You are here
Home > இயக்கச் செய்திகள் > மாநில அரசு கல்வி நலனில் எந்தச் சூழலிலும் தனது உரிமையை விட்டுத் தரக் கூடாது அறிவியல் இயக்கம் வேண்டுகோள்

மாநில அரசு கல்வி நலனில் எந்தச் சூழலிலும் தனது உரிமையை விட்டுத் தரக் கூடாது அறிவியல் இயக்கம் வேண்டுகோள்

சென்னை,ஜூன்.22 : மாநில அரசு கல்வி நலனில் தனது உரிமையை எந்தச் சூழலிலும் விட்டுத்தரக் கூடாது என்றும்,  தமிழக அரசு சுயமான கல்விக் கொள்கையை தயாரித்து அளித்து அதன் அடிப்படையில் தமிழகக் கல்வித் தர மேம்பாட்டிற்கான வழிவகைகளை மேற்கொள்ள முயற்சிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

திண்டுக்கல் நத்தம் ராம்சன் மெட்ரிக் பள்ளியில்  நடைபெற்ற  தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின்   மாநிலத் தலைவர்  மோகனா தலைமையில்  நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் கூறப்பட்டுள்ளதாவது, 30 ஆண்டுகளுக்குப் பிறகு புதிதாக உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ள புதிய கல்விக்கொள்கைக்காக மத்திய அரசு கடந்த ஜனவரி 2015 முதல் அக்டோபர் 201 வரை பள்ளிக்கல்வி, உயர்கல்வி குறித்த 33 தலைப்புகளில் 36 மாநிலங்களில் சுமார் 2  லட்சம் ஊராட்சிகளிலும் இணையதள வழியாகவும் கருத்துக் கேட்பு நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் இந்தக் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் வெறும் கண் துடைப்பாகவே நடந்தது. குறிப்பாக நமது தமிழ்நாட்டில் மதுரை, கோயம்புத்தூர், சென்னை ஆகிய 3  இடங்களில் மட்டுமே நடத்தப்பட்டது. அவையும் கூட விரிவான அளவில் திட்டமிட்டு நடைபெறவில்லை. இந்தச் சூழ்நிலையில் டி.எஸ்.ஆர் சுப்ரமணியம் தலைமையிலான 5 பேர்   குழு கடந்த மே 27 அன்று மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறையின் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தில் புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையினை சமர்ப்பித்துள்ளது. ஆனால்

டி.எஸ்.ஆர் சுப்ரமணியம் அறிக்கை என்பது வெறும் பரிந்துரைகள் தான் என்றும் அவை வரைவறிக்கையே அல்ல என்றும் மத்திய அரசின் சார்பில் முரண்பட்ட தகவல்கள், பதில்கள் அளிக்கப்படுகின்றன.ஆசிரியர், மாணவர் அமைப்புகள், கல்வியில் தொடர்ந்து பங்களிப்பைச் செய்துவரக் கூடிய தமிழ்நாடு அறிவியல் இயக்கம் போன்ற தன்னார்வ அமைப்புகளின் கருத்துகளையும் கேட்டு அதன் பிறகு மத்திய அரசுக்கு தனது கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும். எந்தச் சூழலிலும் மாநில அரசு கல்வி நலனில் தனது உரிமையை விட்டுத்தரக் கூடாது என்றும் தமிழக அரசு சுயமான கல்விக் கொள்கையை தயாரித்து அளித்து அதன் அடிப்படையில் தமிழகக் கல்வித் தர மேம்பாட்டிற்கான வழிவகைகளை மேற்கொள்ள முயற்சிக்க வேண்டும்.

மத்திய அரசின்   வித்யாஞ்சலி யோஜனா என்ற திட்டத்தை அமல்படுத்தியுள்ளது.. இத்திட்டம் அரசுப் பள்ளிகளில் கல்வி இணைச் செயல்பாடுகள் மிகவும் குறைவாக இருப்பதாகவும் அதனை நிவர்த்தி செய்ய ஓய்வுபெற்ற மத்திய, மாநில அரசு ஊழியர்கள், இராணுவத்தினர், வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆகியோரைப் பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் திறன் குறைபாடுகளுக்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.

அவற்றைச் சரிசெய்வதற்காக முயற்சிக்காமல் இதுபோன்ற திட்டங்களை அமலாக்க மத்திய அரசு முயற்சிப்பது சரியான அணுகுமுறையல்ல. எனவே இத்திட்டத்தினை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறது.மாநிலத்தில் உயர்கல்வி பயில்வதற்கு ஏராளமான மாணவர்களிடையே ஆர்வம் மேலோங்கி உள்ளது. தற்போது அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் கல்விக்கட்டணத்தை அரசே வழங்கி வருகின்றது. முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கும் இலவசக் கல்வி அமுல்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் லட்சக் கணக்கான மாணவர்களின் தேவையினை நிவர்த்தி செய்ய இது போதுமானதாகாது.கிராம, ஊரகப்பகுதிகளில் இருந்தும் தற்போது அரசுப் பள்ளி மாணவர்கள் மிகச் சிறப்பான மதிப்பெண்களைப் பெற்று சாதனை படைத்து வருகின்றனர்.

ஆனாலும் மிகவும் பின் தங்கிய சமூக, பொருளாதாரக் காரணங்களால் மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகளில் சேர முடியாமல் தவிக்கின்றனர். எனவே தகுதிவாய்ந்த மாணவர்களின் மருத்துவம், பொறியியல் போன்ற தொழிற்கல்விக்கான அனைத்துச் செலவுகளையும் அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் அமல்ராஜன், மாநிலப் பொருளாளர்  செந்தமிழ்ச் செல்வன்,  மாநில கல்வி ஒருங்கிணைப்பாளர் தேனி சுந்தர் மற்றும் தமிழகம் முழுவதுமிருந்து மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நன்றி: தின இதழ்

Leave a Reply

Top