You are here
Home > அறிவியல் கல்வி > “இயற்கையோடு இயைந்த வாழ்க்கையே மனிதரை மேம்படுத்தும்’

“இயற்கையோடு இயைந்த வாழ்க்கையே மனிதரை மேம்படுத்தும்’

புதுக்கோட்டை: இயற்கையோடு இயைந்த வாழ்க்கையே மனிதரை மேம்படுத்தும் என்றார் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.டி. பாலகிருஷ்ணன்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தேசிய பசுமைப்படை, துளிர் இல்லங்கள் இணைந்து திருவப்பூர் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, திங்கள்கிழமை நடத்திய மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி, கருத்தரங்கில் பங்கேற்று அவர் பேசியது:

2016-ம் ஆண்டுக்கான சுற்றுச்சூழல் தினத்திற்கான கருப்பொருள் சட்டவிரோத வனவிலங்கு விற்பனையை தடுத்தல் என்பதாகும். மக்களின் நாகரிக வாழ்க்கையாலும், பேராசையாலும் பறவைகள், விலங்குகள் அழிந்து வருகின்றன. மனிதர்கள் தனிமையான வாழ்க்கையை வாழ இயலாது. இயற்கையோடு இயைந்த வாழ்க்கையே மனிதரை மேம்படுத்தும். மக்கள் ஒவ்வொருவரும் மரங்கள் வளர்க்க உறுதியேற்க வேண்டும்.

கடைகளுக்கு செல்லும்போது பிளாஸ்டிக் பையில் வாங்குவதை மறுத்து துணிப்பையை பயன்படுத்த வேண்டும். பறவைகள், விலங்கினங்களைக் காக்க முன்வரவேண்டும். சுகாதாரமான வாழ்க்கைக்கு மரங்கள் அவசியம் என்றார்.

நகராட்சிப் பள்ளியில் புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தின் தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் எஸ். ரெங்கராஜன் தொடக்கிவைத்த பேரணியில் மரங்கள் வளர்ப்பு, பறவைகள், வனவிலங்குகள் பாதுகாப்பு, பிளாஸ்டிக் தவிர்ப்பு குறித்து மாணவர்கள் பிரசாரம் செய்தனர். பேரணியில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இதில், பள்ளியின் தலைமையாசிரியர் அ. மணவாளன், அறிவியல் இயக்க மாவட்டச் செயலர் எம். வீரமுத்து, பள்ளி ஆசிரியர்கள் ஆஷாக்கனி, வியாஷ், ராஜா, மலையப்பன், சிவராஜா, முத்துலட்சுமி ஆகியோர் பங்கேற்றனர்.

நன்றி: தினமணி நாளிதழ்

Leave a Reply

Top