You are here
Home > Article > தை.. சித்திரை.. — எது தமிழ்ப் புத்தாண்டு?

தை.. சித்திரை.. — எது தமிழ்ப் புத்தாண்டு?

சித்திரை  முதல் தேதியை தமிழ் புத்தாண்டு எனக் கொண்டாடுவது ஆரியர் புகுத்திய பழக்கம் என்றும் முற்காலத்தில் தமிழர்கள் தை முதல் தேதியைத் தான் புத்தாண்டு எனக் கொண்டாடினர் எனவும் சில தமிழ் அறிஞர்கள் வாதிட, அதனை அடிப்படையாகக் கொண்டு முந்தைய திமுக அரசு இனி “தை திங்கள் முதல் நாள் தான் தமிழ் புத்தாண்டு” என அறிவித்தது.

images

எதிர்வினையாக, பலரும் பல்வேறு காரணங்கள் கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். இந்து மதவாதிகள் தமது மதத்தில் தலையிடுவதாகக் கூறி எதிர்த்தனர். இன்னும் சிலர் சமயக் கருத்துக்களின்அடிபடையில் எதிர்த்தனர். சித்திரை முதல் நாள் தான் கோவில்களில் நாங்கள் வழிபாடுகள் நடத்துவோம் என சில அமைப்புகள் அறிவிப்புச் செய்தன.

அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் பொறுப்பேற்ற அதிமுக அரசு பதவி ஏற்றதும் இனி சித்திரை ஒன்று தான் தமிழ்ப்புத்தாண்டு  என மறுபடி மாற்றி அறிவிப்பு செய்தது.ஒரு காலத்தில் திமுகவும் அதிமுகவும்  மாவட்டங்களுக்கு மாற்றிமாற்றிப் பெயர் சூட்டியது போலவே திமுக வந்தால் தை எனவும் அதிமுக வந்தால் சித்திரையெனவும் தமிழ்ப்புத்தாண்டு அரசியலாக்கப்பட்டுள்ளது.

நாட்காட்டிகள் உலகம் முழுவதுமே காலத்திற்கேற்ப செழுமைப்படுத்தப்பட்டு வந்துள்ளன. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய அதே நாள்காட்டியை- நாள்காட்டி அமைப்பை இன்றும் பயன்படுத்திக் கொண்டிருக்கவில்லை.. நாள்காட்டிகும் நடைமுறைக்கும் வேறுபாடு ஏற்படுவது கண்டு பல பண்பாட்டுக் குழுவினர் தமது நாள்காட்டியை சரிசெய்து வந்திருக்கின்றனர்.. எனவே தமிழ்நாள்காட்டியும் மாற்றம்பெற வேண்டும், செழுமைப்படுத்தப்பட வேண்டும்.. அந்த மாற்றம் அறிவியல் பூர்வமானதாக அமைய வேண்டும்.. கொதிக்கும் சட்டியிலிருந்து எரியும் தீ’க்கு செல்வது மாற்றம்என்றாலும், வளர்ச்சி அல்ல. ஒரு பத்தாம்பசலி பழக்கத்திலிருந்து மற்றொரு மூடநம்பிக்கைக்கு மாறுவது மாற்றம் அல்ல; செம்மைப்படுத்துதல் அல்ல. அதே நேரத்தில் மரபு, சமயம் எனக் கூறி முட்டுக்கட்டைஇடுவது, தடை செய்வது அல்லது மறுப்பது முறையாகாது.

Tamil-New-Year-718644

நாள்காட்டி என்பது என்ன?

வேனிற் காலத்தே கிடைக்கும் அதே உணவு மாரிக்காலத்தில் கிடைக்காது, நெய்தலில் கிடைக்கும் உணவு மருதத்தில் கிடைக்காது. எனவே பருவகாலம் மற்றும் இடம்/ வெளி சார்ந்து சமகாலம்வரை நமது உணவு வேறுபட்டு அமைந்தது. இவ்வாறு, மனிதனின் ஆதிகாலம் தொட்டே  வரலாறு (காலம்) மற்றும் புவியியல் (இடம்) இரண்டும் நம் மீதும் நமது வாழ்க்கை மீதும்  தாக்கம் செலுத்துகிறது. வேறுவார்த்தையில் கூறப்போனால் மனிதராகிய நாம் அனைவரும் வெளி மற்றும் காலம் (space and time) சார்ந்து தான் வாழ்கிறோம். இதில் வெளி என்பது வீடு, தெரு, ஊர் நாடு என பல பிரிவுகளில் நாம் பகுத்துஅறிகிறோம். காலம் என்ற அம்சத்தை அளந்து பிரித்து அறிய உதவும் கருவியே நாள்காட்டி.

