You are here
Home > Article > அறிவியல் பரப்புவோம்..

அறிவியல் பரப்புவோம்..

ஒரு நிமிடம்… மின்சாரமோ, தொலைபேசியோ இல்லாத இந்த உலகை சற்று கற்பனை செய்து பாருங்கள். அப்பா! என மலைப்பாக இருக்கிறதா? நினைத்துப்பார்க்கவே முடியாதபடி அயர்ச்சியாக இருக்கிறதா? ஆம்! அறிவியல் இல்லா உலகம் அதிர்ச்சி தரும். ஏனென்றால் உங்கள் நாகரீகத்தின் அடிப்படை அறிவியல் தான். ஒவ்வொரு காலகட்டத்திலும் நம் வாழ்க்கையை மேம்படுத்த அறிவியல் நம்மோடு துணையாக பயணிக்கிறது. இதற்கு முக்கியக் காரணம் அறிவியல் அறிஞர்கள்.

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், அறிவியல் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதனால் தான் மாணவர்களிடம் அறிவியல் மீதான ஆர்வத்தை உருவாக்கும் விதமாக ஆண்டுதோறும் தேசிய அறிவியல் தினம் பிப். 28ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அறிவியல் என்பது, வாழ்க்கையோடு தொடர்புடையது. இதன் பயன்பாடு விஞ்ஞானிகள், படித்தவர்கள் மட்டுமின்றி, சாதாரண மக்களுக்கும் சென்றடைய வேண்டும். அப்போதுதான் அந்த கண்டுபிடிப்பு முழுமை பெறும். அறிவியலை படிப்பதோடு நின்று விடாமல் செயல் வடிவிலும் கொண்டு வர வேண்டும்.

முன்னோடி

எந்த நாகரீகத்துக்கும் முன்னோடி அறிவியல் தான். கற்காலத்திலும் கூட வாழ்க்கைச் சூழலை மேம்படுத்திக் கொள்ள அறிவியலை மனிதர்கள் பயன்படுத்தினர். கற்களை உரசி நெருப்பை உண்டாக்கினர்; கற்களை கூர்மையாக்கி ஆயுதங்களாக்கினர். கம்ப்யூட்டர் முதல் “3ஜி’ மொபைல் போன், புதிய வாகனங்கள், விவசாயத்தில் நவீனம், மரபணு மாற்றம், “டெஸ்ட் டியூப்’ குழந்தை, நவீன ராக்கெட்டுகள், செயற்கைகோள்கள் வரை ஒவ்வொரு நாளும் ஒரு கண்டுபிடிப்பு உருவாகிறது. வளரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப, கல்வி முறையிலும் புதுமையை புகுத்த வேண்டும். வெளிநாடுகளில் பணிபுரியும் விஞ்ஞானிகளை மீண்டும் இந்தியாவில் பணிபுரிய புதிய திட்டங்களை செயல்படுத்த வேண்டும். ஆராய்ச்சி படிப்புகளில் அதிக மாணவர்களை ஈடுபடுத்துவதன் மூலம் வளமான இந்தியாவை உருவாக்கலாம்.

அப்போ….. இப்போ….

இருளை விரட்டிய மின்விளக்கு; தொலைவில் இருந்தாலும் உரையாட தொலைபேசி; என்ன வேலைகளையும் செய்வதற்கும் கம்ப்யூட்டர்கள்; மரங்களின் நிழல்களில் தங்கிய மனிதனுக்கு வானளாவிய கட்டடங்கள்; எங்கு வேண்டுமானாலும் செல்ல கடலுக்கு நடுவே கூட பாலங்களை அமைத்தது; உடனுக்குடன் பறக்க விமானம்; வெள்ளத்தில் இருந்த பாதுகாக்க அணைக்கட்டுகள்; மேலே இருந்து தகவல்களை தர செயற்கைக் கோள்கள்; அறிவியல் ரீதியாக சந்ததியை கண்டுபிடிக்க மரபணு; இலை தழைகளை உடுத்திய மனிதன், தற்போது உடுத்தும் பல வண்ண ஆடை; பச்சை காய்கறிகளையும், பச்சை மாமிசங்களையும் சாப்பிட்ட மனிதன், தற்போது உண்ண பல வகை உணவு என எத்தனையோ முன்னேற்றங்களை அடைந்துள்ளான். இதற்கு காரணம் அறிவியல்.

