You are here
Home > இயக்கச் செய்திகள் > தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயற்குழு கூட்டத்தில் கல்வி குறித்த தீர்மானங்கள்…

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயற்குழு கூட்டத்தில் கல்வி குறித்த தீர்மானங்கள்…

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ராம்சன் மெட்ரிக் பள்ளியில் ஜூன் 18, 19 தேதிகளில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயற்குழு கூட்டம் மாநிலத் தலைவர் பேரா.மோகனா தலைமையில் நடைபெற்றது.. கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன… 20160619_105150

தீர்மானம் 1

புதிய கல்விக்கொள்கை உருவாக்கத்தில் மாநில அரசு தன் உரிமையை விட்டுக்கொடுக்கக்கூடாது… :

 30ஆண்டுகளுக்குப் பிறகு புதிதாக உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ள புதிய கல்விக்கொள்கைக்காக மத்திய அரசு கடந்த ஜனவரி 2015 முதல் அக்டோபர் 201 வரை பள்ளிக்கல்வி, உயர்கல்வி குறித்த 33 தலைப்புகளில் 36 மாநிலங்களில் சுமார் 2 இலட்சம் ஊராட்சிகளிலும் இணையதள வழியாகவும் கருத்துக் கேட்பு நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.. ஆனால் இந்தக் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் வெறும் கண் துடைப்பாகவே நடந்தது.. குறிப்பாக நமது தமிழ்நாட்டில் மதுரை, கோவை, சென்னை ஆகிய மூன்று இடங்களில் மட்டுமே நடத்தப்பட்டது.. அவையும் கூட விரிவான அளவில் திட்டமிட்டு நடைபெறவில்லை..

இந்தச் சூழ்நிலையில் டி.எஸ்.ஆர் சுப்ரமணியம் தலைமையிலான ஐவர் குழு கடந்த மே 27 அன்று மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறையின் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தில் புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையினை சமர்ப்பித்துள்ளது..

இந்த அறிக்கையின் முக்கிய அம்சங்களாக “குழந்தைகளின் கல்வி உரிமையைப் பறிப்பதாகவும் எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி என்பதைக் கைவிடுவதாகவும் மும்மொழிக் கொள்கைக்கு மாறாக சமஸ்கிருத திணிப்பு மற்றும் கல்வியில் வகுப்புவாதத்தையும் வணிக மையத்தையும் கொண்டுவர முயற்சிப்பதாகவும்” பத்திரிகைச் செய்திகளின் வாயிலாக அறியமுடிகிறது…

மேலும் டி.எஸ்.ஆர் சுப்ரமணியம் அறிக்கை என்பது வெறும் பரிந்துரைகள் தான் என்றும் அவை வரைவறிக்கையே அல்ல என்றும் மத்திய அரசின் சார்பில் முரண்பட்ட தகவல்கள், பதில்கள் அளிக்கப்படுகின்றன.. இந்நிலையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயற்குழு மத்திய, மாநில அரசுகளுக்கு பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கிறது…

  1. கருத்துக் கேட்புக் கூட்டங்களில் முன்வைக்கப்பட்ட கருத்துகளைத் தொகுத்து பொதுமக்களின் பார்வைக்காக உடனடியாக வெளியிட வேண்டும் எனவும்…
  1. டி.எஸ்.ஆர். சுப்ரமணியம் குழுவின் பரிந்துரைகளின் தொகுப்பினையும் உடனடியாக வெளியிட வேண்டும்.. அதன் மீது அனைத்துத் தரப்பினரும் தங்கள் கருத்துகளை தெரிவிக்கும் வகையில் போதுமான கால அவகாசம் அளிக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலச் செயற்குழு மத்திய அரசை வலியுறுத்துகிறது..
  1. ஆசிரியர், மாணவர் அமைப்புகள், கல்வியில் தொடர்ந்து பங்களிப்பைச் செய்துவரக் கூடிய தமிழ்நாடு அறிவியல் இயக்கம் போன்ற தன்னார்வ அமைப்புகளின் கருத்துகளையும் கேட்டு அதன் பிறகு மத்திய அரசுக்கு தனது கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும் எனவும்…
  1. எந்தச் சூழலிலும் மாநில அரசு கல்வி நலனில் தனது உரிமையை விட்டுத்தரக் கூடாது என்றும் தமிழக அரசு சுயமான கல்விக் கொள்கையை தயாரித்து அளித்து அதன் அடிப்படையில் தமிழகக் கல்வித் தர மேம்பாட்டிற்கான வழிவகைகளை மேற்கொள்ள முயற்சிக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயற்குழு தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறது…