நாள்காட்டி தயாரிப்பு இன்று நேற்று துவங்கியதல்ல. மனித நாகரிகம் துவங்கிய பழைய கற்காலம் தொட்டே நாள்காட்டிகள்  ஏற்படுத்தப்பட்டன. இந்தியாவின் நிகோபர் தீவுகளில்அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட எலும்பு துண்டு ஒன்று பண்டைய நாள் பொழுது செலவை குறிக்கிறது என அறிஞர் கூறுவர். சுமார் 18,000 ஆண்டுகள் பழமையான இந்த எலும்பு துண்டில் வீட்டு சுவற்றில்பால்கணக்கு எழுத கோட்டுக்குறி இடுவது போல நாள் கணக்கு கோட்டுக்குறி காணப்படுகிறது. இதேபோல் ஆப்பிரிக்காவில் பழங்குடி மக்களிடையே, மரத்தில் அல்லது எலும்பு துண்டில் வடிவமைக்கப்பட்ட, நாள்கணக்கு குறி கொண்ட ஸ்கேல் காணப்படுகிறது என்பதும் சிறப்பு. அந்த காலத்தில் நாட்கள் நகர்வதை இதுபோன்று கோட்டுக்குறி இட்டு குறிக்கும் பழக்கம் இருந்துள்ளது.. அதற்காக கோட்டுக்குறி இடப்பட்ட அளவுகோலைப் பயன்படுத்தியுள்ளனர் என்பார் அறிஞர். இது தான் உலகின் முதன் முதல் நாள்காட்டி எனக் கொள்ளலாம்.

நாள்காட்டி என்பது நாள், மாதம், ஆண்டு என காலப்பொழுதின் பிரிவுகளை அடுக்கும் கருவி. இதில் நாள் என்பது இயல்பாக எளிதாக அறிய முடியும். இன்று நாம் நடு இரவு பன்னிரண்டு மணிமுதல்புதிய நாள் துவங்குவதாகக் கொள்கிறோம். ஆனால் முன் காலத்தில் சூரியன் உதயத்திலிருந்து மறு உதயம் வரை ஒரு நாள் எனக் கணித்தனர். இன்று கடிகாரம் என்கிற யந்திரம் நம்மிடையே வந்த நிலையில்நள்ளிரவிலிருந்து அடுத்த நாள் நள்ளிரவு வரை ஒரு நாள் என வகுப்பதில் அவ்வளவு சிக்கல் இல்லை. ஆனால் கடிகாரம் இல்லாத முற்கால சூழலில் எளிதில் சூரிய உதயம் தான் புலப்பாட்டில் அமைந்தது. எனவேபட்டறிவு சார்ந்த சூரிய உதயம் தான் அந்த காலத்தில் நாளின் துவக்கம் எனக் கொள்ளப்பட்டது.

நாள் என்பதை எளிதில் அறிய முடிகிறது; அளவிட முடிகிறது. ஆனால் மாதம் என்பது என்ன? உலக வரலாற்றில் எங்கும், எல்லா கலாச்சாரத்திலும், முற்காலத்தில் நிலவின் இயக்கம்தான் மாதம்எனும் காலப்பிரிவை சுட்டி நின்றது. தமிழில் மாதம் என்பதை திங்கள் என்பதை திங்கள் என்றும் கூறுவர். திங்கள் என்றால் நிலவு என்று பொருள்.. அதுபோல ஆங்கில “மன்த்”  என்ற சொல்லும் லத்தின்மொழியில் நிலவு (மூன்) எனும் பெயரிலிருந்து உருவானதே. ஆடு, மாடு மேய்ச்சல் செய்து இன்றைய ஈராக் இரான் பகுதியில் வாழ்ந்துவந்த ஆரிய மக்கள் ஏற்படுத்திய ரிக்வேதம், “சந்த்ரமா மாச கிரியா” எனகூறுகிறது. அதாவது சந்திரன் தான் மாதத்தை தோற்றுவிக்கிறான் என்பது பொருள். உலகெங்கும் பல மொழிகளில் மாதத்தைக் குறிக்கும் சொல்லானது நிலவு என்று பொருள் தருவதாகவே உள்ளது என்பதுகவனிக்க வேண்டிய செய்தி.

நிகோபர் தீவில் கிடைத்த கோட்டுக்குறி கொண்ட எலும்புத்துண்டு முதல் னால் செலவை குறிக்க பயன்படுத்தும் ஸ்கேல் வரை எல்லாவற்றிலும் 29 -30 கோடுகள் தொகுப்பாய் உள்ளன. இதுநிலவின் இயக்கத்தை அதாவது முழுநிலவு முதல் அடுத்த முழுநிலவு வரையிலான நாட்களைக் குறிக்கிறது. நிலவின் வளர்பிறை, தேய்பிறை இயக்கம் தான் மாதம். ஒரு முழு நிலவிலிருந்து மறு முழுநிலவுவரை மாதம். அல்லது ஒரு அம்மாவாசையிலிருந்து அடுத்த அம்மாவாசை வரை ஒருமாதம். கற்காலத்திலும் எளிதில் நிலவின் இயக்கத்தை பட்டறிய முடிந்தது. எனவே மாதம் என்ற கருத்து முற்காலம்தொட்டே இருந்து வந்துள்ளது என்பது இயல்பு.

ஆண்டு என்பது என்ன?

மாதம் என்பதற்கு அடுத்து உள்ள பெரும் கால பொழுது ஆண்டு என்பதாகும். நாள் என்பது சூரியன் (நமது பார்வைக்கு) பூமியை சுற்றும் பொழுது. மாதம் என்பது நிலவின் வளர்பிறை- தேய்பிறைஇயக்கம் –நிலவு பூமியை சுற்றிவரும் காலம். ஆண்டு என்பது என்ன?

