You are here
Home > இயக்கச் செய்திகள் > வானிலை முன்னறிவிப்புக்கு ஏற்றாற்போல் வேளாண் பணிகளை மேற்கொள்ள வேண்டும்

வானிலை முன்னறிவிப்புக்கு ஏற்றாற்போல் வேளாண் பணிகளை மேற்கொள்ள வேண்டும்

புதுக்கோட்டை, : புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் வானிலை முன்னறிவிப்பை அறிந்து அதற்கு ஏற்றாற்போல் வேளாண் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என புதுக்கோட்டையில் நடைபெற்ற விழிப்புணர்வு பயிற்சி முகாமில் ஆலோசனை தெரிவிக்கப்பட்டது. முகாமில் திரளானோர் பங்கேற்று பயன்பெற்றனர். இந்திய வானிலை ஆராய்ச்சி மையம், எம்எஸ்சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் சார்பில் வானிலை சார்ந்த வேளாண்மை குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் புதுக்கோட்டையில் நடத்தப்பட்டது. தமிழ்நாடு அறிவியல் இயக்க கூட்ட அறையில் நடைபெற்ற இம்முகாமுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயற்குழு உறுப்பினர் பிரபாகரன் தலைமை வகித்தார்.

இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய உதவிப் பேராசிரியர் ரமேஷ் பேசியதாவது:

வேளாண்மையும் அதனைச் சார்ந்த தொழில்களும் பருவகாலங்களில் பொழியும் மழை மற்றும் தட்பவெப்ப நிலையை பெரிதும் சார்ந்துள்ளன. வானிலை முன்னறிவிப்பின் மூலம் பருவம் துவங்கும்போது விதைப்புக்குத் தேவையான மழை முதல் பயிர் வளரும் தருணத்தில் பயிருக்கு தேவைப்படும் வெப்பநிலை, சூரிய ஒளி, காற்றின் ஈரப்பதம், காற்றின் வேகம், மண்ணின் ஈரப்பதம் மற்றும் நீர் ஆவியாகுதல் ஆகியவற்றை முன்கூட்டியே தெரிவிப்பதால் அதற்கு தகுந்தாற்போல் இழப்புகளை தவிர்க்க முடியும்.

இதன் மூலம் செலவு குறைந்து அதிக வருவாய் பெற முடியும். மத்திய கால வானிலை முன்னறிவிப்பு அடுத்த 5 நாட்களுக்கு வானிலையில் ஏற்படும் மாற்றத்தை முன்கூட்டியே கணிக்கப்படுகிறது. இந்த வானிலை அறிக்கையில் வானிலைக்கேற்ற பயிர் மேம்பாடு, காய்கறி மற்றும் பழமரம் மேம்பாடு, கால்நடை மேம்பாடு, கோழி வளர்ப்பு, நீர் நிலை மேம்பாடு, அறுவடைக்குப் பிறகு செய்யவேண்டிய தொழில்நுட்ப மேம்பாடு, பூச்சி மற்றும் நோய் மேலாண்மை பற்றிய குறிப்புகள் பரிந்துரையாக கொடுக்கப்படுகிறது.

எனவே, விவசாயிகள் வானிலை முன்னறிவிப்பை அறிந்து அதற்கு ஏற்றாற்போல் வேளாண் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார். இதனைத் தொடர்ந்து, எம்எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன முதுநிலை அறிவியலாளர் தேவராஜ் பேசுகையில் பயிற்சி முகாமின் நோக்கத்தை எடுத்துரைத்தார். முகாமில் எம்எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், ஆராய்ச்சியாளர் ஆனந்த் மற்றும் விவசாயிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.முன்னதாக, எம்எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன உதவித் திட்ட அலுவலர் முகமது பிலால் வரவேற்றார். முடிவில் தொழில்நுட்ப அலுவலர் சந்திரமோகன் நன்றி கூறினார்.

நன்றி: தினகரன் நாளிதழ்

Leave a Reply

Top