தீர்மானம் 2

மத்திய அரசு வித்யாஞ்சலி யோஜனா திட்டத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்…

FB_IMG_1466358805840மத்திய அரசு இந்த மாதம் 16ஆம் தேதி முதல் வித்யாஞ்சலி யோஜனா என்ற திட்டத்தை அமல்படுத்தியுள்ளது.. இத்திட்டம் அரசுப் பள்ளிகளில் கல்வி இணைச் செயல்பாடுகள் மிகவும் குறைவாக இருப்பதாகவும் அதனை நிவர்த்தி செய்ய ஓய்வுபெற்ற மத்திய, மாநில அரசு ஊழியர்கள், இராணுவத்தினர், வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆகியோரைப் பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது..

வாசிப்பு, எழுத்துப் பயிற்சி, கதைகூறல், பாட்டு, நடனம், இசை போன்ற செயல்பாடுகளை யார் வேண்டுமானாலும் அரசுப் பள்ளி மாணவர்களிடம் எடுத்து செல்ல இத்திட்டம் வழிவகை செய்கிறது.. பங்களிக்க ஆர்வமுள்ளவர்கள் மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் இணையதளத்தில் பதிவுசெய்ய வேண்டும்.. அதனைப் பரிசீலித்து அமைச்சகம் ஒரு பட்டியலை வெளியிடும்.. அப்பட்டியலில் உள்ளவர்கள் பள்ளிகளுக்குச் சென்று மேற்கண்ட செயல்பாடுகளைக் கொண்டு செல்லலாம்.. முதல் கட்டமாக 21 மாநிலங்களில் தலா 100 பள்ளிகளில் அமலாக உள்ளது..

யார் வேண்டுமானாலும் பள்ளிகளில் இச்செயல்பாடுகளைக் கொண்டு செல்லலாம் என்ற திட்டம் மிகவும் ஆபத்தானது.. பள்ளிக் கல்வியிலும் மாணவர்கள் மத்தியிலும் வகுப்புவாத சக்திகள் பல்வேறு பெயர்களில் செயல்பட்டு வருவதை நாமறிவோம்.. மேலும் சாதி, மத, மூடநம்பிக்கை, அறிவியலுக்குப் புறம்பான கருத்துகளை அறிவியல் என்ற பெயரில் பரப்பிவருவதை சமீப கால நிகழ்வுகளின் மூலம் அறியமுடியும்.. மேலும் பள்ளிக்கு வருபவர்கள் அந்த நோக்கத்திற்காக மட்டுமே தான் மாணவர்களிடம் கலந்துரையாடுவார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.. 2 முதல் 12 வாரங்கள் வரையிலும் ஆசிரியர்கள் தவிர்த்த பிற நபர்கள் வகுப்பறையில் கற்பித்தல் செயல்பாடுகளில் ஈடுபடுவது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் தவறான கருத்தோட்டங்கள் உருவாவதற்கும் பணித்திறனில் தொய்வினை ஏற்படுத்திடவும் வாய்ப்புள்ளது.. அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் திறன் குறைபாடுகளுக்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.. அவற்றைச் சரிசெய்வதற்காக முயற்சிக்காமல் இதுபோன்ற திட்டங்களை அமலாக்க மத்திய அரசு முயற்சிப்பது சரியான அணுகுமுறையல்ல என்பதை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயற்குழு சுட்டிக்காட்ட விரும்புகின்றது.. மேலும் இத்திட்டத்தினை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறது..

தீர்மானம் 3

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச உயர் தொழிற்கல்வி வழங்கிட வேண்டும்..