ஆண்டு என்பது என்ன என்ற கேள்விக்கு பன்னிரெண்டு மாதம், 365 நாட்கள் என குழந்தைகள் கூட கூறிவிடுவர்.. ஏன் 10 மாதங்கள் இல்லை?  365  என்பதற்குப் பதிலாக ஏன் 200 அல்லது 300நாட்கள் தான் ஒருவருடம் என்று வைத்துக்கொண்டால் என்ன பிரச்சனை? உள்ளபடியே ஆண்டு என்பது புவியின்  இயக்கத்தை சார்ந்த கருத்து ஆகும்.

இன்று “ஆண்டு என்பது பூமி சூரியனை சுற்றிவர எடுக்கும் காலம்” என்று பள்ளிக் குழந்தைகள் கூட எளிதில் விடை கூறுவர். ஆனால் பூமி கோள வடிவானது; தன்னை தானே சுற்றுகிறது,சூரியனை வலம் வருகிறது என்பது எல்லாம் நவீன கருத்துகள். பண்டைய உலகில், கற்காலத்தில் எப்படி ஆண்டு என்பதை அளவீடு செய்தனர்? அந்த காலத்தில் ஒரு ஆண்டில் சுமார் 365 நாட்கள் உள்ளன எனஎப்படி கணித்தனர்.

முதலில் ஆண்டு என்பது 12 மாதங்கள் என்று ஏன் கூறப்பட்டது என்பதை காண்போம். அதற்கு இரவுவானில் நிலவு பவனி வரும் பாங்கை புரிந்து கொள்ளவேண்டும். இன்று ஒரு விண்மீன் அருகேதென்படும் நிலவு நாளை அதே விண்மீன் அருகே காட்சி தராது. வேறு ஒரு புதிய விண்மீன் அருகே தென்படும். இப்படி ஒவ்வொரு நாளும் ஒரு நட்சத்திரத்திற்கு அருகில் காட்சி தரும். 27 நாட்களுக்குப் பிறகுநிலவு அதே முதல் நட்சத்திரத்திற்கு  மறுபடி வந்து சேரும்.  அதாவது சுமார் 27  நாட்கள் கடந்த பின்னர் அதே முதல் விண்மீன் அருகே நிலவு காட்சி படும். அதாவது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விண்மீன்அருகே காட்சி தரும் நிலவு 27 நாட்களில் விண்மீன் பின்புலத்தில் ஒரு சுற்று வைத்துவிடும். இந்த 27 நாட்களில் நிலவு எந்தெந்த விண்மீன் அருகே தென்படுகிறதோ அதுவே அந்த நாளின் நட்சத்திரம். அதாவதுஇன்று நிலவு பரணி விண்மீன் அருகே நிலை கொண்டால் இன்று பரணி நட்சத்திரம். அடுத்த நாள் வேறு ஒரு நட்சத்திரம். இவ்வாறு அசுவதி, பரணி, என 27 விண்மீன்கள் இனம் காணப்பட்டு முற்கால இந்தியசமுதாயத்தில் 27 நட்சத்திரங்கள் வகுக்கப்பட்டன. இந்த 27 நாட்கள் நட்சத்திர மாதம் எனக் கொள்ளப்பட்டன.

தேய்- வளர்பிறை காட்டும் நிலவு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நட்சத்திரம் என நகர்ந்து வரும்போது ஏதாவது ஒரு நட்சத்திரத்தில் முழு நிலவாக இருக்கும் அல்லவா?

ஒரு குறிப்பிட்ட மாதத்தில் சித்திரை விண்மீனில் நிலவு உள்ளபோது முழு நிலவாக இருப்பதாக கொள்வோம். அந்த மாதத்திற்கு சித்திரை மாதம் என பெயரிட்டனர். அதாவது சித்திரை மாதத்தில்முழு நிலவு கொள்ளும் நாள் சித்திரை நட்சத்திரமாக இருக்கும் (சில இந்திய நாட்காட்டிகளில் முழுநிலவு அல்ல அம்மாவாசை கொண்டு மாதம் குறிக்கப்படுகிறது. சித்திரை நட்சத்திரத்தில் முழு நிலவு அமைந்தபின் அடுத்த மாதம் விசாக நட்சத்திரத்தில் முழுநிலவு ஏற்படும். அது விசாக மாதம்- அல்லது வைகாசி. இவ்வாறு தான் மாதங்களின் பெயர்கள் உருவாயின. சித்திரை, வைகாசி, ஆனி.. என மாதங்களின் பெயர்கள்ஏற்பட்டது இவ்வாறு தான்.

ஒரு தடவை கார்த்திகை விண்மீனுக்கருகில் முழுநிலவு ஏற்பட்டால், மறுமுறை அதே நிகழ்வு- கார்த்திகை நட்சத்திரத்தில் முழுநிலவு என்ற நிலை அடைவது சரியாக பன்னிரெண்டு மாதங்கள்கடந்த பின்னர் தான் என முற்காலத்தில் உற்று நோக்கல் மற்றும் பட்டறிவு மூலம் அறிந்தனர். அதாவது வேறு வகையில் கூறப்போனால் மொத்தம் இருபத்து ஏழு நட்சத்திரங்கள் இருந்தாலும், 12 நட்சத்திரங்கள்அருகே மட்டுமே நிலவு முழு நிலவு (அல்லது அம்மாவசை) நிலை ஏற்படுகிறது என்ற சிறப்பு செய்தியை முற்காலத்தில் உற்று நோக்கல் வழி உலகெங்கும் உள்ள பண்பாட்டில் அறிந்தனர். வேத காலத்திற்குமுன்பே கற்காலம் சார்ந்த பழங்குடி மக்கள் – நிகோபரி முதலிய மக்கள்- இதனை அறிந்திருந்தனர். இந்தியாவிற்கு வெளியே பல நாகரிங்கங்களும் இதனை அறிந்திருந்தன. எனவே தான் உலகெங்கும் உள்ளஎல்லா நாட்காட்டிகளிலும் 12 மாதங்கள் உள்ளன.

