You are here
Home > Article > வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்: தேசிய அறிவியல் தினம்-பிப்.28

வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்: தேசிய அறிவியல் தினம்-பிப்.28

தேசிய..அறிவியல்..தினம்..!

பிப்ரவரி 28 தேசிய அறிவியல் தினம். இந்த நாள் சர். C.V.ராமனின் அறிவியல் கண்டுபிடிப்பின் நினைவாக இந்தியா  முழுவதும் ,கல்விக் கூடங்களிலும், அறிவிலாளர்களாலும்  கொண்டாடப் படுகிறது. அவர் அப்படி என்ன செய்தார் என்கிறீர்களா? நீல நிறம், வானுக்கும், கடலுக்கும் நீல  நிறம் என்ற பாடலின் பொருள் அவர்தான் நண்பா .ஆம். அதற்கான காரணியைக் கண்டுபிடித்தவர் சர். C.V.ராமன். சூரிய ஒளி, மழைத் துளி என்ற பிரிசத்தின் வழியே..வானத்திரையில், சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை, நீலம், கருநீலம் மற்றும் வயலெட் என்னும் 7 வண்ணங்கள் கலந்த,  வானவில் என்ற அற்புத  ஓவியத்தைத் தீட்டுகிறார்.வெள்ளை சூரிய ஒளியில் கலந்துள்ள வண்ணங்கள் ஒளி ஊடுருவும் பொருள் வழியே பாயும்போது, பல வண்ணங்களாக பிரிவதை, நிறப் பிரிகை என்கிறோம்.இந்த நிறப் பிரிகை பற்றி உலகுக்கு எடுத்துரைத்தவர் சர் ஐசக்  நியூட்டன்.  ஆனால் இதே ஒளி சிலசமயம், சிலப் பொருள்கள் மூலம் ஒரே ஒரு நிறத்தை மட்டும் வெளியிடும்.இதனை ஒற்றை நிற ஒளி என்று சொல்வார்கள்.

வெள்ளையின்.. வண்ணப் ..பிரிவுகள்..!

நாம் பார்க்கும் ஒளி , 7 வண்ணங்களில் பிரிந்து, நம்மை மயக்கும்.ஆனால் ஒவ்வொன்றின் அலை நீளம் வேறாக இருக்கிறது. வானவில்லின் மேல்பக்கம் தெரியும்,சிவப்பின் அலைநீளம், 720 நானோமீட்டர்(nm) . இதுதான் அதிக அலைநீளம் உள்ளது. வானவில்லின் அடி வளைவில் உள்ள வயலெட்டின் அலைநீளம் 380  நானோமீட்டர்(nm) .இதுதான் குறைவான அலைநீளம். இவைகளுக்கு இடையில்தான், மற்ற வண்ணங்கள் உள்ளன. நமது கண்ணிலுள்ள ரெடினா பகுதியின்,

வண்ணவாங்கிகள் பெரும்பாலும், சிவப்பு, பச்சை மற்றும் நீலம் வண்ணத்திற்கே எளிதில் அடையாளம் அறியும் வகையில் உருவாகி இருக்கின்றன. இதனால்தான் நமக்கு வண்ணப்பார்வை சாத்தியமாகிறது.சிவப்பு,பச்சை, நீலம் என்ற மூன்று வண்ணங்களே, முக்கிய நிறங்கள் என அழைக்கப் படுகின்றன

ராமனும்..ஒளிச்..சிதறலும்..!

திருச்சிக்கு அருகிலுள்ள திருவானைக்காவலில், 1888 ,நவம்பர் 7 ம் நாள் பிறந்த ராமனுக்கும், இந்த வண்ணத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அவர்தான்,தன் வாழ்நாளில் பெரும் பகுதியை செலவு செய்து, மிகக் குறைவான அலை நீளம் உள்ள ஒளிக்கற்றைகளே, அதிகம் சிதறுகின்றன என்ற உண்மையை 1928 ,பிப்ரவரி.28 ம் நாள் கண்டுபிடித்தார்.அதிலுள்ள போட்டான்(photon) துகள்கள்/ஒளித்துகள்கள்தான்  சிதறி,வண்ணத்தை உண்டுபண்ணுகின்றன  . ஒளி, அதன்

போட்டான் துகள்/ அணுக்கள்/மூலக்கூறிலிருந்து, சிதறும்போது ஒரே அலைநீளம், ஆற்றல் உள்ள போட்டான்களாகவே இருக்கின்றன. ஆனால் சில போட்டான்கள் மட்டும் அதனை விட அலைநீளம் உள்ளவைகளாக சிதறுகின்றன.இந்த தகவலைச் சொன்னவர்,கொல்கொத்தா பல்கலையில் பேராசிரியராகப் பணி புரிந்த சர். C.V.ராமன் அவர்கள்.

அறிவியல்..கண்டுபிடிப்பும்….நோபல்..பரிசும்..!

