You are here
Home > இயக்கச் செய்திகள் > முதல் 3 இடங்களை பிடிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களின் உயர்கல்விச் செலவை அரசே ஏற்க வேண்டும்

முதல் 3 இடங்களை பிடிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களின் உயர்கல்விச் செலவை அரசே ஏற்க வேண்டும்

சென்னை,மே.28

12 ம் வகுப்பு  பொதுத்தேர்வில் மாநில,  மாவட்ட அளவுகளில் முதல் 3 இடங்களைப் பிடித்த அரசுப்பள்ளிக் குழந்தைகளின் உயர்கல்விச் செலவுகளை அரசே ஏற்க வேண்டும் என அறிவியல் இயக்கும் வலியுறுத்தி உள்ளது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத் தலைவர் மோகனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 12 ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில,  மாவட்ட அளவுகளில் முதல் 3 இடங்களைப் பிடித்த அரசுப்பள்ளிக் குழந்தைகளின் உயர்கல்விச் செலவுகளை அரசே ஏற்க வேண்டும்.  தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அறிவொளி இயக்கம், செயல்வழிக்கற்றல், கல்வி உரிமைச் சட்டம், தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு என தமிழகக் கல்விச் சூழலில் பங்களிப்பைச் செய்து வருகின்றது.  மேலும் அரசுப்பள்ளிகளைப் பாதுகாத்திடவும் பலப்படுத்திடவும் தொடர் இயக்கங்களை நடத்தி வருகின்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கல்வி உபகுழு   முகாமில் தமிழகக் கல்விச் சூழல் குறித்தும் அரசுப்பள்ளிகளைப் பாதுகாப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதன் அடிப்படையில், இந்த ஆண்டு 12 ம் வகுப்பு பொதுத் தேர்வில்  சுமார் 250 அரசுப்பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன..  பல அரசுப் பள்ளிகள் தனியார் பள்ளிகளுக்கு நிகரான சாதனைகளைப் படைத்துள்ளன.   அரசுப்பள்ளிகளில், மாநில அளவில் முதல் இடம் பெற்ற காஞ்சிபுரம் ஏகனாம்பேட்டை அரசுப் பள்ளி மாணவி சரண்யாவிற்கு (1179 மதிப்பெண்கள் ) தந்தை இல்லை. தாயார் ஒரு தனியார் நிறுவனத்தில் கூலித் தொழிலாளியாக இருக்கிறார். 2 வது, 3 வது இடம் பெற்ற கோயம்புத்தூர் சத்யா ( 1178 மதிப்பெண்கள் ) காஞ்சிபுரம் அனு ( 1177 மதிப்பெண்கள் ) ஆகியோரும் மிகவும் பின் தங்கிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.  மாவட்ட அளவில் அரசுப்பள்ளிகளில் முதல் 3 இடங்களைப் பெற்ற குழந்தைகளும் இதேபோன்று மிகவும் பின் தங்கிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.    தேனி மாவட்டத்தில் அரசுப்பள்ளிகளில் முதலிடம் பெற்ற தேவாரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி புவனேஷ்வரி ( 1137 மதிப்பெண்கள் ) ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். 2வது இடம் பெற்றவர் ஆண்டிபட்டி அருகே உள்ள ஒக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் எஸ். மணிவண்ணன் ( 1127 மதிப்பெண்கள் ). இவருக்குத் தந்தை இல்லை. தாயார் ஒரு கூலித் தொழிலாளி. பள்ளியின் ஆசிரியர்களே அந்த மாணவனுக்கு உதவிகள் செய்து படிக்கவைத்துள்ளனர். 3 வது இடம் பெற்ற இதே பள்ளியைச் சேர்ந்த மாணவி பவித்ரா ( 1123 மதிப்பெண்கள்) ஒரு கல்லுடைக்கும் தொழிலாளியின் மகள்.  மாநிலம் முழுவதும் அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின்   குடும்பச் சூழல் பெரும்பாலும் இதுபோன்றே இருக்கிறது.இவர்களது உயர்கல்வி வெறும் கனவாக மாறிவிடாமல் இருக்க அரசு அவர்களுக்கு துணைநிற்க வேண்டும். அரசுப் பள்ளிகளில் மாநில , மாவட்ட அளவுகளில் முதல் 3  இடங்களைப் பிடித்த குழந்தைகளின் உயர்கல்விச் செலவு முழுவதையும் அரசே ஏற்றுக்கொண்டால் அவர்களது எதிர்காலம் நல்லமுறையில் அமையும். மேலும் அரசுப் பள்ளிக்குழந்தைகளுக்கு இப்படியோரு ஊக்கம் கிடைக்கும் பட்சத்தில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாணவர்கள் போட்டி போட்டு படிக்கும் நிலை உருவாகும்.அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும் தேர்ச்சி விகிதமும் அதிகரிக்கும்.  12 ம் வகுப்பு  பொதுத்தேர்வில் மாநில , மாவட்ட அளவுகளில் முதல் 3 இடங்களைப் பெற்ற அரசுப்பள்ளிக் குழந்தைகளின் உயர்கல்விச் செலவுகளை அரசே ஏற்கும் என்ற அறிவிப்பை வெளியிட வேண்டும் என அதில் கூறியுள்ளார்.

நன்றி: தின இதழ்

Leave a Reply

Top