You are here
Home > இயக்கச் செய்திகள் > மாணவர்களை நல்வழிப்படுத்துவதும் ஆசிரியரின் கடமை

மாணவர்களை நல்வழிப்படுத்துவதும் ஆசிரியரின் கடமை

தவறான பாதையில் செல்லும் மாணவர்களை நல்வழிப்படுத்துவதும் ஒவ்வொரு ஆசிரியரின் கடமை என்றார் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எம்.இராமசாமி.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் அரசுப் பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள், மாவட்ட அளவில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ,மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி அவர் மேலும் பேசியது: தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாணவர்களை கல்வியில் உயர்த்திட அரசுப் பள்ளி ஆசிரியர்கள் முனைப்புடன் உழைக்கிறார்கள். அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ,மாணவிகளில் பெரும்பாலானோர் ஏழைகள். அவர்களை சமுதாயத்தில் சிறந்த மனிதர்களாக ஆக்கும் பொறுப்பு ஆசிரியர்களிடம் உள்ளது. இதேபோல தவறான பாதையில் செல்லும் மாணவன் மீது தனிக்கவனம் செலுத்தி அவனை நல்வழிப்படுத்துவதும் ஆசிரியர்களின் தலையாய கடமையாகும் என்றார்.

விழாவில் அறிவியல் இயக்க மாநில செயலாளர் எஸ்டி.பாலகிருஷ்ணன் பேசுகையில், ஏழை மாணவர்கள் அரசுப் பள்ளியில் 100 சதவீதம் மதிப்பெண் பெறுவது சாதனைக்குரியது. தாய்மொழிக் கல்வியில் தான் ஒரு மாணவன் தனது திறனை முழுமையாக வெளிப்படுத்த முடியும் என்றார்.

முன்னதாக நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட துணைத் தலைவர் எம்.முருகேசன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஐ. ஜான்பாட்ஷா வரவேற்றார். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டச் செயலாளர் பா.பெரியசாமி நிகழ்ச்சியை தொடக்கி வைத்துப் பேசினார். இதில், கரூர் பரணி கல்விக் குழுமங்களின் முதன்மை முதல்வர் சி.இராமசுப்ரமணியன், பள்ளி மாணவ,மாணவிகள்,பெற்றோர்கள் திரளாகப் பங்கேற்றனர்.

நன்றி: தினமணி நாளிதழ்

Leave a Reply

Top