You are here
Home > இயக்கச் செய்திகள் > தனித்திறன்களை வளர்த்தெடுக்கும் கல்வி அவசியம்

தனித்திறன்களை வளர்த்தெடுக்கும் கல்வி அவசியம்

மதிப்பெண்கள் மட்டுமே முழுமையான அறிவை வளர்த்துவிடாது என்றார் பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியல் துறைத் தலைவர் மணிமேகலை. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்டத்தில் நூறு சதவிகிதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கான பாராட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மேலும் அவர் பேசியது:

மாணவர்களை பாடத் திட்டங்களைத் தாண்டி சமூக அக்கறையுள்ளவர்களாகவும் வளர்த்தெடுக்க வேண்டும். மதிப்பெண்கள் மட்டுமே முழுமையான அறிவை வளர்த்துவிடாது. மாணவர்களின் தனித் திறமைகளை அறிந்து அந்தத் துறையை நோக்கி அவர்களை ஊக்கப்படுத்தி வளர்த்தெடுக்கும் கல்விமுறை மிக அவசியத் தேவையாக இருக்கிறது.

அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதமும் கடந்த ஆண்டைவிடக் கூடியுள்ளது. அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கூடுதலான அக்கறையுடனும், ஆர்வத்துடனும் பாடம் நடத்தி, ஏராளமான சாதனை மாணவர்கள் உருவாகி வருவது பாராட்டுக்குரியது என்றார்.

முதன்மைக்கல்வி அலுவலர் செ. சாந்தி பேசியது: பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் புதுக்கோட்டை மாவட்டம் மாநிலத்தில் 23-வது இடத்திலிருந்து 19-க்கும், 12-ம் வகுப்பில் 22-வது இடத்திலிருந்து 16-வது இடத்திற்கும் முன்னேறியுள்ளது. அனைத்து திறன்களையும் உள்ளடக்கிய முழுமையான கல்வியை அரசுப் பள்ளிகள் வழங்கி வருகின்றன. இதுகுறித்த விழிப்புணர்வு மக்களிடம் ஏற்பட்டுள்ளது. அதன் பலனாக நடப்பாண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளது என்றார்.

அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் மணவாளன் தலைமை வகித்தார். மாவட்ட வர்த்தக கழகத் தலைவர் சீனு. சின்னப்பா மாணவர்களுக்கு நினைவுப் பரிசு, சான்றிதழை வழங்கி வாழ்த்தினார்.

அறிவியல் இயக்க மாநிலச் செயலர் பாலகிருஷ்ணன், மாவட்டக் கல்வி அலுவலர்கள் பரமசிவம், அறிவியல் இயக்க மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் பிரபாகரன், முத்துநிலவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அறிவியல் இயக்க மாவட்டச் செயலர் வீரமுத்து வரவேற்றார். இணைச் செயலர் உஷாநந்தினி நன்றி கூறினார்.

நன்றி: தினமணி நாளிதழ்

Leave a Reply

Top