 நமது மாநிலத்தில் உயர்கல்வி பயில்வதற்கு ஏராளமான மாணவர்களிடையே ஆர்வம் மேலோங்கி உள்ளது.. தற்போது அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் கல்விக்கட்டணத்தை அரசே வழங்கி வருகின்றது.. முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கும் இலவசக் கல்வி அமுல்படுத்தப்பட்டுள்ளது.. ஆனால் இலட்சக் கணக்கான மாணவர்களின் தேவையினை நிவர்த்தி செய்ய இது போதுமானதாகாது..IMG20160619092629

கிராம, ஊரகப்பகுதிகளில் இருந்தும் தற்போது அரசுப் பள்ளி மாணவர்கள் மிகச் சிறப்பான மதிப்பெண்களைப் பெற்று சாதனை படைத்து வருகின்றனர்.. ஆனாலும் மிகவும் பின் தங்கிய சமூக, பொருளாதாரக் காரணங்களால் மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகளில் சேர முடியாமல் தவிக்கின்றனர்.. எனவே தகுதிவாய்ந்த மாணவர்களின் மருத்துவம், பொறியியல் போன்ற தொழிற்கல்விக்கான அனைத்துச் செலவுகளையும் அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயற்குழு தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறது..

தீர்மானம் 4

மருத்துவ பொது நுழைவுத் தேர்வினை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும்…

 சமீபத்தில் , உச்சநீதிமன்றம் ஒரு நுழைவுத் தேர்வின் தேவை, அதை நடைமுறைக்குக் கொண்டு வருவதில் உள்ள சிக்கல்கள் எதையுமே கருத்தில் கொள்ளாமல் மருத்துவ பொது நுழைவுத் தேர்வினைக் கட்டாயமாக்கி அறிவித்திருந்தது.. இதனைக் கண்டுகொள்ளாமல் இருந்த மத்திய அரசு இத்தீர்ப்பால் பாதிக்கப்பட்ட பல்வேறு மாநிலங்கள், மக்கள் இயக்கங்களின் நிர்பந்தம் காரணமாக இந்த ஓராண்டிற்கு மட்டும் பொது நுழைவுத் தேர்வினை ரத்து செய்ய அவசரச் சட்டம் ஒன்றை இயற்றியுள்ளது.. இதற்காக தமிழக அரசு மேற்கொண்ட முயற்சிகளையும் நிரந்தரமாக இப்பொது நுழைவுத் தேர்வினை ரத்து செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டினையும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயற்குழு வரவேற்கிறது…

IMG20160619092659இந்திய ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒவ்வொரு மாநிலமும் அதன் தன்மைக்கேற்ப கலைத்திட்டம், பாடத்திட்டம் உருவாக்கிக் கொள்ளவும் அதனடிப்படையில் அம்மாநில அரசு தனது ஆளுகையின் கீழ் உள்ள கல்வி நிறுவன சேர்க்கையை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.. அத்தோடு தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உள்ள நிர்வாக ஒதுக்கீடுகளுக்கும் நுழைவுத் தேர்வை நடத்தாமல் பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே தரவரிசைப் பட்டியல் தயாரித்து நிரப்பிட வேண்டும்..

மத்திய அரசின் கல்வி நிறுவன சேர்க்கை முறை மத்திய பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு நடைபெறுவதால் நேரிடையாகவும் மறைமுகமாகவும் சி.பி.எஸ்.ஈ.  பாடத்திட்டத்தை ஏற்றுக்கொள்ள வைக்க வேண்டும். என்ற நிர்பந்தம் அடங்கியுள்ளது. எனவே மத்திய பல்கலைக்கழகங்கள் உயர் கல்வி நிறுவனங்கள் சேர்க்கை முறை சி.பி.எஸ்,சி ஐ சாராமல் சுயமாக வகுக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துவது எனவும் மாநில அரசு இதற்கு வலுசேர்க்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

இக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் அமல்ராஜன், மாநிலப் பொருளாளர் கு.செந்தமிழ்ச் செல்வன் மாநில கல்வி ஒருங்கிணைப்பாளர் தேனி சுந்தர் மற்றும் தமிழகம் முழுவதுமிருந்து மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்..

Leave a Reply

Top