சந்திர-சூரிய மற்றும் சூரிய-சந்திர நாட்காட்டிகள்

நிலவு பன்னிரண்டு முழு நிலவுக்கு பிறகு மறுபடி முதல் மாத நட்சத்திரத்திற்கு வந்து முழு நிலவு கொள்ளும் அல்லவா. முழு நிலவிலிருந்து முழு நிலவு என கொண்டால் ஒரு மாத காலம்உள்ளபடியே 29.5 நாட்கள் தான். சுமாராக முப்பது நாள் எனக்கூறினாலும், மெய்படி இதன் கால அளவு 29.5 நாட்கள் தான். எனவே இந்திய இஸ்லாமிய மாதங்களில் 29-30 என மாறி மாறி அடுத்தடுத்த மாதங்களில்நாட்கள் அமையும்.

மாதத்திற்கு 29.5 நாட்கள் தான் என்றால் 12 மாதங்களுக்கு மொத்தம் 354 நாட்கள் மட்டுமே இருக்கும் என்பதை கவனத்தில் கொள்க. எனவே தான் இஸ்லாமிய நாள்காட்டி, திபெத்திய நாள் காட்டிமுதலியவற்றில் ஆண்டுக்கு மொத்தம் 354 நாட்கள் மட்டுமே உள்ளன. இவை சந்திரமான நாள்காட்டி என கூறப்படுகிறது. இஸ்லாமிய நாள்காட்டி, திபெத்திய நாள் காட்டி போன்றவை சூரியனின் செலவைகணக்கில் கொள்வதில்லை. எனவே இஸ்லாமிய மற்றும் திபெத்திய நாட்காட்டிகளில் ஒரு ஆண்டு என்பது வெறும் 354 நாட்கள் கொண்டவையாக அமைகிறது. அரபிய பாலைவனத்திலும் திபெத்திய பனிபிரதேசத்திலும் பருவ காலங்கள் குறிப்பிடும் படியாக இல்லை. எனவே இங்கு சந்திர இயக்கத்தை மட்டுமே கொண்ட நாள்காட்டிகள் போதுமானதாக இருந்தன. இந்தியாவிலும் துவக்கத்தில் வேத காலத்தில் இதேசந்திரமான நாள்காட்டி தான்  வழமையில் இருந்தன என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஆனால் நமக்கு பூமி சூரியனை சுற்றிவரும் காலம் சுமார் 365 நாட்கள் என தெரியும். பருவ காலங்கள் பூமி சூரியனை சுற்றி வருவதோடு தொடர்புடையது. எடுத்துகாட்டாக தென்கிழக்கு பருவமழை ஜூன் 2 அல்லது 3 ஆம் தேதி கேரளாவில் தென்முனையில் துவங்கும்.

எனவே 354 நாட்கள் கொண்ட நாள்காட்டி மட்டும் இருந்தால் ஆண்டுதோறும் இந்த தேதி சுமார் 11 நாட்கள் சூரிய நாள்காட்டியான ஆங்கில நாட்காட்டியில் பின்னுக்கு சென்றுவிடும் அல்லவா?இவ்வாறு ஆண்டு தோறும் சூரிய இயக்கத்தோடு ஒப்பிடுகையில் பதினோரு நாட்கள் பின்னுக்கு சென்றால், ‘ஐப்பசியில் அடைமழை கார்த்திகையில் கனமழை’ எனபது பொய்த்து போகும். இந்த ஆண்டுகார்த்திகை மாதம் மழை மாதமாக இருந்தால் அடுத்த ஆண்டு ஐப்பசியில் மழை அதற்கு அடுத்த ஆண்டு  புரட்டாசியில் மழை என ஆண்டு தோறும் மழை பொழியும் மாதம் மாறி மாறி வரும். இவ்வாறு தான்இஸ்லாமிய ரம்ஜான் பண்டிகை (இஸ்லாமிய நாட்காட்டியில் ரம்ஜான் மாதத்தின் முதல் தேதி) ஆண்டு தோறும் நமது வழமை ஆங்கில காலண்டரில் 11 நாட்கள் வித்தியாசத்தில் வருகிறது என்பதை காண்க.

இந்தியாவில் குறிப்பாக, கற்காலத்திற்கு பிறகு சமுக வளர்ச்சியின் ஊடே  உழவுத்தொழில் சமூகம் உருவாகியதும் நிலவு சார்ந்த நாள் காட்டி போதுமானதாக இருக்கவில்லை. உழவுத்தொழில்சமீபகாலம் வரை பருவமழை போன்ற பருவகாலத்தோடு தொடர்புடையதாக இருந்தது. எனவே நாள்காட்டி என்பது நாள், மாதம் என்பதோடு பருவகாலத்தையும் சுட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. எனவே 354நாட்களுக்கு பதிலாக சூரிய இயக்கத்தை சார்ந்து 365 நாட்கள் கொண்ட நாள்காட்டியை தேவை ஏற்பட்டது. இதற்கு நாள்காட்டி பருவகாலத்தோடு பொருந்த வேண்டி இருந்தது. எனவே தான் தமிழர்கள் உட்படஇந்திய பகுதியில் பல சமூகங்கள் சூரிய இயக்கத்தோடு சேர்ந்து இயங்கும் சூரிய- சந்திர நாட்காட்டிகளை உருவாக்கினர்.  தமிழகம், கேரளா மற்றும் வங்கத்தில் சந்திரனை முற்றிலும் தவிர்த்து சுமார் 365 நாட்கள்உடைய சூரிய நாட்காட்டி உருவாக்கினர். இதுவே சூரிய நாட்காட்டி.

