You are here
Home > Article > நான் எப்படிப் படிக்கிறேன்? – த.வி. வெங்கடேஸ்வரன்

நான் எப்படிப் படிக்கிறேன்? – த.வி. வெங்கடேஸ்வரன்

ஒரு விஞ்ஞானியாக இருந்துகொண்டு எப்படி இவ்வளவு எழுதுகிறீர்கள் என்று நிறைய பேர் கேட்பது உண்டு. துறையைத் தாண்டிய வாசிப்பும் பொதுநிகழ்ச்சிகளில் வலிய பங்கேற்பதும்தான் காரணம். எல்லோரும் மாதிரிதான், ஆரம்ப நாட்களில் நானும் வாசிப்பை ஒரு பொருட்டாக நினைத்ததில்லை.

அப்போது கல்லூரியில் படித்துக்கொண்டி ருந்தேன். இடதுசாரி இளைஞர் அமைப்பிலும் இருந்தேன். புகழ்பெற்ற தொழிற்சங்கத் தலைவர் பி.டி. ரணதிவே, நிகழ்ச்சி ஒன்றுக்காக சென்னை வந்திருந்தார். அவரை அழைத்துவரச் சென்ற இளைஞர்களோடு நானும் சென்றேன். அறைக்குச் சென்றதும் எங்களுடன் உரையாடத் துவங்கினார். அப்போது தமிழக முதல்வராக எம்.ஜி.ஆர். இருந்தார். ஆசிரியர்கள் போராட்டம், பஸ் ஊழியர்கள் போராட்டம், வணிகர்கள் போராட்டம் என்று பல்வேறு தரப்பு மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காலம். இது பற்றியெல்லாம் விசாரித்த ரணதிவே ஒரு கட்டத்தில் எங்களைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தார்.

அப்போது என்னிடம் கேட்டார், “தோழர்… இப்போ என்ன புத்தகம் வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள்?” நான், “தோழர், கடுமையான வேலை. எங்கே படிக்க நேரம்?” என்றேன். முகம் சுருங்கியவர், கொஞ்ச நேரம் கழித்துச் சொன்னார், “ஒரு காரியம் செய்யுங்க. வீட்டுக்குப் போனதும், ஒரு பேப்பரை எடுத்து இயக்கத்துலேர்ந்து விலகிக்கிறதா எழுதி அனுப்பிடுங்க.”

குரலில் அத்தனை கடுமை. அவர் தொடர்ந்தார். “உங்களை மாதிரி இளைஞர்கள் பெரிசா சாதிக்கணும்னு மட்டும் ஆசைப்படுறீங்க. ஒவ்வொரு நொடியும் இந்தப் பிரபஞ்சத்துல கோடிக் கணக்கான விஷயங்கள் நடந்துக்கிட்டிருக்கிறப்ப எதையும் படிக்காம, தெரிஞ்சுக்காம எதைச் சாதிக்க முடியும்?”

நான் அப்படியே உறைந்துபோனேன். “தம்பி, எனக்கு இப்ப 75 வயசாகுது. காலையில பத்திரிகைகள் வாசிப்போடத்தான் ஒரு நாளைத் தொடங்குறேன். எவ்ளோ வேலை இருந்தாலும் சரி, தூங்குறதுக்கு முன்னாடி குறைஞ்சது ஒரு மணி நேரம் எதையாவது படிச்சுட்டுத்தான் தூங்குவேன். வாசிக்க ஒண்ணும் கெடைக்கலைன்னா சரி, சலவைத்துணி ரசீதைப் படிச்சாலும் பிரயோஜனம் தான்.”

நான் அறையிலிருந்து வெளியே வந்தேன். அன்றைய இரவிலிருந்து ஒரு நாள்கூட வாசிக்காமல் தூங்கச் செல்வதில்லை. இந்தப் பழக்கம்தான் என்னுடைய துறையைத் தாண்டி, இலக்கியம், கலை, சமூகம், வரலாறுன்னு பலதரப்பட்ட விஷயங்களையும் எனக்குள் கொண்டுவந்து சேர்ந்தது. எழுதுவதற்கான உத்வேகத்தைத் தந்தது.

தேவிபிரசாத் சட்டோபாத்தியா எழுதின ‘இந்தியத் தத்துவம்’, நாஞ்சில் நாடனின் ’மிதவை’, பிரைமோ லெவி எழுதின ‘பீரியாடிக் டேபிள்’ இப்படி என்னைச் செதுக்கின எத்தனையோ புத்தகங்கள் இருக்கின்றன. இப்போது ராய் பாஸ்கர் எழுதிய ‘ரீகிளைமிங் ரியாலிட்டி’ எனும் அறிவியலின் மெய்யியல் குறித்த நூலை வாசித்துக்கொண்டிருக்கிறேன்.

( த.வி. வெங்கடேஸ்வரன், அறிவியல் எழுத்தாளர் மற்றும் மத்திய அரசின் விக்யான் பிரச்சார் மையத்தின் முதுநிலை விஞ்ஞானி)

தொகுப்பு: மு முருகேஷ்

நன்றி:தமிழ் இந்து நாளிதழ்

Leave a Reply

Top