You are here
Home > இயக்கச் செய்திகள் > அறிவியல் நிகழ்ச்சியில் ஏராளமான படைப்புகளை வைத்த மாணவர்கள்

அறிவியல் நிகழ்ச்சியில் ஏராளமான படைப்புகளை வைத்த மாணவர்கள்

ஊட்டி: ஊட்டியில் நடந்த அறிவியல் தின நிகழ்ச்சியில், அறிவியல் சார்ந்த படைப்புகள் ஏராளமாய் இடம் பெற்றிருந்தன.

ஊட்டி முத்தோரை ரேடியோ வானியல் ஆய்வு மையத்தில், நேற்று,உலக அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது. மைய தலைவர் டாக்டர் மனோகரன் வரவேற்றார். கலெக்டர் சங்கர் நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசுகையில், மனித வளம் தான், ஒரு நாடு வல்லரசாகும்; முழு வளர்ச்சி பெற்ற நாடாகும். விஞ்ஞானத்தில், இந்தியர்களை எக்காலத்தில் எந்த நாட்டினாலும் வெல்ல முடியாது. விஞ்ஞான உலகில், நவீனங்களை உலகிற்கு எடுத்துக் காட்டியவர்கள் இந்தியர்கள் தான், குறிப்பாக தமிழர்கள் தான்.

அணுகுண்டு சோதனை நிகழ்த்தி காட்டிய முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், மக்கள் வியக்கும் கண்டுபிடிப்புகளை உருவாக்கிய ஜி.டி.நாயுடு, செயற்கை கோள்களை ஏவிய மயில்சாமி அண்ணாதுரை என, பட்டியல் நீளும், என்றார். தொடர்ந்து, மைய இயக்குனர் பேராசிரியர் சுவர்னா கோஷ் பேசினார். மத்திய உருளைக் கிழங்கு ஆராய்ச்சி நிலையம், இந்திய மண் மற்றும் நீர் வள பாதுகாப்பு மையம்,குன்னுார் பாஸ்டியர் ஆய்வகம், குன்னுார் துணை பட்டுப்புழு இனவிருத்தி நிறுவனங்கள் சார்பில் காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

படைப்புகளில் புதுமை

ஊட்டி அரசு பாலிடெக்னிக் மாணவர்கள், தொலை துாரங்களில் வரும் பஸ்களின் வருகையை குறிப்பிட்ட தொலைவில் இருந்து முன்கூட்டியே தெரிந்து கொள்ளும் சென்சார் தொழில் நுட்பம், காது கேளாதோருக்கான பிரத்யேக காலிங் பெல், சமையல் காஸ் சிலிண்டர் கசிவை உணர்ந்து எச்சரிக்கும் உபகரணங்களை காட்சிப்படுத்தி, விளக்கமளித்தனர்.

கணக்குப் புலிகளுக்கு தீனி

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் வைக்கப்பட்டிருந்த காட்சி அரங்கில், அறிவியல், கணக்கு சார்ந்த புத்தகங்கள், காட்சி, விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. அதன் மாவட்ட செயலர் ராஜூ, ஒரு வினாடியில் பதில் சொல்லக் கூடிய கடினமான கணக்குகளை கேட்க, மாணவ, மாணவியர் அசராமல் பதில் சொல்லி அசத்தினர்.

பிக் பேங்க் என்ற பெயரில், 40 அடி நீளமுள்ள பேனரில், உலகம் தோன்றியது முதல், நவநாகரிக மனிதன் தோன்றியது வரையிலான விளக்கங்கள், பயனுள்ளதாக இருந்தன. வெலிங்டன் சின்ன வண்டிச்சோலை நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவியர், மெகா வடிவ, பரம பதம் (பாம்பு, ஏணி விளையாட்டு) பலகையில்,மரம் வளர்த்தால் மழை வளம் பெருகும், பிளாஸ்டிக்கை தவிர்த்தால் நீர் வளம் பெரும், மக்கள் தொகையை குறைத்தால் வேலை வாய்ப்பு பெருகும், நீர் நிலை ஆக்கிரமிப்பை தவிர்த்தால் பேரிடர் தவிர்க்கப்படும் என்பன போன்ற நல்ல விஷயங்களை ஏணியாகவும், புகை மாசு, விலங்குகளை வேட்டையாடுவது போன்ற பல தீய விஷயங்களை பாம்பாகவும் வடிவமைத்து, சுற்றுச்சூழல் பாடம் நடத்தினர்.

நேரலையில் விண்வெளி விந்தை

ரேடியோ வானியல் மையத் தில் மேற்கொள்ளப்படும், கதிர் வீச்சு ஆய்வு குறித்து, மாணவ, மாணவியர் தெரிந்து கொள்ளும் வகையில், கம்யூட்டர் திரையில், அவற்றின் செயல்பாடுகள் நேரலையாக காண்பிக்கப்பட்டன. அதே போன்று, காஸ்மிக் கதிர் வீச்சு தொடர்பான ஆய்வை மேற்கொண்டு வரும்,காஸ்மிக் ரே லேபாரட்டரி மூலம், காஸ்மிக் கதிர் வீச்சு உருவாகும் விதம், அவற்றின் நன்மை,தீமைகளை விளக்கும், காட்சி அரங்குகள் வைக்கபட்டிருந்தன.

காற்றில், சுழல் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்த வீடியோ, புகைப்பட காட்சியும் இடம் பெற்றிருந்தது. நிகழ்ச்சியில், ஊட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பல்வேறு பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

நன்றி:தினமலர் நாளிதழ்

Leave a Reply

Top