ஆனால் பீகார் போன்ற வடஇந்திய பகுதிகள் முற்றிலும் சந்திரனை தவிர்க்க வில்லை. சந்திர மாதம் ஆனால் சூரிய இயக்கத்தோடு சரிகட்டுவது என்ற முறையில் ஒட்டு நாள்காட்டியைதயாரித்தனர். சந்திர நாட்காட்டியில் ஆண்டுக்கு துண்டு விழும் 11 நாள்களை கூட்டி சுமார் 2 ½  ஆண்டுகளுக்கு ஒரு முறை கூடுதல் மாதம் என 30 நாட்களை இணைத்து அந்த ஆண்டு மட்டும் 13 மாதங்கள் எனசரிகட்டினர். அதாவது ஆண்டுக்கு ஆண்டு நாட்களின் தொகை வேறுபடும். சில ஆண்டுகள் 12 மாதங்கள் சில ஆண்டு 13 மாதங்கள் என அமையும். இவ்வாறு கூடுதல் மாதம் – அதிக மாசம் என அழைக்கப்படுகிறது.இதுவே சூரிய- சந்திர நாட்காட்டி. வடஇந்தியாவில் பரவலாக இவ்வகை சூரிய சந்திர நாட்காட்டிகள் பயன்படுத்தப் படுகின்றன.

தமிழகம் உட்பட தென் இந்தியாவிலும் தீபாவளி போன்ற பண்டிகைகள் இந்த சந்திரமான வழமை கொண்டு உள்ளது. பொங்கல் மற்றும் சித்திரை ஒன்று – மேடாதி- ஆகியவை ஆண்டுதோறும்சற்றேறக்குறைய அதே ஆங்கில நாள்காட்டியில் வரும். பொங்கல் பொதுவே ஜனவரி 14, அதே போல சித்திரை ஒன்று பொதுவே ஏப்ரல் 14; ஆனால் தீபாவளி மட்டும் செப்டம்பர் அல்லது அக்டோபரில் மாறி மாறிஅமையும். அதாவது பெரும்பாலும் பண்டிகைகள் இன்றும் சந்திரமான வழமை கொண்டு உள்ளது.

ஆண்டின் துவக்கம் எது?

சுத்த சந்திரமான நாட்காட்டியில் ஆண்டின் துவக்கம் எது என்பதில் சிக்கல் இல்லை. இஸ்லாமிய ஹிஜிர நாள்காட்டியில் மொஹரம் மாதம் தான் முதல் மாதம். இதன் முதல் நாள்தான் புத்தாண்டு.எனவே ஹிஜிர 1427 ஆண்டு ஜனவரி 31, 2006இல் துவங்கியது. ஆனால் ஹிஜிர 1428ஆம் ஆண்டு ஜனவரி 20,2007இல் துவங்கியது. இந்த தேதி சூரிய நாள்காட்டியான ஆங்கில நாட்காட்டியில் ஆண்டுதோறும் 11நாட்கள் வித்தியாசமாக அமையும். எனவே இந்த வகை நாள்காட்டியில் ஆண்டின் துவக்கம் ஒருதடவை கோடை காலத்தில் அமைந்தால் வேறு ஒரு ஆண்டில் குளிர் காலத்தில் ஏற்படலாம். இந்த வகைநாட்காட்டியில் ஆண்டின் துவக்கத்திற்கும் வானியல் நிகழ்வுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை.

ஆனால் சூரிய நாட்காட்டி மற்றும் சூரிய சந்திர நாட்காட்டியில் எந்த நாளை புது ஆண்டு துவக்கம் என கொள்வது என்ற கேள்வி எழுந்தது. சூரியனின் இயக்கம் கவனமாக உற்றுநோக்கப்பட்டது.சூரியனின் இயக்கம் சார்ந்தே சூரிய மற்றும் சூரிய சந்திர நாட்காட்டிகளில் முதல் நாள் குறிக்கப்படுகிறது.

சூரியன் எங்கே உதிக்கும் என்ற கேள்விக்கு நாம் எல்லோரும் உடன் கிழக்கு என பதில் கூறுவோம். ஆனால் சூரிய உதயத்தை கவனமாக உற்று நோக்கினால் எல்லா நாளும் சூரியன் மிக சரியாககிழக்கில் உதிப்பதில்லை என்பது புலப்படும். ஆண்டில் இரண்டே இரண்டு நாள் தான் சூரியன் மிகச் சரியாக கிழக்கில் உதயம் ஆகும். வேனில் காலத்தில் மார்ச் 21/22 மற்றும் குளிர் காலத்தில் செப்டம்பர் 21/22ஆகிய நாட்களில் தான் சூரியன் மிகச்சரியாக கிழக்கில் உதிக்கும்.