யார் காரணம்:

தமிழக மண்ணில் பிறந்த அறிவியல் மேதை சர்.சி.வி.ராமனின் நுண்ணறிவினையும், திறமையையும், ஆராய்ச்சிகளின் சிறப்பையும் உணர்ந்து 1930ஆம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. தேசத்தலைவர்கள் மற்றும் விடுதலைப் போராட்ட தியாகிகளைக் கொண்டாடுவது போலவே அறிவியல் மேதைகளையும் போற்ற வேண்டும் என்ற அடிப்படையில் இந்திய அரசு சர்.சி.வி.ராமன் நோபல் பரிசு பெற்ற தினமான பிப்ரவரி 28ம் தேதியை 1987ம் ஆண்டு தேசிய அறிவியல் தினமாக அறிவித்தது.

இவர் 1888 நவ., 7ல் திருச்சி அருகே திருவானைக்காவல் என்ற ஊரில் பிறந்தார். இவரது பெற்றோர் சந்திரசேகர் – பார்வதி அம்மாள். பிரசிடென்சி கல்லூரியில் இளநிலை, முதுநிலை இயற்பியல் பட்டப்படிப்பை முடித்தார். கோல்கட்டா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக சேர்ந்தார். அதே நேரத்தில் “இந்தியன் அசோசியேசன் பார் கல்டிவேஷன் சயின்ஸ்’ நிறுவனத்தில் ஆராய்ச்சியிலும் ஈடுபட்டார். ஒருமுறை இவர், கப்பலில் பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பிக்கொண்டிருந்த போது, “கடல் ஏன் நீல நிறமாக இருக்கிறது’ என யோசித்தார். இதை அவர் ஆராய்ந்து 1928, பிப்., 28ல், “ராமன் விளைவை’ கண்டுபிடித்தார். “நீர் மற்றும் காற்று போன்ற தடையற்ற ஊடகத்தில் ஒளி ஊடுறுவும் போது, சிதறல் அடைந்து அதன் அலை நீளம் மாறுகிறது. அப்போது அதிகமாக சிதறல் அடையும் நீல நிறம், தண்ணீரில் தோன்றுகிறது’ என கண்டுபிடித்தார். இதற்காக 1930ம் ஆண்டு, இயற்பியலுக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.

நோபல் பரிசு வென்ற முதல் ஆசியர்

இளம் பருவத்திலேயே கணிதம் மற்றும் ஆங்கில பாடங்களில் திறமையோடு விளங்கிய சி.வி.ராமன் இளங்கலையில் தங்கபதக்கம் பெற்றுத் தேர்வானார். அவருடைய 18 வயதில் அவரது முதல் ஆய்வு அறிக்கை லண்டனில் அறிவியல் சஞ்சிகையில் பிரசுரமானது. அப்போதே அறிவியல் உலகம் அவரை கவனிக்கத் தொடங்கியது. 1917 முதல் 1933 வரை பேராசிரியர் பதவி வகித்தார் ராமன். அப்போது தான் அறிவியலில் அவர் ஆற்றிய பங்கை அங்கீகரிக்கும் வகையில் 1929ம் ஆண்டில் இந்தியாவில் செயல்பட்ட பிரிட்டிஷ் அரசாங்கம் ராமனுக்கு ‘சர்‘ பட்டம் வழங்கி கவுரவித்தது. 1933 முதல் 10ஆண்டுகள் பெங்களூர் இந்திய அறிவியல் நிறுவன இயக்குனராகப் பணியாற்றினார்.

