You are here
Home > இயக்கச் செய்திகள் > ஷேல் எரிவாயு குறித்து ஓஎன்ஜிசி முரணாக கருத்து வெளியிடுவதாகக் குற்றச்சாட்டு

ஷேல் எரிவாயு குறித்து ஓஎன்ஜிசி முரணாக கருத்து வெளியிடுவதாகக் குற்றச்சாட்டு

காவிரி டெல்டா மாவட்டங்களில் பூமிக்கு அடியிலிருந்து ஷேல் எரிவாயு எடுப்பது குறித்து முன்னுக்குப் பின் முரணாக ஓஎன்ஜிசி நிறுவனம் கருத்து தெரிவித்து வருவதாக தமிழ்நாடு அறிவியல் இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது.

இதுகுறித்து இயக்கத்தின் நிர்வாகிகள் பி. ரமேஷ், வி. சேதுராமன், யூ.எஸ். பொன்முடி ஆகியோர் திங்கள்கிழமை கூட்டாக வெளியிட்ட அறிக்கை: காவிரி டெல்டா பகுதியில் பூமிக்கடியிலிருந்து ஷேல் எரிவாயு எடுப்பது குறித்து ஓஎன்ஜிசி நிறுவனத்தின் ஆய்வு முயற்சி பற்றிய தகவல்களை கடந்த மார்ச் மாதம் பொதுமக்களின் கவனத்துக்கு கொண்டு வந்தது. இதைத் தொடர்ந்து, இது தவறான தகவல் என மறுத்து “பொது அறிவிப்பு’ பத்திரிகைகளில் ஓஎன்ஜிசி நிறுவனம் விளக்க அறிக்கையை வெளியிட்டிருந்தது. கடந்த 7 ஆம் தேதி சென்னை பசுமை தீர்ப்பாயத்தில் ஷேல் எரிவாயு தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஓஎன்ஜிசி நிறுவனம் தன்னுடைய வாதத்தின்போது, வாயு எடுக்க அனுமதி பெற்றுள்ளதையும், மார்ச் 2017-க்குள் காவிரி டெல்டா மாவட்டத்தில் ஏதாவது ஒரு பகுதியில் ஆய்வு பணி மேற்கொண்டு கிணறு அமைக்க வேண்டிய கட்டாயத்தில்  இருப்பதாகவும் ஷேல் எரிவாயு எடுக்க குறைந்த அளவு நீர் (ஒரு ஏக்கர் நெல் சாகுபடிக்குத் தேவையான தண்ணீர்) மட்டுமே பயன்படுத்தப்படும் எனக் கூறியுள்ளது. மேலும், இதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கவில்லை என்றும் அனுமதி அளிக்கும் வரை பணியை தொடங்க மாட்டோம் என ஓஎன்ஜிசி நிறுவனம் உறுதி அளித்துள்ளது.

ஓஎன்ஜிசி வெளியிட்டுள்ள பொது அறிவிப்பு விளம்பரத்தில் 7 ஆவது பொருளாக நிலக்கரி படுகை மீத்தேனையோ அல்லது ஷேல் எரிவாயுவையோ ஓஎன்ஜிசி எடுப்பதில்லை என்று தெரிவித்திருக்கும் சூழலில், ஒரு எண்ணெய் கிணறுக்கு ரூ. 45 கோடி என்ற அடிப்படையில் காவிரி டெல்டா பகுதியில் 5 ஆய்வு கிணறுகள் அமைப்பதற்கு ரூ. 225 கோடி செலவு செய்வது எதற்காக என்பதை பொதுமக்களுக்கு தெளிவுப்படுத்திட வேண்டுமென தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்துகிறது.

நன்றி:தினமணி நாளிதழ்

தொடர்புடையவை: அறிவியல் இயக்கம் சேதுராமன் – புதிய தலைமுறை நேர்காணல்

Leave a Reply

Top