You are here
Home > இயக்கச் செய்திகள் > அரசுப்பள்ளிகளின் சாதனைகள் பாராட்டுக்குறியது: முதன்மை கல்வி அலுவலர் பேச்சு

அரசுப்பள்ளிகளின் சாதனைகள் பாராட்டுக்குறியது: முதன்மை கல்வி அலுவலர் பேச்சு

கிராமப்புற ஏழை, எளிய பகுதிகளில் இருந்து வரும் மாணவர்களுக்கு சிறப்பான கல்வியை வழங்கி சாதனைபடைத்து வரும் அரசுப்பள்ளிகள் பாராட்டுக்குறியது என்றார் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செ.சாந்தி.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நூறு சதவிகிதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கான பாராட்டுவிழா புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றது.
இதில் சிறப்புரையாற்றிய அவர், பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் புதுக்கோட்டை மாவட்டம் மாநிலத்தில் 23-வது இடத்திலிருந்து 19 இடத்திற்கும், 12-ம் வகுப்பில் 22-வது இடத்திலிருந்து 16-வது இடத்திற்கும் முன்னேறி உள்ளது. மாணவர்களின் தேர்ச்சி விகிதமும் கடந்த ஆண்டைவிடக் கூடியுள்ளது. இந்த கூடுதலுக்கு அரசுப்பள்ளிகளே முக்கியக் காரணம். அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கூடுதலான அக்கறையுடனும், ஆர்வத்துடனும் பாடம் நடத்தி வருகின்றனர். அரசுப்பள்ளிகளில் ஏராளமான சாதனை மாணவர்கள் உருவாகி வருகின்றனர். அனைத்து திறன்களையும் உள்ளடக்கிய முழுமையான கல்வியை அரசுப் பள்ளிகள் வழங்கி வருகின்றன. இதன் விழிப்புணர்வு மக்களிடம் ஏற்பட்டுள்ளது. அதன் பலனாக நடப்பாண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை கூடுதலாகி உள்ளது என்றார்.
விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியல் துறைத்தலைவர் முனைவர் மணிமேகலை பேசும்போது, மாணவர்களுக்கு பாடத்திட்டங்களைத் தாண்டி சமூக அக்கறை உள்ளவர்களாகவும் வளர்த்தெடுக்க வேண்டும். கூடுதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அதே நேரத்தில், மதிப்பெண்கள் மட்டுமே முழுமையான அறிவை வளர்த்துவிடாது. மாணவர்களின் தனித் திறமைகளை அறிந்து அந்தத்துறையை நோக்கி அவர்களை ஊக்கப்படுத்தி வளர்த்தெடுக்கும் கல்விமுறை மிகவும் அவசியத் தேவையாக இருக்கிறது என்றார்.
விழாவிற்கு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் அ.மணவாளன் தலைமை வகித்தார். மாணவர்களுக்கு நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழை வழங்கி  மாவட்ட வர்த்தக கழகத் தலைவர் சீனு.சின்னப்பா வாழ்த்திப் பேசினார். அறிவியல் இயக்க மாநிலச் செயலாளர் எஸ்.டி.பாலகிருஷ்ணன், மாவட்டக் கல்வி அலுவலர்கள் உ.பரமசிவம், ஆர்.சந்தியா, அறிவியல் இயக்க மாநிலச் செயற்கழு உறுப்பினர்கள் எல்.பிரபாகரன், கவிஞர் நா.முத்துநிலவன், பொன்.கருப்பையா ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
விழாவில், மாவட்ட நிர்வாகிகள் மா.குமரேசன், க.ஜெயபாலன், சி.எஸ்.வள்ளல், இ.பவுனம்மாள், செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் ம.வீரமுத்து வரவேற்க, இணைச் செயலாளர் க.உஷாநந்தினி நன்றி கூறினார்.
நன்றி: நக்கீரன்

Leave a Reply

Top