும்..
 • அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவதைத் தடுப்பதற்கான ஆலோசனைகளுக்குப் பதிலாக அவைகளை பிற பள்ளிகளோடு இணைத்து அருகாமைப் பள்ளிகள் என்ற கோட்பாட்டைச் சிதைக்கிறது.
 • யோகாவை கட்டாயப்படுத்தும் முயற்சியும் உடற்பயிற்சி மைதானம் இல்லாத பள்ளிகள் யோகாவை பயிற்றுவிக்கலாம் எனவும் கூறுகிறது. யோகா என்பது உடற்பயிற்சிக்கு மாற்று அல்ல..
 • எல்லாவற்றிற்கும் மேலாக பள்ளிக் கல்வியின் நிர்வாகத்தை மையப்படுத்தும் வகையில் இந்திய கல்விப் பணி என்ற தேசியப்பணி உருவாக்குவது கல்வியை மையப்படுத்தபபட்ட அதிகாரமயமாக்கலாகக் கருதுகிறது.

tnsf education (2)

உயர்கல்வி:

 • துணைவேந்தர் பதவியை அரசியலிலிருந்து பிரிப்பதாக இருக்க வேண்டும் எனப் பரிந்துரைத்தாலும் இதை மத்திய மாநில அரசுகள் கல்ந்தாலோசிக்க வேண்டுமென்று விட்டு விடுகிறது. இதற்கான விதிமுறைகள் எதுவும் பரிந்துரைக்கப்படவில்லை.
 • உயர் கல்வியில் யுஜிசி, எஐசிடிசி ஆகிய அமைப்புகளைக் கலைத்து தேசிய கல்வி வளர்ச்சி மற்றும் நிர்வாக அமைப்புச் சட்டம் ஒன்றை இயற்றப் பரிந்துரைக்கிறது.
 • இது வரை இருந்து வந்த இருவகையான மத்திய தர மதிப்பீடுக் குழுவைக் கலைத்து ஒரே ஒரு குழுவைப் பரிந்துரைக்கிறது. மேலும் இக்குழு மூலம் அந்நிய ஏஜென்சி உள்ளிட்ட தனியார் மதிப்பீட்டுக் குழுக்களுக்குப் பரிந்துரைக்கிறது.
 • தரமிடப்படும் கல்வி நிறுவனங்கள் குறிப்பிட்ட மதிப்பீடு பெறவில்லையென்றால் அவற்றை மூடிவிடப் பரிந்துரைக்கிறது. இது மிகவும் பின் தங்கிய பகுதிகளில் செயல்படும் கல்லூரிகளை மூடவே வழிவகுக்கும்.
 • தனியார் கட்டண கல்வி நிறுவனங்களுக்கு அரசு கட்டணம் நிர்ணயிப்பதை கைவிட்டு தனியார் நிறுவனங்களே சுயமாக கட்டணம் நிர்ணயித்துக் கொள்ள அனுமதி அளிக்கிறது.
 • உயர்கல்வியில் உல்க வர்த்தக நிறுவனத்திற்கு ஒத்திசிசைவு தருவது போல் அந்நியப் பலகைக் கழகங்கள் இந்தியாவில் துவங்குவதற்கு பச்சைக்கொடி காட்டுகிறது.
 • உயர்கல்வியில் தொழிற்கல்விப் படிப்பு ஒவ்வொன்றுக்கும் தனித்தனி தேசிய நுழைவுத் தேர்வைப் பரிந்துரைக்கிறது.
 • சமூகநீதி என்ற அடிப்படையில் வழங்கபப்ட்டு வரும் ஸ்காலர்ஷிப்புகள் குறித்து எதுவும் பேசாமல் அதை ஒழித்துக் கட்டும் வண்ணம் 10 லட்சம் மாணவர்களுக்கு கல்விக்கட்டணம், கல்விச் சாதனக் கட்டணம், மாணவர் படிப்புக் கால ஹாஸ்டல் கட்டணம் எனப் பயன்பெறும் வகையில் மெரிட் என்ற அடிபப்டையிலும் சமத்துவம் என்ற அடிப்படையிலும் பொருளாதார ரீதியாக பல்மவீனமானவர்கள், வறுமைக் கோட்டுக் கீழ் இருப்பவர்கள் என்ற் பின்னணியில் வழங்கப் பரிந்துரைக்கிறது.
 • உயர்கல்வி ஆசிரியர்கள் திறன்மிக்கவர்களாகக் கிடைப்பதற்கு மேல்நிலைப் பள்ளிப் படிப்பில் முதல்நிலை பெறுபவர்களைப் பிரித்தெடுத்து அவர்களை ஐந்து வருட ஒருங்கிணைந்த படிப்பு மூலம் தயாரித்துக் கொடுக்கப் பரிந்துரைக்கிறது. இதற்கான செலவை அரசே ஏற்கவும் பரிந்துரைக்கிறது. இது உயர்கல்வியை டீச்சிங் ஷாப்பாக மாற்ற வழி வகுக்கிறது.
 • அந்நிய பலகலைக் கழகங்களை அனுமதிப்பதன் மூலம் நமது நாட்டின் தேவை, கலாச்சாரம் ஆகியவற்றிற்கு சவால் ஏற்பட்டுள்ளது.
 • இறுதியாக உயர்கல்வி நிறுவனங்களில் அமைதியின்மை இருப்பதாகவும் அரசியலும் சங்கங்களும் காரணம் காட்டி மாணவர் ஆசிரியர் சங்கங்கள் தடை செய்யப் பரிந்துரைக்கிறது. இதன் மூலம் உயர்கல்வியில் இருந்து வந்த ஜனநாயகத்திற்கு வாய்ப்பில்லாமல் செய்கிறது.
 • துவக்கத்தில் கீழிருந்து மேல் என்ற அடிப்படையில் பெறப்பட்ட கருத்துக்களை வெளியிட வேண்டும். சுப்ரமணியன் கமிட்டி அறிக்கையை பொது மக்கள் விவாததற்கு உட்படுத்த வேண்டும். இவை இரண்டும் பொது வெளியில் புரிந்து கொள்ள உதவும். எல்லாவறிற்கும் மேலாக கல்வியாளர்கள் குழுவை உருவாக்கி விரிவான விவாதங்களுடன் மாநில அரசின் உரிமைகள் பறிக்கபப்டாமல் ஒரு கல்விக் கொள்கையை உருவாக்குவதே சாலச் சிறந்ததாகும்.

-அறிவியல் இயக்கம் நடத்திய கலந்துரையாடல் கூட்டத்தின் தொகுப்பு

ஜூன்,26- மதுரை

தரவிறக்கம் செய்ய…

புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை 2016 pdf

Top