மற்ற நாட்களில் சூரிய உதயம் வடகிழக்கு அல்லது தென்கிழக்கு திசையில் இருக்கும். எடுத்துக்காட்டாக மார்ச் 21 அன்று மிகச்சரியாக உதய புள்ளி கிழக்கில் இருக்கும். ஆனால் அதற்கு அடுத்தநாள் வடகிழக்கில் உதய புள்ளி அமையும். அதற்கும் அடுத்த நாள் மேலும் உதய புள்ளி வடக்கு நோக்கி நகரும். இவ்வாறு வடக்கு நோக்கி நகரும் உதய புள்ளி உச்சபட்ச வடக்கு திசையில் ஜூன் 21 அன்று நிலைகொள்ளும். அதன் பின் சூரிய உதய புள்ளி தெற்கு நோக்கி விலகும். இதனை தான் தட்சிணாயணம் என்பர். அதாவது சூரியனது உதய புள்ளியின் தென்திசை ஓட்டம்.

தெற்கு நோக்கி நகரும் உதய புள்ளி மறுபடி செப்டம்பர் 21/22 சரியாக கிழக்கு திசையில் அமையும். மேலும் தென்திசை நகர்வு தொடர்ந்து உச்சபட்ச தென்திசை உதயம் டிசம்பர் 21/22 அன்றுநிகழும். அதன் பின் சூரிய உதய புள்ளியின் நிலை வடக்கு நோக்கி செல்ல துவங்கும். இதுவே உத்தராயணம்.  சூரிய உதய புள்ளியின் வட திசை செலவு.

சூரியன் மிகச்சரியாக கிழக்கில் உதிக்கும் அந்த இரண்டு நாட்கள் மட்டும்தான் இரவு மற்றும் பகல் பொழுதுகள் சமமாக இருக்கும். ஏனைய நாட்களில் பகல் பொழுது நீண்டோ அல்லது இரவுபொழுது நீண்டோ அமையும். எனவே மார்ச் 21/22 செப்டம்பர் 21/22 ஆகிய இந்த இரண்டு நாட்களை சம இரவு பகல் நாள் என்பர்.

உத்தராயண சூரிய புள்ளி நகர்வின் போது, இந்திய போன்ற வடகோள புவி பகுதியில், நேற்றையதை விட இன்று பகல்பொழுது காலம் கூடுதலாக அமையும். இன்றையதை விட நாளை பகல்பொழுது காலம் கூடுதலாக அமையும். இதற்கு நேர் மாறாக தக்ஷிணாயண காலத்தில் பகல் பொழுதுகாலம் நாள்பட குறைந்து வரும். துருவப்பகுதிகளில் ஆறுமாதம் பகல் ஆறுமாதம் இரவு என இருக்கும் எனநாம் படித்திருப்போம். உத்தராயண காலம்தான் வடதுருவத்தில் பகல். தட்சிணாய காலம் வடதுருவத்தில் இரவு. தென்துருவ பகுதியில் இதற்கு நேர்மாறாக இருக்கும் என்பதை சொல்ல தேவையில்லை.

ஆக சூரிய இயக்கத்தில்– சரியாக கிழக்கில் உதிக்கும் இரண்டு நாட்கள் [மார்ச்21/22, செப்டம்பர் 21/22] , உச்சபட்ச வடகிழக்கு உதய புள்ளி (தட்சிணாயணம் மே 21/22) உச்சபட்ச தென்கிழக்கு உதயபுள்ளி (உத்தராயணம் டிசம்பர் 21/22) ஆகிய நான்கு நாட்கள் சிறப்பானவை. இந்திய நாட்காட்டிகளில் பொதுவே இந்த நான்கு நாட்களில் உத்தராயணம் (டிசம்பர் 21/22), மற்றும் வேனில் கால சம இரவு பகல் நாள்(மார்ச்21/22) ஆகியவற்றை ஆண்டின் முதல் நாள் என கொள்ளும் பல்வேறு நாட்காட்டிகள் உள்ளன.

மெய்யும் புரட்டும்

உள்ளபடியே தைத்திங்கள் உத்தராயணம் டிசம்பர் 21 அன்று ஏற்படுகிறது என்றால் நாம் மட்டும் தைத் திங்களை ஜனவரி 14 அன்று கொண்டாடுவது ஏன்? உள்ளபடியே இது ஜோதிடர்கள் மற்றும்பிற்போக்கு பத்தாம்பசலிகள் ஏற்படுத்திய நடைமுறை. நாட்காட்டிகள் செழுமைப்படுத்தப்பட்ட காலத்தில், சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் முன்பு உத்தராயணம் ஜனவரி 14 (தை முதல் நாள்) இருந்தது. ஆனால்இன்று இந்த வடஓட்டம் டிசம்பர் 21/22 அன்று நடைபெறுகிறது. வேனில் கால சம இரவு பகல் நாள் ஏப்ரல் 14 அதாவது சித்திரை முதல் நாள் எனவும் இருந்தது. இன்று இது மார்ச் 21/22 அன்று நிகழ்கிறது. இந்தவித்தியாசம் ஏன் ஏற்பட்டது? உத்தராயணம் மற்றும் வேனில் கால சம இரவு பகல் நாள் முதலிய நடைபெறும் நாள் வித்தியாசம் ஏன் ஏற்படுகிறது?

