You are here
Home > Article > உடலியல் கல்வி: பரவலாகும் மூடநம்பிக்கைகளும் பேசப்படாத உண்மைகளும்

உடலியல் கல்வி: பரவலாகும் மூடநம்பிக்கைகளும் பேசப்படாத உண்மைகளும்

ஒரு காலத்தில் பகிரங்கமாகப் பார்ப்பதோ, படிப்பதோ தவறு என்று கருதப்பட்ட நிலை மாறி இன்றைக்கு இணையதளங்கள், பத்திரிகைகள், கேபிள் டிவி, குறுந்தகடுகள், புதினங்கள், கைபேசிகள் என்று பல்வேறு விதமான ஊடகங்களின் மூலம் பாலியல் தகவல்கள் கிடைத்துவருகின்றன. இது குறித்து 40 லட்சத்துக்கும் மேலான இணையதளங்களும், 37 கோடிக்கும் மேலான இணையப் பக்கங்களும் இருக்கின்றன, ஒரு நாளைக்கு 25 லட்சம் மின் அஞ்சல்கள் இதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன என்று தெரிகிறது. உலகில் மொத்தமுள்ள இணையதளங்களில் இவை 12 சதவீதம் இடத்தைப் பிடித்திருக்கின்றன. ஒரு நாளைக்கு 6.8 கோடிப் பேர் இந்தச் சேவைகளைப் பயன்படுத்துகிறார்கள்.

இப்படிப்பட்ட இணையதளங்கள் ஓர் ஆண்டுக்கு ரூ. 2,85,000 கோடி வருமானம் ஈட்டக்கூடிய அளவுக்கு வளர்ந்திருக்கின்றன. இப்படிப்பட்ட இணையதளங்களின் மூலம் அமெரிக்காவுக்கு மட்டும் ஆண்டுக்கு ரூ. 60,000 கோடி வருமானம் கிடைப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.

இப்படிப் பாலியல் சார்ந்து இயங்கும் இணையதளங்கள் குறித்த செய்திகள் அதிர்ச்சியளித்தாலும், இத்தகைய சூழலிலிருந்து வளர்இளம் பருவத்தினரை மீட்பதும், அவர்களை முறைப்படுத்துவதும் சமூகத்தின் கடமை.

பேராபத்தை எதிர்நோக்கும் இந்தியா

இந்தியாவில் மக்கள்தொகை மட்டும் அதிகமல்ல. பதின் வயது கர்ப்பம் மற்றும் எச்.ஐ.வி. / எயிட்ஸ் தொற்றும், குழந்தைகள் மற்றும் பெரியவர் மத்தியில் பாலியல் பலாத்காரங்களும் அதிக விகிதங்களில் இருக்கின்றன என்பதுதான் அதிர்ச்சியூட்டும் தகவல்.

இந்தியாவில் 1000-க்கு 62 பேர் பதின் பருவத்தில் கர்ப்பமாகிறார்கள். இது அமெரிக்காவைவிட இரண்டு மடங்கு, இங்கிலாந்தைவிட மூன்று மடங்கு, ஐரோப்பாவைவிட பத்து மடங்கு, தென் கிழக்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளைவிட அதிகம்.

இந்தியாவில் 15 வயதுக்கு முன்பே 18 சதவீதப் பெண்களுக்குத் திருமணமாகிவிடுகிறது. 47 சதவீதம் பெண்களுக்கு 18 வயதுக்குள் திருமணமாகிறது. இதற்கு உடல் இயக்கங்களைப் பற்றிய அறிவு இல்லாததும், பழைய நடைமுறை களைப் பின்பற்றுவதும், பாலியல் நலத்தின் அடிப்படையிலான தேர்வு, கருத்தடுப்பு முறைகளைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாததுமே காரணம்.

இவற்றால் ஏற்படும் ஒரு பாதிப்பைப் பார்த்தால், பிரச்சினையை எளிதாகப் புரிந்துகொள்ளலாம். நாட்டில் 24.7 லட்சம் பேர் எச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். உரிய வழிகாட்டுதல்களும் விழிப்புணர்வுக் கல்வியும் இருந்திருந்தால், இவர்களில் பெரும்பாலோரைப் பாதிப்பிலிருந்து தடுத்திருக்கலாம்.