அறிவியல் வரலாற்றில்,இந்திய சரித்திரத்தில், 1928 , மார்ச் 16 ம் நாள் ஒரு முக்கியமான, மறக்க முடியாத தினமாகும். அன்றுதான், அவர் ,பெங்களூருவிலுள்ள, தென்னிந்திய அறிவியல் கழகம் மற்றும் மத்திய கல்லூரியின்,அறிவயல் மன்றத்தின் ஒரு சிறப்பு விருந்தினராக பேச அழைக்கப் பட்டார். அங்குதான் தான் தன் அன்புக்குரிய மாணவர்களான, கிருஷ்ணன் மற்றும் வேங்கடேஸ்வரனுடனுடன் இணைந்து செய்த,  இயற்கை ரகசியமான,தனது இயற்பியல் அறிவியல், கண்டுபிடிப்பை முதன் முதல் உலகுக்கு தெரிவித்தார்.  இது உலக ஆராய்ச்சியாளர்களின் கவனத்தை ஈர்த்தது. உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.அதுவே ராமன் விளைவு என்றும் அழைக்கப் பட்டது.அலைக் கற்றையிலிருந்து   சிதறிய வரிகளும் ராமன் வரிகள் என்றே சொல்லப்பட்டன.ஒளி,போட்டான் துகள்களால் ஆனவை என்று உறுதி செய்தது ராமன் விளைவு. இது பல வித்தியாசமான பொருள்களின், மூலக்கூறு மற்றும் படிக அமைப்பு பற்றிய அறிவியல் ஆய்வில், தேடலில் மிகவும் உதவி செய்தது. ராமன் விளைவுக்காக 1930 ல், சர். C.V.ராமனுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது

வானின்… நீல..நிறம்..!

குறைவான நீளமுள்ள அலைநீளங்கள்தான் சிதறுகின்றன என்றால், வானம் வயலெட் ஆகத்தானே தெரிய வேண்டும். ஏன் நீலம் நிறம்.? ஏன் இந்த புதிர்?  சூரிய ஒளியிலிருந்து வரும் கதிர்கள், சரியான அலைநீளத்தில் தான் வருகின்றன. ஆனால், அதி உயரத்தில் உள்ள வளிமண்டலத்தால், அவை உறிஞ்சப்படுகின்றன. எனவே, நாம் பார்க்கும் ஒளியில் குறைவான வயலெட் வண்ணமே தெரிகிறது.  இது வினாவுக்கான பாதி பதில்தான். நமது கண்கள்தான் மீதி விடை. எப்படி..எப்படி என மனம் குதிக்கிறதா? வானவில்லில் அனைத்து நிறங்களும் தெரிகின்றனவே..! நமது கண்ணின் செயல்பாடுதான், வானம் நீலமாக தெரிய காரணம்..!.

அதான், கண்ணின் ரெடினா, சிவப்பு, நீலம் மற்றும் பச்சை என மூன்று வண்ணங்களுக்கே, அதிக தூண்டுதல் ஏற்படுத்துகின்றன.மேலும், வயலெட் நிறத்தை அவ்வளவாக கண்டுகொள்ளாமல்,அருகில் காணப்படும் நீலத்துக்கே முக்கியத்துவம் தருவதின் விளைவே.. வானம் நீல நிறம்..அதனைப் பிரதிபலிக்கும் கடலும் நீல நிறம்.  ஆனால், வளிமண்டலத்தில் நீங்கள் சுமார் 30 கி.மீ உயரத்துக்கு மேல் போய், இந்த வளிமண்டலத்தைப் பார்த்தால், இது கருப்பாகத் தெரியும்.

 ராமனின்..இளமை..!

ராமனின் பெயர் சந்திரசேகர வெங்கடராமன் என்பதே..! அவரது தந்தை, வெங்கடேசுவர அய்யர், கணிதம் மற்றும் இயற்பியல் பேராசிரியர். அன்னையின் பெயர், பார்வதி அம்மாள். சென்னை மாநிலக் கல்லூரியில்தான், 1902 ல் பட்டப்படிப்பு(B.A)   பயின்றார். தங்கப் பதக்கத்துடன் வெற்றி பெற்றார். 1907 ல், M .A வையும் மிக மிக அதிக மதிப்பெண்ணுடன் அடைந்தார்.பின், அரசின் நிதி துறையில், இணை பொது கணக்கியல் அதிகாரியாக இருந்தார். பிறகு, அரசு வேலையைத் துறந்துவிட்டு, கொல்கொத்தா பல்கலையின் பேராசிரியரானார்.

 NCSTC ன் ..சிபாரிசு..!

தோல் வாத்தியக்கருவிகளின்  அதிர்வு, ஒலி, அகஒலி    பற்றியும் சர். C.V.ராமன் ஆராய்ந்திருக்கிறார். சர்.C .V .ராமனுக்கு, 1941 ல், பிராங்க்ளின் பதக்கமும், 1954 ல் பாரத  ரத்னாவும்,1957 ல், லெனின் அமைதிப்  பரிசும் வந்து சேர்ந்தன.1970 , நவம்பர் 21 ல் இயற்கை எய்தினார். இவரின் அறிவியல் சாதனைகளை உணர்ந்த தேசிய அறிவியல், தொழில் நுட்ப பரிமாற்ற குழுமம்,(National Council for science and Technology communication,NCSTC  ) ராமன் ,ஒளிச் சிதறலைக் கண்டுபிடித்த, பிப்ரவரி 28 ஐ தேசிய அறிவியல் தினமாக கடைப் பிடிக்க வேண்டும் என்று 1986 ல் ஒரு  வேண்டுகோள் விடுத்தது. மேலும், அன்றைய நிகழ்வை, பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழகங்கள், அறிவியல், தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனங்கள், மருத்துவக் கழகங்கள் பல நிகழ்வுகள் மூலம் சிறப்பிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டன. அதன் படியே, இந்திய அரசும் ஒப்புக்கொண்டு, ஆண்டுதோறும் பிப்ரவரி 28 ஐ தேசிய அறிவியல் தினமாக அறிவித்தது. அதன் பின்னர் ஒவ்வொரு வருடமும் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப் படுகிறது.

பேரா.மோகனா

mohanatnsf@gmail.com

Leave a Reply

Top