You are here
Home > இயக்கச் செய்திகள் > தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தல்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தல்

கம்பம்:’அரசு பள்ளிகளில் படித்து பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாநில மற்றும் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களின் உயர் கல்வி செலவை அரசு ஏற்க வேண்டும்,’ என, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அதன் மாநில செயலாளர் தே.சுந்தர் கூறியிருப்பதாவது : பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு முடிவில் அரசு பள்ளிகள் பல சாதனைகளை படைத்துள்ளது. மாநிலம் முழுவதும் 250 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன. அரசு பள்ளிகளில் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த சரண்யா என்ற மாணவி 1179 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார். இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் பெற்ற கோவை சத்யா (1179 மதிப்பெண்), காஞ்சிபுரம் அனு (1173 மதிப்பெண்)போன்றவர்கள் மிகவும் ஏழ்மை குடும்பங்களை சேர்ந்தவர்கள். இதேபோன்று மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களும் பின்தங்கிய குடும்பங்களை சேர்ந்தவர்களாக உள்ளனர்.

இவர்களின் உயர்கல்வி கனவாக உள்ளது. எனவே மாநில மற்றும் மாவட்ட அளவில் அரசு பள்ளிகளில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களின் உயர்கல்வி செலவு முழுவதையும் அரசே ஏற்க வேண்டும். அவ்வாறு ஏற்கும் பட்சத்தில் அரசு பள்ளி மாணவர்கள் மாணவிகள் போட்டி போட்டு படிக்கத் துவங்குவார்கள். தனியார் பள்ளிகளுக்கு இணையான கல்வியை அரசு பள்ளிகளும் வழங்குகின்றன என்ற எண்ணம் ஏற்பட்டு, பள்ளிகளில் சேர்க்கை சதவீதமும் அதிகரிக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நன்றி: தினமலர் நாளிதழ்

Leave a Reply

Top