உடலியல் கல்வியின் அவசியம்

உடலியல் கல்வி, பாலியல் கல்வி, பாலியல் நலக் கல்வி, உறவுமுறைக் கல்வி போன்ற அனைத்தும் ஒரே வகையானவைதான். பாலியல் சார்ந்த தகவல்களைப் பெறவும், பாலியல் சம்பந்தப்பட்ட நம்பிக்கைகள், அணுகுமுறைகள், பாலியல் அடையாளம், உறவுகள் மற்றும் நெருக்கம் ஆகியவற்றைப் பற்றி புரிய வைப்பதே இந்தக் கல்வியின் அடிப்படை நோக்கம்.

இளைஞர்கள் அவரவர் விரும்பும் நடத்தைகளுக்கேற்பத் தன்னம்பிக்கையோடும் தகுதியோடும் செயல்பட உடலியல் கல்வி அல்லது உறவு முறைக் கல்வி திறன்களை வளர்க்கிறது. பாலியல் சார்ந்த துஷ்பிரயோகம், சுரண்டல், திட்டமிடப்படாத கருவுறுதல், பால்வினை நோய்கள் மற்றும் எச்.ஐ.வி./ எயிட்ஸ் நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு இது இளைஞர்களுக்கு உதவுகிறது. அதற்கெல்லாம் மேலாக அவர்கள் சந்திக்கும் பாலியல் பிரச்சினைகள், தேவைகளை நிறைவு செய்யவும் இது உதவும் என்பதில் சந்தேகமில்லை.

ஏன் தேவை?

உடலியல் கல்வி என்பது ‘தாம்பத்திய வாழ்வில் ஈடுபடுவது எப்படி?’ என்பதைச் சொல்லிக்கொடுப்பதல்ல. மாறாக உடல்ரீதியான, சமூகரீதியான, உயிரியல்ரீதியான விவரங்களைத் தெரிந்துகொள்வதன்மூலம் வருங்காலத்தில் அவர்களுடைய பாலியல் நலனைப் பேணிப் பாதுகாக்க உதவுகிறது.

ஆண், பெண் இரு பாலரின் உடலமைப்பைப் புரிந்துகொள்வதற்கும், குழந்தை பிறப்பைப் பற்றிய அறிவை வளர்த்துக்கொள்வதற்கும் உதவுகிறது. ஒருவர் தன்னுடைய பாலினப் பொறுப்புகளை உணரவும் பாலின அறிவை வளர்த்துக்கொள்ளவும், ஒவ்வொரு பாலினமும் உடல் ரீதியாக எப்படி மாறுபட்டிருக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ளவும் இது உதவும்.

வளர்இளம் பருவத்தினர் ஒவ்வொருவரும் மன ரீதியாக எப்படி மாறுபட்டிருக்கிறார்கள் என்பதையும் சொல்லித்தர வேண்டிய அவசியம் இருக்கிறது. அதோடு வளரும்போது அவர்களுக்குள் ஏற்படும் உறவு முறைகள் பற்றியும் சொல்லித்தர வேண்டியது அவசியம்.

வளர்இளம் பருவத்தினர் இயற்கையாகவே பாலியல் விவரங்களைத் தெரிந்துகொள்ள ஆர்வத்துடன் இருப்பார்கள். அவர்களுக்கு அறிவியல் ரீதியாகச் சரியான தகவல்களைக் கற்றுத்தராவிட்டால், நண்பர்கள், படங்கள், இணையதளங்கள் வழியாக அரைவேக்காட்டுத்தனமான தவறான கருத்துகளே அவர்களை ஆக்கிரமிக்கும். அது எவ்வளவு ஆபத்தானது என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டுமா?

கட்டுரையாளர்: சி.ராமலிங்கம்

அறிவியல் எழுத்தாளர்
தொடர்புக்கு: contactcra@yahoo.com

நன்றி: தமிழ் இந்து நாளிதழ்

Leave a Reply

Top