இதனை விளங்க பூமியின் சிறப்பு இயக்கம் ஒன்றை விளங்க வேண்டும். பூமி நாள் ஒன்றுக்கு ஒருமுறை தன்னைத்தானே சுற்றுகிறது, இதுவே ஒரு நாள். சுமார் 365 நாள்களுக்கு ஒருமுறைசூரியனைச் சுற்றுகிறது இது ஆண்டு. இந்த இரண்டு இயக்கம் தவிர பம்பரம் தலை ஆடுவது போல் வேறு ஒரு இயக்கம் பூமிக்கு உள்ளது. இதனை ஆங்கிலத்தில் precession  எனவும் இந்திய வானவியல்பாரம்பரியத்தில் அயன சக்கிரம் எனவும் கூறுவர். (ஜோதிடர் கூறும் அயன அம்சம் இல்லை). இதன் காரணமாக தான் இரண்டாயிரம் வருடம் முன்பு இருந்த நிலையில் ஜனவரி 14 அன்று உத்தராயணம் நிகழாமல்டிசம்பர் 21 அன்றே நிகழ்ந்து விடுகிறது.

கற்கால பழங்குடி மக்கள் இரவு வானில் சூரியன், சந்திரன் முதலிய வற்றின் இயக்கத்தை உற்று நோக்கி அறிவியல் பூர்வமாக வானியல் அடிப்படையில் உருவான நாட்காட்டி காலப்போக்கில்ஜோதிடர் கையில் வந்தது. ஜோதிடர்கள் ஏன் எப்படி என்ற அறிவு இல்லாமல் அன்று எழுதி வைத்த வாக்கியம் வேதவாக்கியம் என்று கூறிக்கொண்டு வான இயக்கம் மாறி போனதை கண்டும் காணாமல்சென்றதன் விளைவு தான் ஜனவரி 14 அன்று தை முதல் நாள் எனவும் உத்தராயணம் எனவும் தப்பும் தவறுமாக இன்றும் விடாப்பிடியாக கூறி வருகிறோம். இதன் காரணமாக “ஆடிப் பட்டம் தேடி விதை”போன்ற பழமொழிகளில் உள்ள காலம் நமது சீர்திருத்தமில்லா நாள்காட்டியில் பொருந்திவராது. உள்ளபடியே தப்பும் தவறும் நம்மிடம் இருக்க, “காலம் கெட்டுவிட்டது; கலி முத்திவிட்டது” எனகளத்தின் மீது பழி போடுகிறோம்.

தமிழ் மற்றும் இந்திய நாள்காட்டிகளில் மட்டும் தான் இந்த சிக்கல் ஏற்படுகிறதா? ஏன் மேலை (ஆங்கில) நாள் காட்டியில் சிக்கல் இல்லை என கேள்வி எழுப்பலாம். ஆங்கில நாட்காட்டியும் சுமார்இரண்டாயிரம் வருடம் முன்பு ஏற்படுத்தப்பட்டது. அயன சலனத்தால் காலபோக்கில் ஆங்கில நாள்காட்டியில் பிழை ஏற்பட்டது. எனவே உள்ளபடியே ஆங்கில நாள்காட்டியிலும் இவ்வாறு சிக்கல் ஏற்படத்தான் செய்தது.

ரசியப் புரட்சியை அக்டோபர் புரட்சி என்கிறோம். ஆனால் கொண்டாடுவது நவம்பர் 7இல். ஏன் தெரியுமா? அயன சக்கிர சலனத்தால்தான். இதன் தொடர்ச்சியாக ஆங்கில-ஐரோப்பியநாள்காட்டியும் பிழை கண்டது. ஈஸ்ட்டர் திருநாள் ஞாயிற்றுக்கிழமை தான் ஏற்படவேண்டும். புனித வெள்ளி வெள்ளிக்கிழமை தான் ஏற்படவேண்டும். இவை நிலை தவறியது. எனவே தான் கிரோகோரி எனும்போப்பாண்டவர் ஐரோப்பிய நாள்காட்டியை சீர் செய்தார். அதன் தொடர்ச்சியாக சுமார் பதினோரு நாட்கள் விடுபட செய்து நாள்காட்டி செய்யப்பட்டது. இவ்வாறு சீர்திருத்த பட்ட இன்றைய ஆங்கில நாட்காட்டிஇன்றைய நடைமுறை வான இயக்கத்தோடு பொருந்தி வருகிறது.

புரட்சிக்கு முன்பு ரஷ்யாவில், ஐரோப்பாவில் பயன்படுத்தத் துவங்கி இருந்ததும், பத்தாம்பசலி பிற்போக்கு ஜார் அரசு சீர்திருத்த நாட்காட்டியை பயன்படுத்தவில்லை. கடவுள் கொடுத்தநாள்காட்டியை மனிதன் எப்படி மாற்றுவது என்றிருந்தனர்.. ஆனால் லெனின் புரட்சிக்கு பிறகு செய்த முதல் காரியங்களில் ஒன்று சீர்திருத்த நாட்காட்டியை ஏற்றுக்கொண்டது தான்.

ஆதனால் தான் ரஷ்யப்புரட்சி நடந்தபோது இருந்த பழமை நாள்காட்டியில் அக்டோபர் 26 – எனவே அக்டோபர் புரட்சி எனப் பெயர். ஆனால் புரட்சிக்குப் பிறகு அறிவியல் பூர்வ சீர்திருத்தநாள்காட்டி வந்த பின் நவம்பர் 7. அதனால் தான் அக்டோபர் புரட்சியை நவம்பர் மாதத்தில் கொண்டாடுகிறோம்.

