You are here
Home > அறிவிப்புகள் > +2 பொதுத்தேர்வில் மாநில / மாவட்ட அளவுகளில் முதல் 3 இடங்களைப் பிடித்த அரசுப்பள்ளிக் குழந்தைகளின் உயர்கல்விச் செலவுகளை அரசே ஏற்க வேண்டும்: முதல்வருக்கு கோரிக்கை

+2 பொதுத்தேர்வில் மாநில / மாவட்ட அளவுகளில் முதல் 3 இடங்களைப் பிடித்த அரசுப்பள்ளிக் குழந்தைகளின் உயர்கல்விச் செலவுகளை அரசே ஏற்க வேண்டும்: முதல்வருக்கு கோரிக்கை

தமிழக முதல்வருக்கு.. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் அனுப்பியுள்ள கடிதம்:

வணக்கம்.. 32 ஆண்டுகாலச் சரித்திர திருப்புமுனையாக மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்று இருக்கும் மாண்புமிகு.முதல்வர் அவர்களுக்கும் மதிப்பிற்குரிய அமைச்சர் பெருமக்களுக்கும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வாழ்த்துகள்..

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அறிவொளி இயக்கம், செயல்வழிக்கற்றல், கல்வி உரிமைச் சட்டம், தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு என தமிழகக் கல்விச் சூழலில் மிகச்சிறந்த பங்களிப்பைச் செய்து வருகின்றது. மேலும் அரசுப்பள்ளிகளைப் பாதுகாத்திடவும் பலப்படுத்திடவும் தொடர் இயக்கங்களை நடத்தி வருகின்றது.. மே. 21,22 தேதிகளில் கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கல்வி உபகுழு சார்பில் நடைபெற்ற 2 நாள் முகாமில் தமிழகக் கல்விச் சூழல் குறித்தும் அரசுப்பள்ளிகளைப் பாதுகாப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. அந்த அடிப்படையில் பின்வரும் கோரிக்கையினைத் தங்களது கவனத்திற்கு கொண்டுவருகிறோம்..

இந்த ஆண்டு +2 பொதுத் தேர்வில் சுமார் 250 அரசுப்பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன.. பல அரசுப் பள்ளிகள் தனியார் பள்ளிகளுக்கு நிகரான சாதனைகளைப் படைத்துள்ளன.. ஆனாலும் சாதனை படைத்த பல மாணவர்களின் வாழ்க்கைச் சூழல் பெரும்பாலும் கண்ணீர்க்கதைகளாகவே உள்ளன.. அரசுப்பள்ளிகளில், மாநில அளவில் முதல் இடம் பெற்ற காஞ்சிபுரம் ஏகனாம்பேட்டை அரசுப் பள்ளி மாணவி சரண்யாவிற்கு (1179 மதிப்பெண்கள் ) தந்தை இல்லை.. தாயார் ஒரு தனியார் நிறுவனத்தில் கூலித் தொழிலாளியாக இருக்கிறார்.. இரண்டாவது, மூன்றாவது இடம்பெற்ற கோவை சத்யா ( 1178 மதிப்பெண்கள் ) காஞ்சிபுரம் அனு ( 1177 மதிப்பெண்கள் ) ஆகியோரும் மிகவும் பின் தங்கிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களே..

மாவட்ட அளவில் அரசுப்பள்ளிகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற குழந்தைகளும் இதேபோன்று மிகவும் பின் தங்கிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களே.. உதாரணத்திற்கு தேனி மாவட்டத்தில் அரசுப்பள்ளிகளில் முதலிடம் பெற்ற தேவாரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி புவனேஷ்வரி ( 1137 மதிப்பெண்கள் ) ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.. இரண்டாவது இடம் பெற்றவர் ஆண்டிபட்டி அருகே உள்ள ஒக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் எஸ். மணிவண்ணன் ( 1127 மதிப்பெண்கள் ). இவருக்குத் தந்தை இல்லை.. தாயார் ஒரு கூலித் தொழிலாளி.. பள்ளியின் ஆசிரியர்களே அந்த மாணவனுக்கு உதவிகள் செய்து படிக்கவைத்துள்ளனர். மூன்றாவது இடம் பெற்ற இதே பள்ளியைச் சேர்ந்த மாணவி பவித்ரா ( 1123 மதிப்பெண்கள்) ஒரு கல்லுடைக்கும் தொழிலாளியின் மகள்..

மாநிலம் முழுவதும் அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவியரின் குடும்பச் சூழல் பெரும்பாலும் இதுபோன்றே இருக்கிறது.. இவர்களது உயர்கல்வி வெறும் கனவாக மாறிவிடாமல் இருக்க அரசு அவர்களுக்கு துணைநிற்க வேண்டும்.. அரசுப் பள்ளிகளில் மாநில / மாவட்ட அளவுகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த குழந்தைகளின் உயர்கல்விச் செலவு முழுவதையும் அரசே ஏற்றுக்கொண்டால் அவர்களது எதிர்காலம் பிரகாசமாக அமையும்.. மேலும் அரசுப் பள்ளிக்குழந்தைகளுக்கு இப்படியோரு ஊக்கம் கிடைக்கும் பட்சத்தில் அனைத்து அரசுப்பள்ளிகளிலும் மாணவர்கள் போட்டி போட்டு படிக்கும் நிலை உருவாகும்.. தனியார் பள்ளிகளை விடச் சிறந்த மதிப்பெண்களை அரசுப்பள்ளி குழந்தைகள் பெறுவார்கள்.. அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும் தேர்ச்சி விகிதமும் அதிகரிக்கும்..

எனவே புதிதாகப் பதவியேற்றிருக்கும் தங்களது தலைமையிலான அரசு +2 பொதுத்தேர்வில் மாநில / மாவட்ட அளவுகளில் முதல் 3 இடங்களைப் பெற்ற அரசுப்பள்ளிக் குழந்தைகளின் உயர்கல்விச் செலவுகளை அரசே ஏற்கும் என்ற மகிழ்ச்சியான, முன்னுதாரணமான ஓர் அறிவிப்பை வெளியிட வேண்டும் என தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

அ.அமலராஜன்                                                                                        தேனி சுந்தர்
பொதுச்செயலாளர்                                                மாநில கல்வி ஒருங்கிணைப்பாளர்
9488054690                                                                                          9047140584

Leave a Reply

Top