You are here
Home > இயக்கச் செய்திகள் > இன்று அனைத்து நாடுகளிலும் சம பகல், இரவு நாள்: ஆண்டுக்கு இரு முறை மட்டும் வரும் வானியல் நிகழ்வு

இன்று அனைத்து நாடுகளிலும் சம பகல், இரவு நாள்: ஆண்டுக்கு இரு முறை மட்டும் வரும் வானியல் நிகழ்வு

ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே வரும் சம இரவு மற்றும் பகல் நாள் இன்று திங்கள்கிழமை (மார்ச்21) வருகிறது என்றார் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலர் என்.சுரேந்தர்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்தது: சம இரவு நாள் என்பது சூரியன் நிலநடுக்கோட்டினைக் கடந்து செல்லும் நாளாகும். ஆண்டுக்கு இரண்டு முறை சூரியன் இவ்வாறு நிலநடுக்கோட்டினைக் கடப்பது நிகழும். இந் நாட்களில் இரவும் பகலும் ஒரே அளவாக (ஏறத்தாழ 12 மணி நேரம்) இருக்கும். லத்தீனில் ஈக்வீநாக்சு என வழங்கப்படுகிறது. ஈக்வீ என்பது சமம் என்றும் நாக்சு என்பது இரவு என்றும் பொருள்படும். சம இரவு நாட்கள் என்று நிகழும் என்பது நிலநடுக்கோட்டிலிருந்து எத்தனை தொலைவு தள்ளி அளக்கப்படுகிறது என்பதைப் பொருத்தது. சாதாரணமாக மார்ச் 21 மற்றும் செப்டம்பர் 22 ஆம் தேதி அன்றும் இவை நிகழும். ஆண்டுக்கு இரண்டு முறை மட்டும் இரவும் பகலும் கிட்டத்தட்ட சமமான அளவுக்கு இருக்கும்.

இந்த இரண்டு நாட்களில் மட்டுமே உலகிலுள்ள அனைத்து நாடுகளிலும் இரவும் பகலும் ஒரே அளவுக்கு இருக்கும். செப்டம்பர் 22 ஆம் தேதிக்கு பிறகு இந்தியாவில் பகல் நேரம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துகொண்டே வரும்.  பூமிப் பந்து சூரியனுக்கு எதிர்பக்கமாக அதிகமாகத் திரும்பியுள்ள நிலை ஆங்கிலத்தில் குளிர்காலத் திருப்புநிலை எனப்படுகிறது. அந்த நாள் டிசம்பர் 21 மற்றும் 22. அன்றைக்குப் பூமிப் பந்தின் தெற்கு மூலையில் சூரியன் இருக்கும், அதனால் சூரிய ஒளி நீண்ட நேரம் தெரியாததால், ஆண்டிலேயே குறுகிய பகலாக இருக்கும். அதற்குப் பிறகு பகல் நேரம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கத் தொடங்கும். பிறகு மீண்டும் மார்ச் 20 ஆம் தேதி பகலும், இரவும் சமமாக இருக்கும்.

பூமி சூரியனின் பக்கமாக அதிகமாகத் திரும்பியுள்ள நிலை ஆங்கிலத்தில் கோடை திருப்புநிலை எனப்படுகிறது. அது ஜூன் 20 மற்றும் 21ஆம் தேதி வருகிறது. அன்றைக்குப் பூமிப் பந்தின் வடக்கு மூலையில் சூரியன் இருப்பதால், நீண்ட நேரம் சூரிய ஒளி தெரியும் அன்றைய தினத்தின் பகல் ஆண்டிலேயே நீண்டதாக இருக்கும். இப்போது தினசரி கவனித்துக் கொண்டே வந்தால், செப்டம்பர் 22 மற்றும் 23ஆம் தேதிக்குப் பிறகு பகல் குறுகிக்கொண்டே போவதைக் கவனிக்கலாம். அதுபோல அடுத்தடுத்து வரும் வானியல் நிகழ்வுகளையும் ஆண்டுக்கு ஒருமுறை தான் பார்க்க முடியும் என்றார்.

நன்றி: தினமணி நாளிதழ்

Leave a Reply

Top