ரஷ்யா புரட்சி போல, இந்திய விடுதலைக்குப் பிறகு நமது நாள்காட்டிகளும்  அறிவியல் பூர்வமாக இருக்க வேண்டும் என்ற அவாவில் திருக்கணித பஞ்சாங்கம் எனும் நாள்காட்டிகள்ஏற்படுத்தப்பட்டன. ஆனால் இந்தியாவில் பழம்பெருச்சாளிகள் பஞ்சாங்கங்கள் கடவுள் கொடுத்த வாக்கியம்  பாரம்பரியம் எதுவும் மாறக்கூடாது எனக்கூறி சீர்திருத்தங்களை தடுத்து வருகின்றனர். கேரளாவில்சுமார் ஐநூறு ஆண்டுகள் முன்பே சீர்திருத்தம் வேண்டும் என வானவியலாளர்கள் கூறியுள்ளனர். 1950களில்  மேகநாத் சாஹா எனும் உலக புகழ் பெற்ற விஞ்ஞானி (இடதுசாரி வேட்பாளராக போட்டியிட்டுவென்று கொல்கத்தா பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர்) இந்திய நாள்காட்டியை சீர்திருத்தம் செய்ய வேண்டும் என முயற்சி செய்தார். இந்தியாவில் உள்ள பல்வேறு நாள்காட்டிகளை ஒருங்கிணைத்துஇந்திய தேசிய நாட்காட்டி தயாரித்தார்.

நடப்பில் உள்ள வானியல் நிலைக்கு ஏற்ப மார்ச் 21 அன்று துவங்கும் படி இந்த நாள்காட்டி ஏற்படுத்தப்பட்டது. “ராஷ்ட்ரிய பஞ்சாங்” எனும் இந்த ‘அதிகர பூர்வ நாள்காட்டி’, சூரிய, சந்திர மற்றும்அயன இயக்கங்களை உள்வாங்கி நாள்காட்டி சீர்திருத்தத்துடன் உருவாக்கப்பட்டது.  வேனில் கால சம இரவு பகல் நாள் ஆகிய மார்ச் 21 அன்று புது ஆண்டு துவங்கும் படி இந்த நாள்காட்டி உள்ளது. ஆயினும்பழமையின் சிறையிலிருந்து விடுபடாத நமது சமூகத்தில் சட்டப்படியான, அலுவல் சார்ந்த இந்திய நாட்காட்டி குறித்து மத்திய அரசு அதிகாரிகளுக்குக் கூட இது தெரியாது என்பது தான் நிதர்சனம். வேடிக்கை.

நாள்காட்டியின் அறிவியல் வரலாறு இப்படி இருக்கும்போது, ஏழாம் அறிவோடு சிலர் தமிழ் புத்தாண்டு ஜனவரி 14 என்பதும் சிலர் இல்லை இல்லை ஏப்ரல் 14 தான் என்பதும் வேடிக்கையாகஇருக்கிறது. ஏழாம் அறிவை விடுத்து பெரியார் சொன்ன பகுத்தறிவோடு பார்த்தால் உள்ளபடியே தமிழ் நாள்காட்டியை அறிவியல் ரீதியில் சீர்திருத்தம் செய்து புத்தாண்டு என்பது பின்பனி காலமான டிசம்பர் 21/22அல்லது இளவேனில் துவக்கமான மார்ச் 21/22 என்று தான் மாற்ற வேண்டும்.

சில நகைக் கடைக்கார்கள் புதிதாக தங்கம் வாங்குவோர் ஏமாற்றப்படாமல் இருக்க “புரட்சி போராட்டம்” நடத்துவது போல தை ஒன்று அல்லது சித்திரை ஒன்று என மல்லுகட்டி போராடுவதும்போலியான செயலாகத்தான் கருத தோன்றுகிறது. நாள்காட்டியில் மாற்றம் வேண்டும் எனவும், பழம் தமிழர்கள் தை முதல் நாளை – உத்தராயணம் தினத்தை தான் ஆண்டின் துவக்கம் என கொண்டார்கள் என தீரஆராய்ந்து தெளிவாக கூறிய “தமிழ் அறிஞர்களுக்கு” அறிவியல் தெரிந்திருக்கும். எனவே உத்தராயணம் உள்ளபடியே இன்று பின்பனி காலமான டிசம்பர் 21 இல் தான் ஏற்படுகிறது என ஏன் அரசின் கவனத்திற்குகொண்டு வரவில்லை என்ற கேள்வி எழும்புகிறது. பிற்போக்கு ஜோதிடர்களுடன் சமரசமா?  தமிழ் மரபில் உத்தராயணம் தான் சரியான ஆண்டின் துவக்கம் என கொள்வதாக இருந்தாலும் தை முதல் நாளைடிசம்பர் 21க்கு மாற்றி, மேகநாத் சாஹா போல அறிவியல் பூர்வமான நாள் காட்டியில் செய்யாமல் ஜனவரி 14 ஐ தேர்வு செய்வது அரை கிணறு தாண்டிய செயல்தான்.

கட்டுரையாளர்:

விஞ்ஞானி. த.வி.வெங்கடேஸ்வரன்

tvv123@gmail.com

நன்றி: விழுது- இருமாத கல்வி இதழ் (ஜன-பிப்.2016)

Leave a Reply

Top