1943ம் ஆண்டு தமது பெயரில் பெங்களூரில் ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். 1948ல் அவர் தேசியப் பேராசிரியர் ஆனார். பலப்பல விருதுகளும் பதவிகளும் அவரைத்தேடி வந்தன. 1954 ல் நாட்டின் மிக உயரிய விருதான ‘பாரத் ரத்னா‘ விருதும், 1957ல்‘சர்வதேச லெனின் விருதும்‘ அவருக்கு வழங்கப்பட்டன. உலகம் போற்றும் மேதையாக விளங்கிய சர்.சி.வி.ராமன் 1970ஆம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி தமது 82வது வயதில் காலமானார்.

ராமன் விளைவு

1921ம் ஆண்டு, லண்டனில் உலகப் பல்கலைக் கழகங்கள் இணைந்து நடத்திய சபையில், கல்கத்தா பல்கலைக் கழகத்தின் சார்பில் சர்.சி.வி.ராமன் பங்கேற்றார். அப்போது அவர் மேற்கொண்ட கடல் பயணத்தின்போது, கப்பலின் மேல் தளத்தில் அமர்ந்து கடலின் அழகை ரசித்தபடி பயணம் செய்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது மனதில், கடலுக்கு நீல நிறம் எப்படி வந்தது?

வானத்தின் நிறமா? வானம் மேகமூட்டத்துடன் கறுப்பாக இருக்கும்போதும், தொடர்ந்து அலைகள் வரும்போதும் கடல் எப்படி நீலநிறமாக உள்ளது, என்று பலப்பல கேள்விகள் உருவானது. திடீரென்று சூரிய ஒளியை நீர்த் துளிகள் பிரதிபலிப்பதால்தான் கடல் நீலநிறமாக உள்ளது என்பதை உணர்ந்தார்.

சூரிய ஒளி தண்ணீரிலும், ஐஸ் கட்டியிலும், மற்றப்பொருட்களிலும் எவ்வாறு பயணிக்கிறது என்பதை ஆராய்ந்தார். முப்பட்டகக் கண்ணாடியின் வழியே ஒளிக்கதிர்கள் செல்லும்போது பல்வேறு வண்ணங்களாகப் பிரிவதை 1928ல் கண்டுபிடித்தார்.

ஒளி அவ்வாறு பல்வேறு பொருட்களில் பயணிக்கும்போது புதிய கோடுகள் உருவாவதை அவர் கணித்துக் கூறினார். அந்த முக்கியமான கண்டுபிடிப்புக்கு அவரது பெயரே சூட்டப்பட்டது. அந்தக் கோடுகள் “ராமன் கோடுகள்” என்றும், அந்த விளைவு “ராமன் விளைவு”என்றும் இன்றும் அழைக்கப்படுகிறது. ஒளிச்சிதறல் பற்றி அறிக்கை தயாரித்து, ராயல் சொசைட்டி ஆப் லண்டன் கழகத்துக்கு அனுப்பினார். அந்த முறை நோபல் பரிசு தனக்குத்தான் கிடைக்கும் என்று தன் படைப்பின் மீது அதீத நம்பிக்கை கொண்ட அவர் நவம்பர் மாதம் நடைபெறும் விழாவிற்காக ஜுன் மாதமே டிக்கெட் எடுத்து வைத்துக்கொண்டார். அவர் நம்பிக்கை வீண் போகவில்லை. இந்தக் கண்டுபிடிப்புக்காக அவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டது. வெள்ளையர் அல்லாத ஒருவருக்கு முதல் முதலாக நோபல் பரிசு அளிக்கப்பட்டதும் அப்போதுதான்.  நோபல் பரிசு பெற்ற அவரின் கண்டுபிடிப்பான ‘ராமன் நிறத்தோற்றம்‘அறிவியல் துறையின் அடிப்படை. தேசிய அறிவியல் தினத்தில் சர்.சி.வி.ராமனை நினைவு கொள்வதோடு மட்டுமின்றி அறிவியல் சிந்தனைகளை வளர்த்து, புதிய கண்டு பிடிப்புகளை வரவேற்று, வளர்ச்சிகளைப் பாராட்டி விஞ்ஞானிகளை ஆதரிப்பதே அவருக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடன்.

சு.சேதுராமன்

மாநில செயலாளர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

sethutnsf@gmail.com

Leave a Reply

Top