You are here
Home > இயக்கச் செய்திகள் > கல்வித் தர மேம்பாட்டு திட்டங்கள்: வேட்பாளர்களுக்கு நூதன கோரிக்கை

கல்வித் தர மேம்பாட்டு திட்டங்கள்: வேட்பாளர்களுக்கு நூதன கோரிக்கை

திருநெல்வேலி: தமிழகத்தில் கல்வித் தர மேம்பாட்டுக்கு செய்ய வேண்டிய திட்டங்கள் குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் வேட்பாளர்களுக்கு துண்டுப்பிரசுரம் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் துண்டுப்பிரசுரத்தில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் அழிவின் விளிம்பில் உள்ள அரசுப் பள்ளிகளைப் பாதுகாத்து முற்றிலும் அரசின் செலவிலும், பொறுப்பிலுமான பொதுப்பள்ளி முறையையும், உண்மையான சமச்சீர் கல்வி முறையையும் ஏற்படுத்த வேண்டும். அரசுப் பள்ளிகளில் தாய்மொழி வழிக்கல்வி பயில்வோருக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும். குழந்தைகளின் எண்ணிக்கையைக் கணக்கில் கொள்ளாமல் தனித்தனி வகுப்பறைகள், வகுப்பிற்கு ஓர் ஆசிரியர் என்ற நிலையை உருவாக்க வேண்டும்.

பள்ளிகளில் குழந்தைகளுக்கு எளிய சத்தான காலை உணவு மற்றும் சிற்றுண்டி வழங்க வேண்டும். குழந்தைகளிடம் அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் விதமாக மாவட்டந்தோறும் கோளரங்கங்கள், அறிவியல் பூங்காக்கள் அமைக்க வேண்டும். கல்வி உரிமைச் சட்டத்தின் பல்வேறு ஆரோக்கியமான கூறுகளை முனைப்பாகச் செயல்படுத்தும் வகையில் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுமம் வலுப்படுத்தப்பட வேண்டும். அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் துப்புரவுப் பணியாளர்களுக்கான நிரந்தரப் பணியிடங்களை உருவாக்க வேண்டும்.

வெறும் மதிப்பெண்கள், எழுத்துத் தேர்வுகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு குழந்தைகளை மதிப்பிடுகிற நிலையை மாற்ற வேண்டும். அனைத்து பள்ளிகளுக்கும் அரசே நலத்திட்டப் பொருள்களை நேரடியாக விநியோகிக்க வேண்டும். நவீன அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு ஏற்ப அன்னைத் தமிழை அறிவியல் தமிழாக மாற்ற அறிவியல் தமிழ் ஆய்வகங்கள், மொழி ஆய்வுக்கூடங்கள் உருவாக்க வேண்டும்.

 மத்திய அரசின் அரசு-தனியார் கூட்டு மாதிரிப் பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது. ஏற்கெனவே அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வரும் பகுதிகளில் புதிதாக தனியார் பள்ளிகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது. தமிழகத்துக்கான ஒரே கல்வி வாரியத்தை அமைக்க வேண்டும். கல்வியைப் பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என துண்டுப்பிரசுரத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நன்றி: தினமணி நாளிதழ்

Leave a Reply

Top